சரண்யா பொன்வண்ணனின் D சாஃப்ட் ஃபேஷன் ஸ்கூல்!

நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு நடிப்பு தொழில். அதைத்தாண்டியும் அவரது வாழ்வில் அவருக்கு மிகப்பிடித்த விஷயம் ஒன்றிருக்கிறது என்றால் அது அவரது D சாஃப்ட் ஃபேஷன் ஸ்கூல்
சரண்யா பொன்வண்ணனின் D சாஃப்ட் ஃபேஷன் ஸ்கூல்!

நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு நடிப்பு தொழில். அதைத்தாண்டியும் அவரது வாழ்வில் அவருக்கு மிகப்பிடித்த விஷயம் ஒன்றிருக்கிறது என்றால் அது அவரது D சாஃப்ட் ஃபேஷன் ஸ்கூல் தான். வளசரவாக்கத்தில் இருக்கும் டிஸைனிங் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி பேஷன் ஸ்கூலில் சரண்யாவே ஓய்வு நேரங்களில் வந்து பாடம் எடுக்கிறாராம். 2014 ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை பத்துக்கும் மேலான மாணவிகள் குழுவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். கற்றுக் கொண்ட பழைய மாணவிகளிடமிருந்தே புது பேட்சுக்கான ஆசிரியர்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.

டிஸைனருக்கு ஆடைகளை வடிவமைப்பது மட்டும் தான் வேலை... தைப்பதெல்லாம் டெய்லர்களின் வேலை என்றிருக்கையில் ஒரு டிஸைனரின் கனவை டெய்லரால் நனவாக்க முடியாத போது அந்த ஆடை வடிவமைப்பில் திருப்தி கிடைப்பதில்லை. கனவு காண்பவர்களுக்கு நிச்சயம் அந்தக் கனவை தாங்களாகவே நனவாக்கிக் கொள்ளும் திறனும் இருக்க வேண்டியது அவசியம். டி சாஃப்டின் தாரக மந்திரம் இது தான். இங்கு வந்து டிஸைனிங் கற்றுக் கொள்ளும் மாணவிகளுக்கு நிச்சயம் தையல் கலையும் கற்பிக்கப்படுகிறது. டிஸைனர்களே இங்கே தைக்க முடிவதால் அவர்களால் தாங்கள் கற்பனை செய்த ஆடைகளை தையலிலும் கொண்டு வர முடிகிறது. என்பது தான் எங்களது ஃபேஷன் ஸ்கூலின் வெற்றி என்கிறார் சரண்யா.

இவரது ஃபேஷன் ஸ்கூலின் ஸ்பெஷல் என்ன?

கோர்ஸ் முடித்துக் கொண்டு சென்ற பழைய மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் சரண்யாவிடமும் அவரது பிற ஆசிரியர்களிடமும் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆசிரியர், மாணவிகளிடையே நட்புறவை வளர்த்து அவர்களை எந்தவிதமான மனச்சங்கடங்களும் இன்றி தன்னம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதே டி சாஃப்டின் ஸ்பெஷல்.

உண்மையில் சரண்யா பொன் வண்ணன் அவரது நடிப்பைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் அவரது ஃபேஷன் ஸ்கூல் பற்றிப் பேசுவதில் தான் ஆனந்தம் கொள்கிறார்.

சரண்யாவுக்கு எப்படி வந்தது இந்த ஃபேஷன் ஸ்கூல் ஆர்வம்?

சரண்யா தமிழ்த்திரையுலகில் நாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டங்களில் அவருக்கு ஃபேஷன் பற்றியெல்லாம் பெரிதாக அக்கறை இருந்ததில்லை என்கிறார். அவர் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களுக்கும் அவரது அம்மாவே தன் கையால் டிஸைன் செய்த உடைகளைத் தயாராக எடுத்துத்தருவாராம். சரண்யாவுக்கு அவை எப்படி உருவாகின என பெரிதாக கவனமிருந்ததில்லை. அம்மா தனக்காக அனைத்தையும் தைத்து தயாராக நீட்டும் ஆடைகளையும், அக்ஸசரிஸையும் அணிந்து கொண்டு அப்படியே விழாவுக்குச் செல்ல மட்டும் தான் ஆரம்பத்தில் தனக்கு தெரிந்திருந்தது என்று கூறும் சரண்யா... திடீரென ஒரு காலகட்டத்தில் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் அவர் இவ்வுலகை விட்டே மறைய வேண்டிய நிலை வந்ததும் மனதளவில் மிகுந்த துயரம் வந்து சேர்ந்திருக்கிறது. அம்மா உயிருடன் இருக்கையில் பலமுறை சரண்யாவிடம் ஃபேஷன் தொழில்நுட்பம் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும் அப்போதெல்லாம் கற்றுக் கொள்ளாமல் போனோமே என்று வருந்தியவர் அம்மா இறந்த பின் அவரது நினைவில் உருகிப் போய் அவர் ஆசையை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியோடு தூசி பிடித்துக் கிடந்த அம்மாவின் தையற்கருவிகளை எல்லாம் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார். இதற்காக முறையான பயிற்சி எடுத்துக் கொண்ட பின் இன்று வரையிலும் கூட சரண்யா தனக்குத் தேவையான, தன் மகள்களுக்குத் தேவையான அத்தனை உடைகளையும் கூட அவரே தனது கரங்களால் தானே வடிவமைத்துப் பயன்படுத்துவது வழக்கம் என்கிறார்.

நடிப்பு தாண்டியும் நடிகைகள் தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு அதை பிறருக்கும் போதிக்க முன்வருவது அபூர்வம். அந்த வகையில் சரண்யா வித்யாசமான நடிகை என்பதைக் காட்டிலும் பாராட்டப்பட வேண்டிய பெண்மணி என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com