23. பசி வந்தால் என்ன ஆகும்?

நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்தால் நம் வாழ்க்கை குற்றமற்றதாகிவிடும். இதைத்தான்
23. பசி வந்தால் என்ன ஆகும்?

நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்தால் நம் வாழ்க்கை குற்றமற்றதாகிவிடும். இதைத்தான் 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளதானே வளரும்' என்ற பழமொழியாக்கிச் சொன்னார்கள் முன்னோர்கள். ஞானிகள் மற்றவர்களிடம் ஆன்மாவை மட்டுமே பார்ப்பவர்கள். உடலைப் பார்க்க மாட்டார்கள். அன்னை தெரஸா தொழுநோயாளியின் சீழ்ப் பிடித்தக் காயங்களை சுடுநீரால் கழுவிக் கழுவி மருந்திட்டவர். காரணம் அவர் ஆன்மாவைப் பார்த்தார்.

இந்த மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு வரும்?

கைகால் நன்றாக ஆரோக்கியமாக இருந்தாலும் கூட மற்றவர்கள் பொருட்களை உபயோகிக்கும் போது ஒருவகை அறுவெறுப்பை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு அவர்களிடம் உறவாடுவதில் கட்டுப்பாடு வைத்திருப்பார்கள். அடுத்தவர்கள் தரும் பட்சணங்களைத் தின்பதில் கூட அறுவெறுப்பு காட்டுவோர் உண்டு.

பெண்கள் அதில் நிறையக் குறை தேடுவார்கள். அந்த வெறுப்பின் காரணம் அறியாமை.

அன்று- எதிர் வீட்டுச் சாரதா மாமி சாம்பார் சாதம் தயாரித்திருப்பதாகச் சொல்லி பிரியத்தோடு கொண்டு வந்த வித்யா மாமியிடம் கொடுத்து விட்டுப் போனாள்.  சிரித்துக் கொண்டே வாங்கிச் சிடுத்துக் கொண்டே உள்ளே கொண்டு போனாள் வித்யா மாமி.

உள்ளே போன வித்யா மாமி சாம்பார் சாதத்தைப் வைத்துக் கொண்டு 'புலனாய்வு’ செய்ய ஆரம்பித்தாள். இந்தச் சாரதா மாமி, குளித்துவிட்டுச் சமைத்திருப்பாளா, குளிக்காமல் சமைத்திருப்பாளா?

பாத்திரத்தைச் சோப்பிட்டுக் கழுவியிருப்பாளா, சும்மா கழுவியிருப்பாளா?

காய்களை அரியும் முன்னதாகவும், அரிந்த பின்னும் கழுவியிருப்பாளா, மாட்டாளா?

சமைக்கும் முன்னதாகக் கைகளைச் சுத்தம் செய்திருப்பாளா, இல்லையா?

தும்மிக் கொண்டே இருப்பாளே, சமைக்கும் போது தும்மியிருந்தால்?

மூக்கை எந்த டவலில் துடைத்திருப்பாளோ, கருமம்?

இருமல் வேறு வருமே, இருமியிருந்தால் சாம்பாரில் தெறித்திருக்குமோ?

சமையலுக்குத் தரமான எண்ணெயைப் பயன் படுத்திருப்பாளா?

சாம்பார் சாதம் கொண்டு வந்த பாத்திரத்தைக் கழுவியிருப்பாளா, மாட்டாளா? அதை ஈரமில்லாமத் துணியில் துடைத்திருப்பாளோ இல்லையோ? என்றெல்லாம் ஆயிரத்தெட்டு யோசனைகள் மனதுக்குள் ஓடியது. 

அதனால்-

பெயருக்கு ஒரு 'டீ-ஸ்பூனை’ மட்டும் எடுத்து வாயில் போட்டுவிட்டு மீதிச் சாம்பார் சாதம்  முழுதையும்“டஸ்ட் பின்”னில் கொண்டு போய்ச் சத்தமில்லாமல் சரிய விட்டாள்! 

இது 'புளிச்ச ஏப்பம் வந்தபோது வந்த யோசனைகள்!

*
அதே வித்யா மாமி ஒருநாள்  மருத்துவமனையில் இருந்த உறவினரைப் பார்த்துவிட்டுப் பிற்பகல் மூன்று மணிக்கு வீடு திரும்பினாள்.

மருத்துவமனை நாற்றத்தால் அவளால் அங்கு எதையுமே வாங்கிச் சாப்பிட முடியவில்லை. ஆனால் பசியோ வயிற்றைப் பிசைந்தது. கைகால்கள் நடுக்கமுற்றன. 

இனிமேல் சமைத்துச் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். சமைப்பதற்கு உடலில் தெம்புமில்லை. வாங்கிச் சாப்பிடலாம் என்றால் வழியில் ஹோட்டலும் இல்லை. பசி மயக்கம் தலையைச் சுற்றியது. 

இந்த நிலையில் வீட்டுக்குள் வந்து ஏ.சி.யைப் போட்டுவிட்டு படுக்கையில் போய்ச்  சரிந்தாள் வித்யா மாமி. அந்த சமயம் 'காலிங் பெல்’ அலறியது- திறந்து பார்த்தபோது எதிர்வீட்டுச் சாரதா மாமி 'கமகம’வென்று மணக்கும் சூடான 'வெஜிடபிள் பிரியாணி’யோடு நின்று கொண்டிருந்தாள்!

வித்யா மாமி மட்டும் ஒரு நாயாக இருந்திருந்தால் சாரதா மாமியோடு சேர்த்தே விஜிடபிள் பிரியாணியைக் கவ்வியிருப்பாள்! பசி வந்தால் பத்தும் பறந்தோடி விடும்! இதே சாரதா மாமி, அன்றைக்குச் சாம்பார் சாதத்தைக் கொடுத்த போது அறுவெறுப்போடு கொண்டு போய்க் குப்பையில் கொட்டியவள் இந்த வித்யா மாமி! இப்போது வாயெல்லாம் பல்லாக சிரித்தபடியே வாங்கிக்கொண்டு உள்ளே திரும்பினாள்.

வெஜிடபிள் பிரியாணியை அள்ளி வாய்க்குள் தள்ளிய போதும் அன்றைக்கு எழுந்த சந்தேகங்கள்  தலைதூக்கின. ஆனால் எப்படித் தெரியுமா? சாரதா மாமியா,  அவங்க குளிக்காட்டாலும் பரவாயில்லை. .பாத்திரங்களைக் கழுவாவிட்டாலும் பரவாயில்லை, தும்மினாலோ, இருமினாலோ என்ன பரவாயில்லை, அவளும் நம்மைப் போலத்தானே,  ஏதோ பசிக்கற வேளைக்குக் கொண்டு வந்து கொடுத்தாளே, புண்ணியவதி, மகாலட்சுமி.. அவள் கடவுள் மாதிரி. நல்லா இருக்கணும்.. என்றபடிக் கண்களை மூடிக்கொண்டே அள்ளி அள்ளி வாய்க்குள் தள்ளினாள் வித்யா மாமி!

பசி வந்தால் பத்தும் பறந்துபோய்விடும்!

காரணம் பசி மயக்கம்!

பசி ஒரு துன்பம். அது உணவால் மட்டுமே தீரும். அது போல முன்வினையும் ஒரு துன்பம். அது சேவை செய்தால் மட்டுமே தீரும்.

சேவைகள்  மலர, மாறுபாடில்லாத அன்பை மனதில் வளர்த்துக் கொள்ளவேண்டும், அது முக்கியம். அதை மறந்துவிடாதீர்கள்! மாறுபாடில்லாத அன்பை என்னால் உணர முடியவில்லையே, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் நண்பர் முருகேசன். நன்மையை அறிய, முதற்கண் தீமைகளை விலக்க வேண்டும் முருகேசா. தண்ணீர் என்பது கையினால் பிடிக்க முடியாதது. ஆனால் அந்த நீர் ஓடிக் கொண்டிருப்பது கைகளை நுழைக்க முடியாத மண்ணுக்குள்!

பூமிக்கடியில் நீர் ஓடுகிறது. அதைக் காண்பதற்கு நாம் பூமியைக் கைகளால் தோண்டியாக வேண்டும். மாறுபாடில்லாத அன்பு என்பது கைகளில் அள்ள முடியாத தண்ணீர் போன்றது. அதை நாம் அடைவதற்குக் கல்லும் மண்ணும் மூடியுள்ள  பூமியைப் பிளப்பது போல மாறுபாடுள்ள மனதையும் பிளந்தாக வேண்டும்.

மனதைப் பிளப்பது என்றால் மார்பைப் பிளப்பதா? பைபாஸ் சர்ஜரியில் மார்பை இரண்டாகப் பிளந்து ஆபரேஷன் பண்ணுகிறார்களே அப்படியா? என்றார் முருகேசன்.

எதற்காகத் தப்பாகச் சிந்திக்கிறீர்கள்?  மாறுபாடில்லாதது அன்பு. மாறுபாடுவது அன்பு ஆகாது. அதற்குப் பெயர் பாசம். எல்லோரிடமும் பாசம் இருக்கிறது. அந்தப் பாசத்தையும் பற்றையும்  முதலில் அகற்ற வேண்டும். அதாவது பாசத்தால் மூடியுள்ள மனதை பிளக்க வேண்டும் என்றேன்.

பாச மனது என்றால் என்ன?

உங்களுக்கு பிள்ளை குட்டிகள் இருக்கிறார்களா என்று கேட்டேன்.

ஆமாம் ஒரு மகன் ஒரு மகள் உண்டு என்றார்.

இருவரையும் படிக்க வைக்கிறீர்களா?

ஆமாம். மிகச் சிறப்பாக படிக்க வைக்கிறேன்.

எப்படி என்று சொல்லுங்களேன்.

பள்ளியிலேயே முதல் மாணவனாக, முதல் மாணவியாக என் பிள்ளைகள் வர வேண்டும் என்று படிக்க வைக்கிறேன். 

அப்படி என்றால் மற்ற மாணவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அடுத்தபடியாக வரவேண்டும் என்றுதானே அர்த்தம்?

இப்படிச் சொன்னதும் அவர் ஏறெடுத்துப் பார்த்தார்.

உங்கள் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைத் தோற்கடித்து விட்டு முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைப்பதே தப்பான முடிவு முருகேசா. 

உங்கள் பிள்ளை தாய் என்றால் மற்றப் பிள்ளைகள்  குழந்தைகள் மாதிரி.

உங்கள் பிள்ளை குழந்தை என்றால் மற்ற பிள்ளைகள் தாய் மாதிரி. 

குழந்தையும் தாயும் குதூகலமாக இருக்க வேண்டும்.

எல்லாப் பிள்ளைகளுமே நன்றாகப் படிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட வேண்டும்.

தன் பிள்ளைகள்தான் வாழ வேண்டும், மற்ற பிள்ளைகள் எப்படிப் போனாலும் பரவாயில்லை எனறு நினைப்பது சுத்தச் சுயநலம். மாறுபாடுள்ள அன்பு. அதுதான் பாசம் என்பது. அதுதான் பற்று என்பது.

எல்லாப் பிள்ளைகளும் வாழ வேண்டும் என்று நினைப்பது பொதுநலம். அதுவே மாறுபாடு இல்லாத அன்பு. அது பாசத்திற்கு அப்பாற்பட்டது. பாசமும் பற்றும் தோற்றுப் போகும்.

பாசங்களைக் கடந்த அன்பு மட்டுமே வெல்லும். 

அந்த அன்பைப் புரிந்து கொள்ளத்தான் சேவை செய்ய வேண்டும். 

பூமிக்குள் இருக்கும் தண்ணீரைக் காண கரடுமுரடான மண்ணைத் தோண்டி எடுக்க வேண்டும். அது கஷ்டமான காரியம்.

அந்தக் கஷ்டம் தெரியாமல் இருக்க வேண்டுமானால் தண்ணீர் மீது நமக்குத் தாகம் ஏற்பட வேண்டும். 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

தாகம் வந்தாலும் பத்தும் பறந்து போகும். 

தாகமுள்ளவன் பூமி கற்பாறையாக இருந்தாலும்கூடத் தோண்டித் தண்ணீரைக் கண்டுபிடித்துவிடுவான்!  

உண்மையான அன்பை மற்றவர்கள் மேல் காட்டுவதற்குப் பந்த பாசங்களாகிய மண்ணைத் தோண்டியாக வேண்டும். 

மண்ணைத் தோண்டும் அந்த முயற்சிகளுக்குப் பெயர்தான் சேவை. மற்றவர்கள் மீது மாறாத அன்பு வைத்துவிட்டால் அதுவே சேவை. அந்தச் சேவை செய்வது கஷ்டம்தான். ஆனால் தன்னைப் போல மற்றவர்களை நேசிக்கும்போது அந்தக் கஷ்டங்களும் பஞ்சாய்ப் பறந்துவிடும்! அது எப்படி என்றார் நண்பர் முருகேசன். படுக்கையில் செயலற்றுக் கழிந்து கிடக்கும் முதியோர்களுக்குப் பணிவிடை செய்வது, அவர்களைச் சுத்தம் செய்வது, அவர்களைக் குளிப்பாட்டுவது, உடல் மன ஊனமுற்றவர்களுக்கு மனமுவந்து சென்று  உதவுவது. .. என்று எத்தனை எத்தனையோ சேவைகள் உள்ளன. உங்கள்  சுற்று வட்டாரத்தில் யாருக்கு உதவி தேவையோ அவர்களைத் தேடிச் சென்று உதவி செய்துப் பாருங்களேன், அப்போது தெரியும் அந்தச் சேவையின் மகத்துவம் என்னவென்று என்றேன். 

நண்பர் யோசித்தார். என்ன யோசனை?

ஒரு மருத்துவ மனையில் ஒரு தாய்க்கு பிரசவத்தின்போது பெரியச் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. டாக்டர்கள் அந்தக் கணவரிடம் கேட்டனர். தாய், சேய் என்ற இரண்டு உயிர்களுக்கும் சோதனை வந்துள்ளது. ஒன்றை மட்டும்தான் மீட்க முடியும். ஒன்றை இழக்க நேரிடும். இப்போது யார் உயிரை மீட்பது, யார் உயிரை இழப்பது, சொல்லுங்கள் உங்கள் முடிவைப் பொறுத்துத்தான் நாங்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றனர். யார் உயிரை மீட்கலாம் என்று நீங்கள் சொல்லுங்கள் என்றேன். என்ன என்னிடமே கேட்கிறீர்கள் என்று முழித்தார் முருகேசன்.

உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் சொல்லுங்களேன் என்றேன். யோசித்தார்..யோசித்தார் .. .. யோசித்துக் கொண்டே இருந்தார். வாயைத் திறந்து சொல்ல வந்தார். பிறகு நிறுத்திக் கொண்டார். மீண்டும் சொல்ல வந்தவர் மீண்டும் நிறுத்திக்கொண்டார். 

என்ன தயங்குகிறீர்கள்?

என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்றார்.

தாய் வாழ்ந்தவள்தானே என்றால் அவளை இழந்துவிடலாம். ஆனால் பிள்ளையை வளர்ப்பது யார்? 

பிள்ளையை இழந்துவிடலாம். ஆனால் முதன் முதலாக இறைவனால் உருவாக்கப்பட்ட உயிரைப் பறிப்பது எப்படிச் சரியாகும்?

தாய்க்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. அதற்கு இரண்டு வயதாகிறது. தாய் போய்விட்டால் அந்தக் குழந்தையை வளர்ப்பது யார்? என்று கேட்டேன். 

அதைக் கேட்டதும் அதிர்ச்சியில் தனது கைகளால் தனது காதுகளை மூடிக்கொண்டார் நண்பர்.

இப்போது சொல்லுங்கள் டாக்டரிடம் என்ன பதில் சொல்வது? 

டாக்டர்கள் அந்தப் பெண்ணின் கணவரை அவசரப்படுத்தினார்கள்.

அவர் இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவியாய்த் தவித்தார். இப்போது கேள்வியின் ஆரம்பத்திற்கு வாருங்கள். 

பள்ளியில் உங்கள் பிள்ளை முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் மற்ற பிள்ளைகள்  குறைவான  மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்!

அடுத்தவன் பெற்ற பிள்ளைகள் தோற்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். இப்போது இங்கு வாருங்கள்- தாய்தான் முக்கியம் என்றால் பிள்ளை முக்கியமில்லை என்றாகிவிடும். பிள்ளைதான் முக்கியம் என்றால் தாய் முக்கியமில்லை என்றாகிவிடும். 

நீங்கள் அந்தப் பெண்ணின் கணவராக இருந்து உங்களிடம் டாக்டர்கள் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? என்று திருப்பிக் கேட்டேன். அப்போதும் யோசித்தார் முருகேசன்.

உங்களுக்கு இந்தச் சோதனை வந்தால் என்ன பதில் சொல்வீர்கள் என்று என்னிடமே திருப்பிக் கேட்டார் நண்பர்.

எனக்கு இரண்டு உயிர்களுமே தேவை. ஒரு உயிரைக் கொடுத்து ஒரு உயிரை மீட்கத் தயாராக இல்லை. தாய், சேய் இரண்டு பேரது உயிர்களையுமே மீட்பதற்கு இறுதி வரைப் போராடுங்கள் டாக்டர்..அதற்கு மேல் இறைவனது சித்தம் என்று சொல்லிவிடுவேன் என்றேன்.

அப்படிச் சொன்னால் என்ன நடக்கும் என்று கேட்டார் நண்பர். இரண்டு பேரது உயிர்களுமே பிழைத்துக் கொள்ளும்! எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். என் பிள்ளைகள் மட்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. எல்லாப் பிள்ளைகளுமே முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற நினைப்பிலிருந்து வந்தது. 

எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற எண்ணமுடைவன் நான். இது பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட கனவு. உண்மையான அன்பு கொண்ட மனதின் ஆசை. இப்படிப் பட்டவனுக்குச் சோதனைகள் வந்தால் பாதகம் ஆகாது! தாயும் சேயும் காப்பாற்றப்பட வேண்டும் என்று எண்ணுபவன். அதனால் இரண்டு பேரது உயிர்களுமே பிழைத்துக் கொள்ளும். அப்படி ஒரு உண்மைச் சம்பவம் கூட என் வாழ்க்கையில் நடைபெற்றது என்றேன்! அப்படியா, அதையும்தான் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றார் நண்பர் முருகேசன்.

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com