11. தான் ஆட! தன் தசையும் ஆட!

பி.சி.சொர்க்கார் மாஜிக் ஷோவிலே ஒவ்வொரு பெட்டியைத் திறந்துகொண்டு வரா மாதிரி, ரூமைத் திறந்து ராத்திரி குமாரசாமி வந்தார். இப்போ காலம்பற அடுத்த ரூமைத் திறந்துண்டு அவரோட தர்மபத்தினி பத்மாவதி..
11. தான் ஆட! தன் தசையும் ஆட!

வாக்கிங் போய்விட்டுத் திரும்பிவந்த பஞ்சாமி, குஷி மோடில் இருந்தார். ‘அடேய், சிவசாமி! விருந்து புறத்ததான்னு ஆரம்பிக்கிற ஒரு குறள் ஒண்ணு உண்டு இல்லே? அதுக்கு மேல சொல்லத் தெரியாது. வரதராவ்சார் ஸ்கூல்லே படிச்சது’.

‘ஆமாண்ணா. அதிகாரம் 9. குறள் எண் 82. ‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று.’ அமிர்தமா இருந்தாலும், திண்ணையிலே இருக்கிற விருந்தாளிக்குக் கொடுக்காம தானே டபக்குனு முழுங்கக் கூடாதுங்கிறது சாராம்சம்’.

‘அப்படி எத்தனை பேருக்குச் செய்ய மனசு வரும்டா?’

‘அந்தப் புள்ளிவிவரத்தை யாரும் சொன்னதா தெரியலே அண்ணா’.

‘போடா கிறுக்கா! ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நம்ம மாளிகைக்கு அடிக்கடி வந்துபோற விருந்தாளிகளுக்கு உன்னை மாதிரி யாராலேயும் சலிக்காம சேவை செய்ய முடியாது. சிவசாமி இல்லாம. ஒரு ராமசாமியோ, சின்னசாமியோ, கோவிந்தசாமியோ இருந்திருந்தா இப்படி ஒரு நல்ல பேரு எனக்கு வந்திருக்காது’.

‘கட்டாயம் வந்தருக்காது, அண்ணா. இதைவிட இன்னும் நல்ல பேரா வந்திருக்கும்’.

‘சிவசாமி. நீ ரொம்ப அடக்கமானவன்டா. ‘விருது விரும்பா மாமணி’ன்னு பட்டம்கூட உனக்குக் கொடுக்கலாம்’.

‘கேலி பண்ணாதீங்க அண்ணா. உள்ளே சார் காதிலே விழப்போறது’.

பஞ்சாமி திகைத்தார். ‘உள்ளே சாரா? யாரு அந்த சாரும் மோரும்? சிவசாமி, என்னடா சொல்றே’.

‘அண்ணா, நீங்க வாக்கிங் போயிருந்தபோது குமாரசாமி சார் வந்தார். உங்க உறவாமே?’

‘ஆ..ம்மா? அவர் எங்கடா இப்போ வந்தார்? இப்படி தடால்னு வரது என்ன பழக்கம்? டிட்லி புயல் எல்லாம்கூட மெட் ஆபீசிலே தகவல் குடுத்துட்டுதானே இப்போலாம் வரது’.

‘போன் பண்ணணும்னு நினைச்சாராம். ஆனா. போனை டாப் அப் பண்ண முடியலையாம்’.

‘அவர் ஏதோ காட்டாங்கொளத்தூரிலோ, குமணஞ்சாவடியிலோ ஒரு முதியோர் இல்லத்திலே இருக்கார் இல்லியா?’

‘ரெண்டும் இல்லே, அண்ணா. ஸ்ரீபெரும்புதூர் பக்கத்திலே ஒரு ஹோம்லே இருக்கார். தனி அறை, டைனிங் ஹால், உயர்தர சைவ சாப்பாடு, கேபிள், மருத்துவர், நர்ஸ், வாக்கிங் ஸ்டிக், பொடி டப்பா, பரமபத சோபான படம், தாயக் கட்டை, பல்லாங்குழி, பெரிய எழுத்திலே அச்சான புஸ்தகங்கள்,  கேரம் போர்டு, செஸ்ஸுனு பற்பல சிறப்பு வசதிகளும் உண்டாம்’.

‘அதை எல்லாம் விட்டுட்டு இங்கே ஏண்டா வந்தார்?’ என்று கேட்ட பஞ்சாமிக்கு, சீரியல்களிலே வர பாத்திரம் மாதிரி, ‘நானே சொல்றேன்னு’ குமாரசாமி சொல்லிக்கொண்டே என்ட்ரி கொடுத்தார்.

‘டாக்டர் பஞ்சாமி சார், சும்மா சொல்லக் கூடாது. வேற்றுக்கிரக ஆசாமி மாதிரி திடீர்னு வந்திறங்கிட்டேன். காரணம், ஆசைதான். என்ன ஆசை? இந்த விசை தீபாவளியை வெளியிலே எங்கயான கொண்டாடணும்தான். வருஷக்கணக்கா ஹோம்லே கொண்டாடி அலுத்துப்போச்சு. அதான் இங்கே வந்தேன். அங்கே பாதுஷாலே கெரஸின் வாசனை வரும்’.

குமாரசாமி மேலும் சொன்ன விவரங்கள் பின்வருமாறு: அவருடைய ஒரே பையன் சம்பத்து, கனடாவிலே மனைவி மக்களோட இருக்கானாம். உலக வரைபடத்திலே இந்தியா கிழக்காலயா மேற்காலயாங்கறதை எப்பவோ மறந்துபோயிட்டானாம்.

‘குமாரசாமி, உங்க ஒய்ஃப் எங்க இருக்கா?’

பஞ்சாமி கேட்ட கேள்வியால் ஒரு கணம் முழித்தார். ‘அவளைப் பத்தி கேக்காதீங்கோ டாக்டர். உங்களுக்குப் புண்ணியமாப் போகும்’. புண்ணியம் சேர்த்துக்கிறதுக்கு இப்படியும் வழி இருக்கான்னு பஞ்சாமி வியந்து அந்தக் கேள்வியைத் தொடராமல் விட்டார்.

குமாரசாமி பேச்சை மாற்றினார். ‘டாக்டர், சார். உங்க வீடு சூப்பரா இருக்கு. அட்டாச்டு பாத்ரூமோட நான் இருக்கிற அறை படு சௌகர்யம். கார்த்தாலே டிபன், ரவா தோசை, சின்ன வெங்காய சாம்பார்னு சிவசாமி சார் சொன்னார். இதோ குளிச்சுட்டு வந்துடறேன். டாண்ணு எட்டு மணிக்கு ஹோமிலே டிபன் சாப்பிட்டுப் பழக்கம்’.

பஞ்சாமியும் சிவசாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

‘அண்ணா, இந்த தீபாவளிக்கும் நீங்க புது டிரஸ் வாங்கிக்கலையே?’

‘எதுக்குடா? பீரோ பூரா அடுக்கடுக்கா சரிகை, மயில்கண் வேஷ்டி, அங்கவஸ்திரங்கள் நல்லி, போத்திஸ், சுந்தரி, ரங்காச்சாரி பையோட எடுக்காம இருக்கு. எல்லாம், குடும்ப விசேஷங்களுக்கு வந்தது. நீயும் அதே கதையைத்தான் சொல்றே. ஆனா இந்த குமாரசாமி வந்திருக்காரே. அவர் கங்கா ஸ்நானம் பண்ணிக் கோடி கட்டிக்க புதுசு வாங்க வேண்டாமா?’

‘வாங்கணும் அண்ணா’.

*

தீபாவளி விடியற்காலை. உள்ளூர் நாகஸ்வரக்காரர் தூக்கத்தில் எழுப்பி அழைத்துவந்த அப்பரென்டிஸ் மேளக்காரரின் மேதாவிலாசத்தோடு வழங்கிய ஒரு பாஷாங்க ராகத்தைக் கேட்டு, பஞ்சாமி முகத்தைச் சுளிச்சார்.

‘சிவசாமி, வாத்தியத்தை நிறுத்தினா காசு குடு. இல்லாட்டி வேண்டாம். அதுக்கு ஒரு பழமொழி உண்டு இல்லே?’

‘ஆமாண்ணா கால் காசு குடுத்து ஆடச்சொன்னா அரைக்காசு குடுத்து நிறுத்தச் சொன்னாளாம். அப்படி இருக்கு வாசிப்பு’.

எண்ணெய் ஸ்நானம் முடித்துவந்த குமாரசாமிக்கு, மஞ்சள் தடவி வைத்திருந்த வேஷ்டி, துண்டு, அரைக்கைச் சட்டையை சிவசாமி எடுத்துக்கொடுக்க, பஞ்சாமி, ‘ஹாப்பி தீபாவளி’ என்று சொல்லி நீட்டினார்.

குமாரசாமி பதறினார். ‘என்ன இது? எனக்கு புது டிரெஸ்ஸா? நெஜமாவா?’

‘இதை ஸ்பான்ஸர் பண்ணினது உங்க ஒய்ப் பத்மாவதி?’ என்றான் சிவசாமி.

‘எ..ன்..னது? ப..பத்..பத்மாவதியா? அவ எங்கே இங்கே வந்தா?’

‘ஏன் வரக் கூடாதா?’ என்று குரல் கொடுத்துக்கொண்டு, இரண்டாவது கெஸ்ட் ரூமைத் திறந்துகொண்டு பத்மாவதி வந்தாள்.

‘என்ன இது துரும்பா இளைச்சுட்டேள்?’ மனைவியின் கரிசனத்தைக் கண்டு குமாரசாமி புது அரிசியாக நெகிழ்ந்தார்.

‘மாமி, உங்க மாமா வாங்கிக்கொடுத்த புடவை ரவிக்கை இதோ’ என்று மாமியிடம் சிவசாமி ஒரு பையைக் கொடுத்தான்.

‘குமாரசாமியும் பத்மாவதியும் திகைத்து நிற்க, திகைப்பில் பஞ்சாமியும் சேர்ந்துகொண்டார். இருந்தாலும், சிவசாமியின் சிக்னலைப் புரிந்துகொண்டு, அவனைப் பின்தொடர்ந்து மாடிக்குப் போனார்.

‘சிவசாமி? என்னடா இது? பி.சி.சொர்க்கார் மாஜிக் ஷோவிலே ஒவ்வொரு பெட்டியைத் திறந்துகொண்டு வரா மாதிரி, ரூமைத் திறந்து ராத்திரி குமாரசாமி வந்தார். இப்போ காலம்பற அடுத்த ரூமைத் திறந்துண்டு அவரோட தர்மபத்தினி பத்மாவதி வரா? என்னடா நடக்கிறது இங்கே?’

‘அண்ணா, கடைசி சீன்லே போலீஸ் வரா மாதிரி வர சந்தேகத்தைக் கிளியர் பண்ணிடறது என்னோட தலையாய கடமை. விஷயம் என்னன்னா, குமாரசாமி சாருக்கும், அவர் வீட்டு மாமிக்கும் ரெண்டு வருஷமா கசமுசா. ஒரு தீபாவளியின்போது, குமாரசாமி வாங்கிண்டு வந்த புடவையை மாமி தூர விசிறி எறிஞ்சுட்டாளாம். காரணம்? அந்தப் புடவையை மாமியோட ஜன்ம விரோதி, எதிர்வீட்டு லேடி, ‘இதை வாங்கிண்டு போங்கோன்னு’ போத்திஸ்லே பார்த்து பரிந்துரை பண்ணிச் சொன்னாளாம். பதில் மரியாதையா, குமாரசாமி சாரும் தன்னோட வேஷ்டி பையை வீசி எறிஞ்சாராம். இதான் சினாரியோ. சண்டை முத்தி, பிரிஞ்சு, தலைக்கு ஒண்ணா தனித்தனியா ஹோமைப் பிடிச்சு இருந்திருந்த கதையை குமாரசாமி சார் போன வாரம் என்கிட்டே போன்லே சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். நான்தான் வருத்தப்படாதீங்கோ, நரகாசுரன் உங்களைச் சேர்த்து வைப்பார் பாருங்கோன்னு சொன்னேன்’.

‘இதெல்லாம் எனக்குத் தெரியவே செய்யாதேடா? ‘மீடூ’ மேட்டர் மாதிரி ஒவ்வொண்ணா வெளியிலே வரது’.

‘காரணம் இருக்கு அண்ணா. தீபாவளி டிரஸ்ஸாலே தகராறு வந்து ரெண்டு பேரும் பிரிஞ்சுது தப்புன்னு தெரிஞ்சும், யார் மொதல் காலை எடுத்துவைக்கிறதுன்னு ஒரு ஈகோ. நான்தான் மாமிக்குத் தெரியாம குமாரசாமி சாரையும், அவருக்குத் தெரியாம மாமியையும் டைம் கேப் குடுத்து வரவழைச்சேன். அப்புறம் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே. அவருக்கு, வீட்டு ஸ்டாக்கிலேருந்து துணிமணிகளை எடுத்துக் கொடுத்துட்டேன். மாமிக்கு, அரக்கு கலரிலே மைசூர் சில்க் புடவை, மேட்சிங் ரவிக்கை வாங்கிண்டு வந்துட்டேன். அந்த அந்தப் பைகளிலே ஒருத்தருக்கு ஒருத்தர் குடுத்த மாதிரி ஸ்டிக்கர் எழுதி ஒட்டிட்டேன்’.

பஞ்சாமி, சிவசாமியை சுட்டெரிப்பதுபோலப் பார்த்தார். ‘அதிகப்பிரசங்கின்னுதானே திட்டப்போறேள். அண்ணா, ஆனா நானே தன்னிச்சையா செய்யலே?’

‘பின்னே கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் யாருடா?’

‘அமெரிக்கா, அண்ணா’.

‘என்னது? அமெரிக்காவா? அங்கே யாரு? டிரம்ப்பா?’

‘இல்லை காமாட்சி மாமி. போன் பண்ணி என்னைச் செய்யச் சொன்னார். பத்மாவதி, காமாட்சி மேடத்தோட பால்யத் தோழியாம்’.

வெளிநாட்டுச் சதி மாதிரி, தன் மனைவி காமாட்சிதான் அமெரிக்காவிலிருந்து சிவசாமியை இயக்கி இருக்கிறாள் என்று அறிந்த பஞ்சாமி திகைத்தாலும், கூடைப் பாம்பாக அடங்கினார். காமாட்சி ஹைனஸ் மேட்டர் ஆச்சே!

‘சிவசாமி! பார்வதி பரமேஸ்வரனா குமாரசாமியும், பத்மாவதியும் பண்டிகை அன்னிக்கு வந்திருக்கா. நன்னா கவனிச்சுக்கோடா’ என்றார், மீசை இல்லாத காரணத்தால் மண் படாமல்.

சில தீபாவளி வெடிகள் சுர்ரென்று சீறினாலும், கடைசி நிமிடத்தில் புஸ்ஸென்று அடங்கிடற மாதிரிதான் இதுவும் என்று சிவசாமிக்குத் தோன்றியது.

‘அப்படியே செஞ்சுப்புடறது அண்ணா’ என்றான், அடக்கத்துடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com