26. பதற்ற சூழல்களில்தான் சிறப்பாக விளையாடுகின்றேன்! மார்ட்டின் கப்டில்

‘கிவீஸ்’ என்றும் ‘கறுப்பு பூனைகள்’ என்றும் அழைக்கப்படுகின்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் தற்காலத்தில்
26. பதற்ற சூழல்களில்தான் சிறப்பாக விளையாடுகின்றேன்! மார்ட்டின் கப்டில்

ஏழாவது நாயகன்: மார்ட்டின் கப்டில்

‘கிவீஸ்’ என்றும் ‘கறுப்பு பூனைகள்’ என்றும் அழைக்கப்படுகின்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் தற்காலத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அணிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பல தரம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரர்களை கொண்ட கிரிக்கெட் அணியாக நியூசிலாந்து இருக்கிறது. கோரி ஆண்டர்சனில் இருந்து ரோஸ் டெய்லெர், வில்லியம்சன் என பல உறுதிமிக்க அசாத்திய ஆட்டக்காரர்கள் அணியில் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவரும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை எனும் அளவுக்கு பல போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற காரணமாக இருந்திருக்கிறார்கள்.

முன்காலங்களில் நியூசிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றாலே நினைவுக்கு வரும் பெயர்களாக இருந்தவர்கள் ஸ்டீபன் பிளெமிங்கும், நாதன் ஆஸ்டிலியும், மெக்குலமும் மட்டும்தான். மூவரும் வெவ்வேறு காலகட்டங்களில் நிலைத்த நீண்ட கால பங்களிப்பை சர்வதேச கிரிக்கெட் தளத்தில் பதிவாக்கியிருக்கிறார்கள். அவர்களுள் மெக்குலம் இந்திய ரசிகர்களால்கூட மிகவும் நேசிக்கப்பட்டவர். இவரது சிக்ஸர்கள் ராட்சதத்தன்மை கொண்டவை. ஓய்வின்றி தொடர்ச்சியாக பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மெக்குலம் வெகு அண்மையில்தான் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார். அதேப்போல ஸ்டீபன் பிளெமிங் நியூசிலாந்து அணியின் தலைமை பொறுப்பில் நெடுங்காலம் இருந்தவர்.

அவருக்கு பின்பான நியூசிலாந்து அணியில் தேர்ந்த கிரிக்கெட் விளையாட்டாளராகவும், அதிரடியில் அசத்தக்கூடியவராகவும், மிகக் குறைவான வருடங்களுக்குள் பலபல சாதனைகளை படைத்தவருமாக திகழ்பவர் மார்ட்டின் கப்டில். இவர் தனது உறுதிமிக்க ஷாட்டுகளால் மற்ற வீரர்களிடமிருந்து முற்றிலும் தனித்துவம் மிக்கவராக அடையாளம் காணப்படுகிறார். கடந்த 9 ஆண்டுகளாக மட்டுமே நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருக்கும் மார்ட்டின் கப்டில் அதற்குள் அவ்வணியின் முந்தைய தலைமுறை பேட்ஸ்மேன்கள் செய்த சாதனைகளை முறியடித்து தனக்கென தனித்ததொரு அடையாளத்தை கட்டியெழுப்பியிருக்கிறார்.

2009ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியை விளையாடிய கப்டில், அப்போட்டியில் 122 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் தனது முதல் போட்டியிலேயே சதமடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்கின்ற சாதனை கப்டில் வசம் வந்து சேருகிறது. அதோடு, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நியூசிலாந்து வீரரொருவர் குவித்த அதிகபட்ச ஸ்கோரும் 122 தான். இப்படி தனது முதல் இன்னிங்க்ஸிலேயே முத்திரை பதித்த கப்டில், அன்றைய போட்டியில் தனது சதத்தை கேயல் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசியதன் மூலமாக பூர்த்தி செய்தார். நிச்சயமாக தனது முதல் போட்டியை விளையாடும் எந்தவொரு வீரருக்கும் இது துணிச்சல் மிகுந்த செயல்பாடுதான். பின் காலங்களில் பல அதிர்வுகளை உண்டாக்கக்கூடிய கிரிக்கெட்டராக மார்ட்டின் கப்டிலை அவரது முதல் போட்டியில் இருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் உணர துவங்கிவிட்டார்கள்.

பதற்ற சூழல்களில்தான் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது என்று கருதுகிறேன். மிக நிதானமாக ஒரு டெஸ்ட் கிரிக்கெட்  விளையாட்டு வீரரைப்போல பந்துகளை எதிர்கொள்ள நான் அதிகளவில் முயற்சிக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக, எனது ஆட்ட வகைமை என்று குறிப்பிடப்படுகின்ற அதிரடி ஆட்டம்தான் எனக்கு உகந்த மற்றும் என்னால் எளிதாக கைக்கொள்ள முடிகின்ற பாணியாக இருக்கிறது” எனும் மார்ட்டின் கப்டில் அதிகளவில் உரையாடல்களில் பங்குகொள்ள விருப்பமில்லாதவர். எப்போதும் மென்மையானவராகவும், தனிமையை அதிகளவில் விரும்பக்கூடியவராகவும் கப்டில் இருந்துவருகிறார். எனினும், கடந்த சில வருடங்களில் அவர் குவித்து வைத்திருக்கின்ற சாதனைகள் இன்னும் பன்னெடுங்கால அளவில் வைத்து போற்றப்படத்தக்கவை.

ஒருநாள் போட்டித் தொடர், இருபது ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் தொடர் என மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் சதம் அடித்த வீரர், 2015ம் வருடத்தின் அதிக ரன் குவித்த வீரர் (32 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 1489 ரன்கள்), ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த நான்கே வீரர்களில் ஒருவர், மிக குறைவான பந்துகளில் அரைசதம் கடந்த நியூசிலாந்து வீரர் என பல பிரத்யேக சாதனைகள் கப்டில் வசம் இருக்கிறது. ஆக்ரோஷமான சிக்ஸர்கள் விளாசுவதிலும் மன்னனாக இருந்துவரும் மார்ட்டின் கப்டில், இவையெற்றாவற்றையும் விட 2015 உலக கோப்பை கால் இறுதியில் 237* குவித்ததுதான் உச்சபட்ச சாதனையாக கருதப்படுகிறது.   

பொதுவாக, ஆஸ்திரேலிய அணியைப்போலவே மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களை கொண்ட அணிதான் நியூசிலாந்தும். பேட்ஸ்மேன்களும் பந்து வீச்சாளர்களும் எப்போதுமே அவ்வணியில் சம விகிதத்தில் இருந்துக்கொண்டிருப்பார்கள். பீல்டிங்கிலும் எந்தவொரு அணி வீரர்களுக்கும் நியூசிலாந்து வீரர்கள் சளைத்தவர்கள் இல்லை. எனினும், ஆஸ்திரேலியா அணி உலகளவில் சேம்பியன் அணியாக பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், நியூசிலாந்து அணி இதுவரையில் ஒருமுறைகூட உலக கோப்பையை வென்றிடாத அணியாகவே இருந்துவருகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து நியூசிலாந்து அணியும் இதுவரையில் உலக கோப்பை வென்றிடாத ஆனால், அதற்கு முழு தகுதியுடைய அணியாக இருக்கிறது.

கிரிக்கெட்டில் ’அதிர்ஷ்டம்’ என்பது வெற்றிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக பாவிக்கப்படுகிறது. பலமுறை நூலிழையில் தென் ஆப்பிரிக்கா அணியிடமிருந்து உலக கோப்பை தொடரை வெல்லும் சாத்தியம் கை நழுவிப்போன தருணங்களை நாம் பார்த்திருக்கிறோம். மழை, ஆடுகளத்தின் தன்மையில் நிகழும் திடீர் மாற்றங்கள், வெளிச்ச குறைபாடுகள் போன்றவையும் வெற்றிக்கு பல தருணங்களில் இடற்பாடுகளை உண்டாக்கியிருக்கின்றன. எனினும், எந்தவிதமான தடைகளையும் தகர்த்து முன்னேறும் அணியே உலக சேம்பியனாக உருவெடுக்க முடியும். நியூசிலாந்து அணி உலக கோப்பை தொடர்களில் இதுவரையிலும் ஏழுமுறை அரை இறுதி வரையில் முன்னேறி இருக்கிறது. எனினும், உலக கோப்பை வென்றிடாத அணியென்கின்ற முத்திரை இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

1975ல் உலக கோப்பை போட்டித் தொடர் முதல் முதலாக நடைபெற்ற போதிலிருந்தே அதில் பங்கேற்று வரும் நியூசிலாந்து அணி அரை இறுதியை கடந்து இறுதிப் போட்டி வரையில் முன்னேறியதே கடந்தமுறை நடைபெற்ற 2015 உலக கோப்பையில்தான். இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் கை தொடர் முழுவதும் பலமாக ஓங்கி இருந்தது. பெரும்பாலான போட்டிகளில் வெற்றிக் கண்டு இறுதி போட்டியை அடைந்திருந்தது. மறுபுறம் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் அப்போதும் ஓய்வு பெற்றிருந்ததால், மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியாவின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார். பல இளம் வீரர்களுடன் ஆஸ்திரேலியா அணி அந்த போட்டித் தொடரில் களமிறங்கி இருந்தது. அதனால், இரு அணிகளுக்குமே உலக கோப்பையை வெல்ல சம அளவில் சாத்தியமிருப்பதாக கருதப்பட்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை பேட்டிங் செய்யும்படி பணித்தது. மெக்குலமும், மார்ட்டின் கப்டிலும் அதீத நம்பிக்கையுடன் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இருவருமே வெகு சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிட்டார்கள். அன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் கப்டிலும் விரைவாகவே பெவிலியன் திரும்பிவிட்டார். முடிவில் வெறும் 183 ரன்களில் நியூசிலாந்து அணி தனது மொத்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. மைக்கேல் கிளார்க் தலைமையில் முதல்முறையாக உலக கோப்பையை பலமாக உற்சாகத்துடன் ஏந்தியது துடிப்புமிக்க இளைய ஆஸ்திரேலிய அணி.

மார்ட்டின் கப்டில் இறுதிப் போட்டியில் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அப்போட்டி தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்தவர் அவர்தான். இரண்டு சதங்கள் உட்பட வெறும் ஒன்பதே போட்டிகளில் 547 ரன்களை குவித்திருந்தார். கால் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் குவித்த 237* ரன்கள் அதுவரையிலான உலக கோப்பை போட்டிகளிலேயே தனியொருவரால் ஒற்றைய போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக கருதப்படுகிறது. அன்றைய போட்டியில் அவரது ஆட்டத்திறன் மிகுதியான அளவில் பரிணமித்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் பந்துவீச்சு மைதானம் முழுவதும் சிதறி ஓடியது. அதுப்போன்றதொரு ஆட்டத்தை சர்வதேச போட்டியில் காண்பது அரிது என பல பத்திரிகையாளர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் அப்போட்டிக்கு பின்பாக கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், அந்த போட்டியின் முதல் ஓவரிலேயே கப்டில் ஆட்டமிழந்திருக்க வேண்டியது. ஸ்கொயர் லெக் பகுதியில் மார்ட்டின் கப்டில் விளாசிய பந்து, சரியாக சாமுவேல்ஸின் கைகளுக்கு சென்றது என்றாலும், பந்தின் விரைவுத்தன்மை காரணமாக சாமுவேல்ஸ் அந்த கேட்ச்சை தவறவிட்டுவிட்டார். மார்ட்டின் கப்டில் அக்கணமே விழிப்புகொண்டார். இனியும் தவறான ஷாட்டுகளை அடித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவரது பார்வை மேலும் தீவிரமடைகிறது. அதன்பிறகு எவரொருவராலும் மார்ட்டின் கப்டிலை கட்டுப்படுத்த முடியவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அன்றைய இன்னிங்க்ஸ் கப்டிலின் கேட்ச் தவறவிடப்பட்ட நொடியில் இருந்து துவங்கியது.

(சிக்ஸர் பறக்கும்…)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com