தோசை, அப்பளம், பூரி மீந்து போனால் மறுநாள் அதை சாப்பிடத் தகுந்ததாக மாற்ற சூப்பர் டிப்ஸ்!

 இல்லை... இப்போது நாங்கள் பேசவிருப்பது மீந்து போன தோசையைப் பற்றி! தோசை மீந்து போனால் நாம் என்ன செய்வோம்?
தோசை, அப்பளம், பூரி மீந்து போனால் மறுநாள் அதை சாப்பிடத் தகுந்ததாக மாற்ற சூப்பர் டிப்ஸ்!

இட்லி மீந்து போனால் அதை இட்லி உப்புமாவாகச் செய்து சாப்பிடலாம். இந்த கான்செப்ட் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்தாலும் கூட சூர்ய வம்சம் படத்தில் தேவயானி வந்து தான் பலருக்கு இட்லி உப்புமா செய்யக் கற்றுக் கொடுத்ததாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மைக்குப் புறம்பான செய்தி. ஏனெனில் உப்புமா என்ற வஸ்து சாதவாகனர்கள் காலத்தில் இருந்தே இந்துஸ்தானத்தில் புழக்கத்தில் இருக்கிறது என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் கூட உண்டு. சரி அந்தக் கதை இப்போது வேண்டியதில்லை. அட உலகமே ஒரு குளோபல் வில்லேஜ் ஆனபிறகும் மீந்த இட்லியை வைத்து இட்லி உப்புமா தான் செய்து சாப்பிட்டாக வேண்டுமா? இட்லி உப்புமாவெல்லாம் ஓல்ட் ஃபேஷன் என்று நினைப்பவர்கள் இட்லி மஞ்சூரியன் செய்தோ, அல்லது இட்லி 65  செய்தோ சாப்பிடலாம். அட... இதெல்லாம் நாங்கள் ஏற்கனவே செய்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது தானே? இதை நீங்கள் வேறு சொல்ல வேண்டுமா? என்கிறீர்களா? 

இல்லை... இப்போது நாங்கள் பேசவிருப்பது மீந்து போன தோசையைப் பற்றி!

தோசை மீந்து போனால் நாம் என்ன செய்வோம்?

இட்லியையாவது உப்புமா, மஞ்சூரியன், இட்லி 65 என்று பலவிதங்களில் உருமாற்றி உள்ளே தள்ளலாம். ஆனால் தோசையை இப்படியெல்லாம் செய்தால் அது காய்ந்து வறவறப்பாகி தொண்டையைப் பதம் பார்த்து விடுமே! ஸோ... நோ... சான்ஸ். தோசை மீந்தால் அதை அப்படியே நாய்க்கோ, காக்கா, குருவிக்கோ வைக்க வேண்டியது தான். இதில் என்ன வருத்தம் என்றால்... சில நேரங்களில் காய்ந்த தோசையை காக்கா, குருவிகள் கூடத் தீண்டுவதில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.

சரி அப்போ காய்ந்த தோசை வேஸ்ட் தானா என்றால்... இல்லை.. அதையும் மீண்டும் சாப்பிடத்தக்க வகையில் மாற்றலாம். அது எப்படி என்பதற்கான டிப்ஸைத்தான் இப்போது நாங்கள் சொல்லப் போகிறோம்.

தோசையை சுடச்சுட சாப்பிடுவதாக இருந்தால் மட்டுமே கிறிஸ்பியாக மெலிதாக ஊற்ற வேண்டும். ஒருவேளை தோசை மீந்து விட சான்ஸ் இருக்கிறது என்று முன்கூட்டியே உங்களால் கணிக்க முடிந்தால் ஸ்பெஷல் தோசை, ரோஸ்ட் எல்லாம் வேலைக்காகாது. தோசைகளை மெல்லிய ஊத்தாப்பங்களாகவோ அல்லது கல் தோசைகளாகவோ ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சாப்பிட்ட பிறகு மீந்து போன தோசைகளை ஹாட்பாகில் எடுத்து வைத்துக் கொண்டு மறுநாள் மீண்டும் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி சூடு செய்து இறுக மூடிய பாத்திரத்தில் 10 நிமிடங்கள் ஆவி கட்டி பிறகு வெளியில் எடுத்தால் தோசை சாஃப்டாக இருக்கும். இப்போது அதை சாம்பாரிலோ, சட்னியிலோ முழுக்காட்டிச் சாப்பிடும் போது அது நிச்சயம் தொண்டையை அறுக்காது. டேஸ்டாகவுமிருக்கும். மொத்தத்தில் தோசை வீணாகாது. அது தானே நமக்கு வேணும்.

இதை மற்றொரு முறையிலும் செயல்படுத்திப் பார்க்கலாம். பழைய காலத்தில் கம்பு மற்றும் கேழ்வரகு மாவில் தோசைகளை சுட்டு அடுக்கும் போது சுடச்சுடச் சுட்டு ஈரத்துணியில் அடுக்குவார்கள். அந்த தோசைகளை மறுநாளும் வைத்து உண்ணும் வழக்கம் அப்போது இருந்திருக்கிறது. இப்போது அந்த வழக்கமெல்லாம் மறைந்து விட்டாலும் மீந்து போன தோசையை மீண்டும் பயன்படுத்த இது ஒன்று தான் அன்றும் இன்றும் எளிமையான டிப்ஸ்.

சரி இப்போது அப்பளம் மீந்து போனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

நமுத்துப் போன அப்பளங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் துறுவிய தேங்காய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு சிறு துண்டு இஞ்சி, மினி சைஸ் கோலிக்குண்டு அளவு புளி, 3 பச்சை மிளகாய் பிளஸ் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் சூப்பரான அப்பளத் துவையல் ரெடி. இதை இட்லி, தோசை, தயிர்ச்சாதம் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். 

சரி அப்பளத்தை இப்படி செய்து ஒப்பேற்றி விடலாம். சரி பூரி மீந்து போனால் என்ன செய்வது? பூரியை மடித்து அதில் இனிப்பு போளிக்காக தயார் செய்வோமே அந்தப் பூரணத்தை வைத்து (கடலைப்பருப்பு + வெல்லம் + ஏலக்காய் சேர்த்து மசித்தது) டூத் பிக்கால் குத்தி மூடி தோசைக்கல் அல்லது அவனில் வைத்து சூடேற்றிச் சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.

இந்த மூன்று டிப்ஸையும் ஃபாலோ செய்து பாருங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? இல்லையா? என்று கமெண்ட்டில் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com