15. ரகுபதி ராகவ ராஜாராம்

பாவம், சத்தியமூர்த்தி வீட்டிலே விளக்கு ஏத்த, அடுப்பு மூட்ட லேடீஸே இல்லடா. ஆம்பளை குக்காம்.
15. ரகுபதி ராகவ ராஜாராம்

‘சிவசாமி, இன்னிக்கு வெங்கட்நாராயணா ரோடிலே யாரைப் பார்த்தேன் தெரியுமா?’

‘தெரியாது அண்ணா’.

‘ஆமா, உனக்கு எப்படிடா தெரியும்? ஆனா, இன்னும் சில வருஷத்திலே, ஞான திருஷ்டியைக் கொடுக்கும் ‘கூகுள் விஷன்’னு ஒண்ணை நம்ம சுந்தர் பிச்சை கொண்டுவந்தாலும் வரலாம். நான் பாத்தது சத்தியமூர்த்தி சாரை! தியாகி சத்தியமூர்த்திடா. உனக்கு அவரைத் தெரியுமா?’

‘என்னண்ணா இது? கப்பலோட்டிய தமிழன் படத்திலே, ராஜ துரோக குற்ற வழக்கு விசாரணையின்போது, ‘உமக்கு சிதம்பரம் பிள்ளையையும், சுப்ரமணிய சிவாவையும் தெரியுமா?’ என்று ஆங்கிலேய நீதிபதி கேட்பார். பாரதியாகவே சினிமாவில் மாறிய நடிகர் எஸ்.வி. சுப்பையா விறைப்புடன், ‘சூரிய, சந்திராளைத் தெரியுமா?’ன்னு கேக்கிற மாதிரி இருக்குன்னு பதிலடி குடுப்பார். அதுமாதிரி, தியாகி சத்தியமூர்த்தியைத் தெரியுமான்னு கேக்கறேளே அண்ணா?’

‘ஹூம்’ இல்லாட்டி, ‘ஹூஹூ’ம்னு மணிரத்தினப் பட டயலாக் மாதிரி, ரத்தினச் சுருக்கமா பதிலைச் சொல்லக் கூடாதா? இவ்வளவு நீள பதிலா? அதை விடு. அவருக்கு ஒரு ப்ராப்ளமாம்’.

‘என்ன ப்ராப்ளம் அண்ணா? நூல் நூக்கிற ராட்டை, தக்களி ஏதான காணுமா? அதை எல்லாம்கூட திருடறாங்களான?’

‘அடேய். சும்மா இருடா. ப்ராப்ளம் அவரோட மூணு பிள்ளைங்களைப் பத்தி? அவங்க பேர் என்ன தெரியுமா?’

‘ம்? சொல்லட்டா? ரகுபதி, ராகவன், ராஜாராம்’.

‘எத்தன்டா நீ! ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு காந்திக்குப் பிடிச்சதாச்சே. யாருடா எழுதினது? டாகூர்தானே?’

‘தப்பு அண்ணா. வாலி எழுதின பாட்டை எல்லாம் கண்ணதாசன் எழுதினதுன்னு அடிச்சுவிடற மாதிரி சொல்லிட்டேள். ரகுபதி ராகவவை எழுதினது டாகூர் இல்லை. விஷ்ணு திகம்பர் பலூஸ்கர்னு சொல்றதுண்டு..’

‘சரி அவரே இருந்துட்டுப் போகட்டும். சிவசாமி, கூகுளே உங்கிட்டே பிச்சை வாங்கணும்போல இருக்கு. சத்தியமூர்த்தியோட பிரச்னை என்னன்னா, அவரோட மூணு பிள்ளைகளுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலே. பெரியவனுக்கும் மத்தியமனுக்கும் முப்பத்து ரெண்டு வயசு. கடேசி ராஜாராமுக்கு முப்பது’.

‘அப்போ ரகுபதியும் ராகவனும் ரெட்டையா? இல்லாட்டி ஒரே வயசு எப்படி இருக்கும்?’

‘அடேய், உன்னோட மண்டைக்குள்ளே செரிப்ரம், செரிபெல்லம் பூரா கற்பூரம்டா. நெருப்புக்குப் பக்கத்திலே போகாதே. மண்டை சட்னு பத்திக்கும்’.

‘என்னண்ணா இது? கேலி பண்ணாதீங்கோ!’

‘சரி, விஷயத்துக்கு வரேன். ரகுபதியும் ராகவனும் ஒரு நிமிஷ இடைவெளியிலே பிறந்தவங்களாம். அவங்களிலே யாரு பெரியவன், யாரு சின்னவங்கிறதிலே ஒரு குழப்பமாம். முதல்லே வந்தது முட்டையா, கோழியாங்கிற மாதிரி. கல்யாணப் பேச்சை எடுத்தா, ‘அவன்தான் முதல், நான் அடுத்தது’ன்னு ரெண்டு பேரும் ஒரே பாட்டாப் பாடி, தள்ளிப் போட்டுண்டு இருக்காங்களாம். இந்த சண்டையிலே குளிர் காஞ்சிண்டு இருக்கிற நம்பர் த்ரீ ராஜாராம், ‘அப்பா! மொதல்லே ரெண்டு அண்ணிகள் வந்து சேரட்டும். அதுவரை நான் அவிழ்த்துவிட்ட கழுதையா ஜாலியா இருந்துட்டுப்போறேன்னு’ சொல்றானாம்.

‘அண்ணா! அம்புலி மாமா கதையிலே வர மந்திராபுரி இளவரசர்கள் சூரியசேனன், சந்திரசேனன், சுக்கிரசேனனுக்கு, இந்திராபுரி இளவரசிகள், வீரவல்லி, சூரவல்லி, ஆரவல்லின்னு மூணு பேரை ஒரே சமயத்திலே கல்யாணம் பண்ணிவெச்ச மாதிரி, நம்ம ‘கல்யாணமாலை’ ஏதான செய்யமாட்டாங்களா?’

‘தெரியலேடா. ரகுபதியும் ராகவனும் ரெட்டையர்களானாலும், ஒரே மாதிரி இருக்கமாட்டாங்களாம்’.

‘அப்போ, இரண்டு பேருடைய ஜெனிடிக் மெடீரியலான ஜீனோம் வெவ்வேறயா இருக்கணும்’.

‘சிவசாமி! பொளந்து கட்றடா. ஜீனோமெல்லாம் தெரியுமா உனக்கு? ஜீனோம் வேணா வேறயா இருக்கும். ஆனா ஜாதகம், கீதகம் எல்லாம் ஒண்ணா, வேறயான்னு தெரியலையாம். ஏன்னா, இல்லையாம். ஏதான பாத்து செய்யிடா? பாவம், சத்தியமூர்த்தி வீட்டிலே விளக்கு ஏத்த, அடுப்பு மூட்ட லேடீஸே இல்லடா. ஆம்பளை குக்காம். அவரோட பொண்டாட்டி, காந்திஜி மறைஞ்ச, ஒரு ஜனவரி 30-ம் தேதி பார்த்து கண்ணை மூடினாளாம். பாவம்! சத்தியமூர்த்திக்கு அன்னிக்கு ரெட்டை துக்கம்’.

பதினைந்து நாள் கழித்து, கார்த்திகை அன்று சத்தியமூர்த்தி வந்தபோது, அவர் முகம், மலை மேலுள்ள அண்ணாமலையாரின் பெரிய தீபத்துக்கு அருகில் இருந்ததுபோல பிரகாசித்தது.

‘டாக்டர் சார், என்னோட மூணு பசங்களுக்கும் ஒரே சமயத்திலே கல்யாணம் நிச்சயமாயிடுத்து. ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார்’.

‘அட! அட! அட! மூணு பேருக்குமா? ஒரே சமயத்திலா? அதான் மூணு அட போட்டேன். கங்கிராட்ஸ், சார். எப்படி? ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய்தான் விழும்னு சொல்றது. நீங்க அடிச்ச கல்லிலே மூணா விழுந்திருக்கே!’

‘தேங்க்ஸ், டாக்டர் சார். ஆனா கல்லை விட்டது நான் இல்லே. சிவசாமி சார்’.

‘சிவசாமியா? நெஜமாவா? அவன் கதைதானே விடுவான்? கல்லையும் விடறானா? எங்கிட்டே சொல்லவே இல்லையே? டேய் சிவசாமி, இங்கே வாடா, யார் வந்திருக்கா பாரு?’

கதர் ஜிப்பா, கதர் வேட்டி, கதர் துண்டில் வந்திருந்த சத்தியமூர்த்தி, கதர் ஜோல்னா பையிலிருந்து ‘மெட்ராஸ் வந்த மகாத்மா’ என்ற கையடக்கப் பதிப்பின் பிரதியை பஞ்சாமிக்கு வழங்கினார்.

‘டாக்டர் சார். அப்புறமா படிச்சுப் பாருங்கோ. காந்தி மகான் மெட்ராஸுக்கு பலமுறை வந்திருக்கார். ஒருமுறை, நடந்து போய்க்கொண்டிருந்தவர் திடீரென்று அந்த வழியாகப் போன மயிலாப்பூர் போகிற பஸ்ஸில் ஏறி, அதுல இருந்த பாசஞ்சர்களின் வாயைப் பிளக்க வெச்சிருக்கிறார். ஹிந்தி பிரசார் சபாவிலே சான்றிதழ்களில் கையெழுத்திட்ட அவருடைய பேனா காணாமப் போயிடுச்சாம். பேனா திரும்பி வர்றவரைக்கும், பேனாவால் எழுதமாட்டேன்னு உறுதியாச் சொன்ன மூணாம் நாள், அவர் மேஜைக்கு மந்திரம் போட்ட மாதிரி பேனா திரும்பி வந்ததாம். நாகர்கோவிலில் இருந்து வந்த பெண், ‘பாபுஜி, என் பெயர் மிஸ் பேபி’ன்னு சொன்னபோது, ‘நீங்க லேடிம்மா. பேபி இல்லே’ன்னு ஜோக் அடித்தாராம். இப்படி நிறைய சுவையான விஷயங்கள் இருக்கு’.

மகான் டாபிக்கில் இருந்து மகன் டாபிக்குக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தார். ‘டாக்டர், சார். நான் குடுத்த என்னோட பிள்ளைகளின் விவரங்களைப் பத்திய நோட் புக்கை நீங்க பிரிச்சுப் பார்த்திருக்கமாட்டீங்க. ஆனா சிவசாமி பாத்துட்டு, என்ன சார் இதுன்னு ஆச்சரியப்பட்டார். என் வீட்டு சம்பந்தப்பட்ட எல்லா கடுதாசுகளிலும், காந்தி மகானோட மூணு குரங்கு பொம்மை லோகோ இருக்கும். கண்ணை, காதை, வாயை மூடிண்டு! கெட்டதைப் பார்க்காதே, கேக்காதே, பேசாதேன்னு சொல்லும். சிவசாமி சார் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாராம். ‘எனக்குத் தெரிஞ்ச இன்னொருத்தர்கூட இதே மாதிரிதான். திருப்பாப்புலியூரிலே இருக்கார். அவர் பேரு நேதாஜி நாணான்னு சொல்றது’ என்றார்’. அட, அட, அடன்னு அதிர்ந்துபோனேன். நேதாஜி நாணாவா? அவன் என்னோட ஜெயில் சகா. உப்பு சத்தியாகிரகத்தின்போது ஒண்ணா இருந்தோம். அவனோட விலாசம் இல்லாம, விவரம் இல்லாம நான் ஆலாப் பறந்துண்டு இருந்தேன். சிவசாமி உதவியாலே அந்தப் பழைய கான்டாக்ட் கிடைச்சது. அங்கே போன எனக்கு மகா ஆச்சரியம். நியாயமா மகா, மகா, மகான்னு மூணு ஆச்சரியம் சொல்லணும். சொன்னா நம்பமாட்டேள். நேதாஜி நாணாக்கு கல்யாண வயசிலே மூணு பொண்களாம்’.

‘அப்படிப் போடுங்கோ. நழுவின பழம் வெறும் பாலிலே விழாம மசாலா பாலிலே விழுந்ததா?’

‘சரியாச் சொன்னேள், டாக்டர் சார். அப்புறம் என்ன? கல்யாணப் பேச்சை எடுத்தது. ரகுபதி, ராகவன், ராஜாரமுக்கு, மீனா, ராதா, கீதாங்கிற நாணாவோட மூணு பொண்களைப் பிடிச்சுப் போக, அம்புலி மாமா கதையா கல்யாணங்கள் நிச்சயம் ஆயிடுத்து’.

சிவசாமி தொடர்ந்தான். ‘அண்ணா, இந்த ரெண்டு காந்தியவாதிகளும், மத்த விஷயங்கள் பொருந்தி, மனசுக்கும் பிடிச்சிப்போனதால, ஜாதகங்களை சாய்ஸில் விட்டுட்டாங்க’.

‘டாக்டர் சார். ஜாதகமாவது? பொருத்தமாவது? ஆறு பேருக்குமே ஜாதகங்கள் கிடையாது. நானும் நேதாஜி நாணாவும், அந்த பொம்மைங்கள பாத்தபோது, அதுங்க என்ன சொல்லித்து தெரியுமா?’

‘ஜாதகத்தைப் பார்க்காதே, ஜாதகத்தைக் கேட்காதே, ஜாதகப் பலன்களைப் பற்றிப் பேசாதே’ என்றான் சிவசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com