பட்டாசு வெடிக்கிறீங்களோ இல்லையோ தீபாவளி லேகியம் செய்து சாப்பிட மறக்காதீங்க!

குறைந்த பட்சம் இதையும் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துகிறோம் என்று இறங்காமல்.. கூடுமான வரை வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள். நல்ல மனம் படைத்தவர்கள் என்றால் உங்கள் நண்பர்களுக்கும் தரலாம்.
பட்டாசு வெடிக்கிறீங்களோ இல்லையோ தீபாவளி லேகியம் செய்து சாப்பிட மறக்காதீங்க!

முன்பெல்லாம் தீபாவளிக்கு வீட்டுப் பலகாரங்கள் தான் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நகரின் பிரபலமான பட்சணக் கடைகள் அனைத்துமே தீபாவளி ஸ்பெஷல் பட்சணங்கள் செய்து அவற்றைப் பெரும் விளம்பரங்கள் வாயிலாக ஆரவாரமாக விற்பனை செய்யவும் தொடங்கி விட்டதால் தீபாவளிக்கு முதல் நாள் வரை அலுவலகப் பணிகளில் மூழ்கிக் கிடக்கும் இல்லத்தரசிகளில் பலர் மறுநாள் அதிகாலையில் எழுந்து மாங்கு மாங்கென்று பலகாரம் சுட்டுக் கொண்டிருக்க மலைத்துப் போய் பேசாமல் கடைகளில் ஆர்டர் செய்து தாங்களும் ருசித்து அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்து மகிழ்ந்து கொள்கிறார்கள். பேஷ்...பேஷ் இது நல்ல ஐடியாவா இருக்கே என்று தோன்றினாலும், என்ன இருந்தாலும் கடைகளில் பலகாரம் சுடுபவர்களுக்கு வீட்டு மனிதர்களுக்கு இருக்கும் ஐ மீன் அம்மா, பாட்டிகளுக்கு இருக்கும் ஆரோக்ய மனப்பான்மை இருக்குமா என்பது சந்தேகம் தான் இல்லையா? அதற்காக கடைப் பட்சணங்களை ஒரேயடியாகத் தவிர்த்து விடவும் முடியாதே! அம்மாதிரியான நேரங்களில் நமக்கு ஆபத்பாந்தவனாக கை கொடுப்பவை தான் தீபாவளி லேகியங்கள்.

அதனால்... தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கிறீர்களோ இல்லையோ தயவு செய்து லேகியம் செய்து சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள். குறைந்த பட்சம் இதையும் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துகிறோம் என்று இறங்காமல்.. கூடுமான வரை வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள். நல்ல மனம் படைத்தவர்கள் என்றால் உங்கள் நண்பர்களுக்கும் தரலாம்.

தேவையான பொருட்கள்:

ஓமம் - 150 கிராம்
மிளகு - 75 அல்லது 100 கிராம்
கண்டந்திப்பிலி - 10 குச்சி
அரிசி திப்பிலி - 2 டீஸ்பூன் 
சுக்கு - 2 துண்டு (நசுக்கியது)
சித்தரத்தை - அரைத்துண்டு (நசுக்கியது)
கிராம்பு - 10
ஏலக்காய் - 10 
ஜாதிப்பத்திரி - 4 இதழ்கள்
ஜாதிக்காய் - 1 (உடைத்து உள்ளிருக்கும் விதையில் பாதி எடுத்துக் கொள்ளவும்)
வெல்லம் - 1 கப் ( தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கல், மணல், தூசு நீக்கி வடிகட்டிக் கொள்ளவும்) கிடைக்கும் பாகு 1 டம்ளர் அளவுக்கு இருக்க வேண்டும்.
நல்லெண்ணெய் - 150 மில்லி
நெய் - 50 மில்லி

செய்முறை:

அடுப்பை ஆன் செய்து... கனமான வாணலியை ஏற்றி அதில் வெறுமே மேற்கண்ட பொருட்களைப் போட்டு வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

இவற்றில் ஜாதிப்பத்திரி மற்றும் ஏலக்காயை வறுக்கத் தேவையில்லை/ வறுக்காமல் அப்படியே போட்டுக் கொள்ளலாம். ஏலக்காயை கடைசியாக லேகியம் கிளறும் போது சேர்த்தால் போதும், அப்போது தான் வாசமாக இருக்கும்.

பொருட்கள் அனைத்தையும் நன்றாகச் சூடு உரைக்கும் அளவுக்கு வறுத்துக் கொட்டி ஆற விட்டுப் பின் நைஸாக அரைக்கவும். அரைத்தெடுத்த பொடி கொஞ்சம் திப்பித் திப்பியாகத்தான் இருக்கும். அதையும் நன்கு அரைபடச் செய்ய வேண்டுமானால் அரைத்த பொடியை நன்றாகக் கொதிக்க வைத்த வெந்நீர் அரை டம்ளர் ஊற்றி சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைத்து விட வேண்டும். நன்கு ஊறிய பிறகு அரைத்தால் நைஸான பக்குவம் கிடைக்கும். பிறகு மிக்ஸியில் இருப்பதை கனமான இலுப்பைச் சட்டிக்கு மாற்றி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகும் வாசம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். லேகியம் கிளறுவதில் இது தான் சவாலான விஷயம். கை விடாமல் கிளறிக் கொண்டே இருந்தால் தான் பக்குவம் மாறாமல் லேகியம் கெட்டிப் படாமல் இருக்கும். லேகியம் கெட்டிப் படும் போது முன்னதாக டம்ளரில் எடுத்து வைத்த வெல்லப்பாகுவை அதனுடன் சேர்த்து மீண்டும் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வெல்லப்பாகு நன்கு கலந்து மாவு கெட்டிப்படும் போது நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறவும். நல்லெண்ணெய் லேகியத்துக்கு தளதளவென்ற மிகச்சிறந்த அமைப்பையும், வடிவத்தையும் தரும். (லேகியம் கிளறும் போது ஒரு விஷயத்தை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலி நன்கு அகலமான பெரிய வாணலியாக இருக்க வேண்டும். அப்போது தான் எண்ணெய், நெய் விட்டுக் கிளறும் போது அது தெறித்தால் கையில் சிதறாமல் தடுக்க முடியும்.)

சரி, இப்போது நல்லெண்ணெயை அடுத்து நெய் விட்டுக் கிளறலாம். அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொண்டு நிதானமாக நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். கொஞ்சம் நேரமாகத்தான் செய்யும். ஆனால் சிரமம் பாராமல் செய்து எடுத்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரைக்கும் கெட்டுப் போகாது. நீங்கள் எப்போதெல்லாம் அஜீரணமாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் எடுத்து சாப்பிட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.

லேகியத்திற்கும் அல்வா பக்குவம் தான். கட்டக் கடைசியாக நெய் பிரிந்து வரும் பக்குவத்தில் அடுப்பை அணைத்து ஆற விடலாம். இப்போது வாணலியில் நெய் அதிகமாக இருப்பது போலத் தோன்றினாலும் பரவாயில்லை அதையும் லேகியத்தை பாட்டிலில் எடுத்து வைக்கும் போது பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்... அப்போது தான் லேகியம் பூஞ்சை பிடிக்காமல் இருக்கும். அதோடு அதிகப்படியான நெய் மீந்து விட்டதாக உணர்ந்தால் அவற்றை ஓமம் மற்றும் மிளகுக் குழம்பு வைக்கும் போது இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி வாசகர்கள் அனைவரும்மும் தினமணி.காமின் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்!


Photo Courtesy: selliyal.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com