அவனருளாலே அவன் தாள் வணங்கி

ஒருவன் செல்வத்தின் மீது பற்று கொண்டு ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்தான்.
அவனருளாலே அவன் தாள் வணங்கி


ஒருவன் செல்வத்தின் மீது பற்று கொண்டு ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்தான். பல சொத்துக்களை வாங்கிக் குவித்தான். அவன் ஆசைப்பட்டதற்கு அதிகமாகவே அவனிடம் செல்வம் சேர்ந்து விட்டது. ஆனால், அவன் மனம் ஏனோ திருப்தியடையவே இல்லை. ஏதோ ஒரு வெறுமையை தனக்குள் அவன் உணர்ந்தான். அந்த வெறுமை உணர்வு அவன் மன அமைதியைக் கெடுப்பதாக உணர்ந்தான். இவ்வளவு செல்வங்கள் குவிந்தாலும், தன்னிடம் எல்லாம் இருந்தாலும் தன் மனதில் ஏதோ ஒன்று இல்லாதது போன்ற ஒரு வெறுமை உணர்வு ஏன் வந்தது? என்று தனக்குள் யோசித்தான். முடிவில் அவன் மனதில் அதற்கான காரணம் என்ன என்பது புலப்பட்டது. தன்னுடைய இந்த அமைதியற்ற வெறுமைக்குக் காரணம் செல்வத்தின் மீது தான் கொண்ட ஆசையினால்தான் என்ற முடிவுக்கு வந்தான். இனி அமைதியடைய என்ன செய்யலாம் என்று பல நாட்களாகச் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். தான் அடைந்த இந்த செல்வத்தையெல்லாம் ஒரு துறவிடம் கொடுத்து விட்டு மன நிம்மதியை அடைந்திடலாம் என்று தீர்மானித்தான். தனது எல்லா ஆஸ்திகளையும் விற்று செல்வமாக்கி ஒரு மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டு பல இடங்களைத் தேடி அலைந்தான். அவன் கண்ணுக்கு உண்மையானத் துறவி யாரும் தென்படவேயில்லை. 

பிறகு ஆலோசனை செய்து, துறவிகள் யாரும் ஊருக்குள் இருக்க மாட்டார்கள், எனவே அருகேயுள்ள வன்திற்குள் போய்த் தேடுவோம் என்று முடிவு செய்து காடு மேடெல்லாம் அலைந்து ஒரு உண்மையானத் துறவியைக் கண்டு பிடித்தான். தான் கொண்டு வந்த மூட்டையை அவர் காலடியில் போட்டான். ஐயா, குருவே நான் கஷ்டப்பட்டு உண்டாக்கிய செல்வங்கள் அனைத்தும் இந்த மூட்டையில் இருக்கின்றன. இதை எடுத்துக் கொண்டு, என்னை சீடனாக ஏற்று மன நிம்மதியை அடையும்படிக்கு அருளுங்கள் என்று பணிந்து நின்றான். அவன் குனிந்த தலையை நிமிர்த்தி பார்த்த போது துறவியைக் காணவில்லை. அவரோ இவன் கொண்டுவந்த மூட்டைத் தூக்கிக் கொண்டு வெகு தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தார். அடப்பாவி இவனைப் போய் உண்மையான நல்ல துறவி என்று எண்ணி ஏமாந்து விட்டோமே என்று திகைத்து நின்றான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாகத் துறவியைத் துரத்திக் கொண்டு ஓடினான். 

துறவியோ ஏற்கனவே தொலை தூரத்திற்குச் சென்று விட்டபடியினால், இவனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. முடிவில் கண்களை விட்டே மறைந்து விட்டார். இவனுக்கோ களைப்பு மேலிட்டது. தாகம் வாட்டியெடுத்தது. சரி அந்தத் துறவியின் குடிலுக்குப் போய் தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்போம், என்று திரும்பி வருகிறான். அங்கு வந்த போது திடுக்கிட்டான். அங்கு துறவி குடிலுக்கு முன் உள்ள மரத்தடியில் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கிடந்தார். மூட்டை கீழே கிடந்தது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது துறவி மெதுவாகக் கண்களைத் திறந்தார். அவனைப் பார்த்துக் கேட்டார், நீ இந்த செல்வத்தால் நிம்மதியே இல்லை, இது வேண்டாம் என்றுதானே என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தாய். 

பிறகு ஏன் என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தாய்? அப்படியானால் இந்தச் செல்வத்தின் மீதுள்ள பற்று இனியும் நீங்கவில்லை என்றுதானே பொருள்? எனவே உமது செல்வத்தை எண்ணி சரி பார்த்து எடுத்துக் கொண்டு சென்று விடும். உடமைப் பொருள் எதன் மீதும் பற்று கொள்ளாமல் இருப்பதே அமைதியடைவதற்கு ஒரே வழி என்றார். அவன் பொத்தென்று அவர் காலடியில் விழுந்து பற்று விடுத்து பற்றற்றானைப் பிடிக்க வழிகாட்டுங்கள் குருவே என்று அழுதான். அவர் அவனைத் தேற்றி ஞானம் பெற உபதேசித்தருளினார். பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. -திருக்குறள் 350. ஆசை கொள்வது என்பது உயிர்களனைத்திற்கும் பொது. இதில் சிற்றுயிர், பேருயிர் என்றெல்லாம் பேதம் கிடையாது. உயிர்களனைத்தும் ஏதோ ஒரு விஷயத்தின் மீது எப்பொழுதும் ஆசை வைத்துக் கொண்டே இருக்கின்றன. அதை அடைவதற்கு வெவ்வேறு விதங்களில் பாடுபடுகின்றன. 

இதையே வாழ்க்கை முயற்சி என்று சொல்கிறோம்.  ஆசையே இல்லை என்றால் முயற்சி எதுவும் நிகழாது. எனவே பலவிதமான முயற்சிகளும், அவற்றிற்குத் தூண்டுகோலாக எண்ணிறந்த ஆசைகளும் இருந்து கொண்டேயிருக்கின்றன.  இந்த ஆசையையே பித்து என்றும், பற்று என்றும் கூறுவார்கள். இறைவனுக்கே பித்து உண்டு. பக்தர்கள் அன்பின் மீது அவர் பித்து கொள்கிறார். எனவேதான் பித்தா என்கிறார்கள்.  அது பக்தர்கள் உய்யும் பொருட்டேயாகும். ஆனால் மனிதனோ பொருள் வேண்டும் பதவி வேண்டும், போகம் வேண்டும், பேரும் புகழும் வேண்டும் என்று பித்துப் பிடித்துப் பேயாய் அலைகிறான். ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பித்து ஒன்று உண்டு, அது என்ன தெரியுமா? அதுதான் அருள் பித்து. அது பரமாத்மா என்கிற கடவுள் மீது வைக்கும் பித்தாகும். பொருள் பித்து மனிதனை துன்பத்தில் தள்ளி கீழ் நிலையில் அழுத்தும். 

அருள் பித்தோ மனிதனைப் படிப்படியாக மேல் நிலைக்கு உயர்த்தும். பொருள் பித்தை பாசம் என்பார்கள் பாசத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால் பதியாகிய இறைவன் மேல் அருள் பித்து கொள்ள வேண்டும். அதற்கு அந்தப் பரம்பொருளின் கருணை வேண்டும். சற்குருவின் அனுக்கிரகம் வேண்டும். நல்லாரிணக்கம் எனும் பாதுகாப்பு வேண்டும். இவையனைத்தையும் தொகுத்து கருணை என்பார்கள். 

அப்படிப்பட்ட பரம்பொருளின் கருணையைப் பயன்படுத்தி அவர் மேல் பித்து கொள்கிறவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுவது திண்ணம். அக்கடலைக் கடந்து முக்தியெனும் கரையினில் ஏறுவது சுலபம். எனவேதான் தாயுமானவ சுவாமிகள், 'ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறு ஒன்றில் பாசம் வையேன்' என்பார். அதுவும் எவ்வாறு என்றால், 'நின் கருணைப் பாங்கால் பராரபரமே' என்கிறார். 

இதையே மாணிக்கவாசகர் 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்பார். ஆகவே நண்பர்கள் அனைவருக்கும் அருள் பித்து வாய்க்குமாறு, அந்தப் பரம்பொருளின் கருணையைப் பொழியுமாறு பரம்பொருளிடமே வேண்டிக் கொள்கிறேன். 'நின் கருணைப் பாங்கால் பராரபரமே', 'நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்',  'ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்'.

கோவை பாலகிருஷ்ணன் - 9894012434

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com