24. விஞ்ஞானம் தோற்கக் கூடும் மெய்ஞானம் தோற்காது! பிரசவத்தில் சோதனை!

24. விஞ்ஞானம் தோற்கக் கூடும் மெய்ஞானம் தோற்காது! பிரசவத்தில் சோதனை!

தாயை மட்டும் காப்பாற்றலாம். அல்லது பிள்ளையை மட்டும் காப்பாற்றலாம். இரண்டு பேரையும் காப்பாற்றுவது முடியாத காரியம்.

தாயை மட்டும் காப்பாற்றலாம். அல்லது பிள்ளையை மட்டும் காப்பாற்றலாம். இரண்டு பேரையும் காப்பாற்றுவது முடியாத காரியம். உங்கள் முடிவைச் சொல்லுங்கள் என்றாராம் அந்த டாக்டர்.

என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டால் ‘இரண்டு பேரையுமே படைத்தவன் இறைவன். என்னிடம் இப்படி ‘ஆப்ஷன்’ கேட்காதீர்கள். தாயையும் சேயையும் படைத்த இறைவனிடமே  இதைக் கேளுங்களேன். என்னிடம் கேட்டால் நான் தாய் சேய் இருவருமே வேண்டும் என்பேன். எனவே  இந்த மாதிரி நிபந்தனைகளை வைக்காதீர்கள் டாக்டர். நான் முடிவை இறைவனிடமே விட்டுவிடுகிறேன் என்றுதான்  அந்த டாக்டர்களிடம் சொல்வேன். 

அப்படிச் சொல்லிவிட்டுக் காத்திருந்தால் நடக்கும் அறுவைச் சிகிச்சையில் இரண்டு பேருமே காப்பாற்றப்படுவார்கள், இது சத்தியம்! அப்படிக் காப்பாற்றப்பட்ட உண்மைச் சம்பவம் ஒன்று என் வாழ்க்கையில் நடைபெற்றது என்று சொல்லி  முடித்திருந்தேன்.

அந்த சம்பவம் இதுதான். அதுவும் நான் பார்க்க எங்கள் குடும்பத்திலேயே நடந்த சம்பவம்-

என் உடன் பிறந்த சகோதரிகளில் ஒருவர் மதுரையில் இருக்கிறார். அவருக்கு இரண்டாவது குழந்தைப் பேறு. எங்கள் ஊர் வத்தலக்குண்டுவில் உள்ள ‘காட்டு ஆஸ்பத்திரி’ எனப்படும் ‘லெயோனார்டு’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எனது பள்ளிக்காலத்தில் முக்கால்வாசிக் காலம் மருத்துவமனைகளுக்கு அலைவதும் அங்கேயேத் தங்கிக் கிடப்பதுமாகவே கழிந்து போயிற்று.

காரணம் சின்ன வயதிலேயே என் தாயார் இறந்து போனார். என் தகப்பனார் படுத்த படுக்கையாகிவிட்டார். அதனால் என் உடன் பிறந்த சகோதரிகள் அனைவருக்கும், பிரசவம் முதல் அனைத்துச் சிசிக்சைகளுக்கும் நான்தான் ‘தாயும் ஆனவன் தந்தையும் ஆனவன்! நானே கூடச் சமைத்து எடுத்துச் சென்ற நாட்களும் உண்டு!

பத்தாம் வகுப்புத் தேர்வுக்குக் கூடப் படிக்க முடியவில்லை.

வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு ஒரு வேளை சாப்பாடு கொண்டு போய்க்  கொடுத்து விட்டுக்  காத்திருந்து வீடு திரும்புவதற்கே அரை நாள் ஆகிவிடும்.

மூன்று வேளைக்கும் இப்படித் தனித்தனியே சுமந்து கொண்டு போய் வர வேண்டும்.

இருப்பதுவோ ஒருநாள். அந்த ஒரு நாளைக்குள் ‘ஒன்றரை நாளுக்குரிய வேலைகள் இருக்கும்! இதில் தேர்வுக்குப் படிப்பதாவது!

தேர்வுக்குப் போனதும் எழுதியதும் நினைவில் கூட இல்லை. ஆனால் தேர்ச்சி பெற்றது மட்டும் நினைவிருக்கிறது. அதை விடப் பெருமகிழ்ச்சி என் சகோதரியின் உயிருக்கு ஆபத்து வந்து பிழைத்துக் கொண்டது.

இந்த வருடம் தோற்றால் அடுத்த வருடம் எழுதிக் கொள்ளலாம். இந்த வருடம் அக்கா போய்விட்டால் எந்த வருடத்திலும் அக்கா முகத்தைப் பார்க்க முடியாதே!

அன்று இரவு அக்காவுக்கு பிரசவ வலி வந்ததால் ‘லெயோனார்டு’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

அங்கு எல்லாருமே இளம் பெண் மருத்துவர்கள்.

அவர்களைப் பற்றி இங்கு விரிவாகச் சொல்லியாக வேண்டும்.

வாழ்க்கையை இறைவனுக்காகவும் சேவைக்காகவும் அர்ப்பணித்து வாழும் கன்னியாஸ்திரிகள் அவர்கள். ‘மதர் தெரஸா’ போலத் தலை முழுக்க வெள்ளை ஆடையால் மூடியிருப்பார்கள். முகத்தில் இளமையும் வசீகரமும் இருக்கும்.

கண்களில் கருணையும் உதடுகளில் புன்னகையும் எப்போதும் குடியிருந்து கொண்டிருக்கும். இவர்கள் திருமணம் செய்து கொண்டு புருஷன் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து கொணடிருக்கலாமே என்று எவருமே நினைப்பார்கள். ஆனால் எனக்கு அப்படி நினைக்கத் தோன்றவில்லை.

காரணம் திருமணம் என்ற அனலிடைப் பட்ட புழுவாகிக் கருத்து சிறுத்துப் போன பெண்களைப் போல இவர்களது முகங்களும் மாற வேண்டுமா என்ன? வேண்டவே வேண்டாம். இவர்கள் இப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்றுதான் எண்ணத் தோன்றும்.  அவ்வளவு அழகோவியங்கள் அவர்கள்.

பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் பாழாக்கப்படக்கூடாது!

அவர்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் வேறு ஒரு சமாதான உலகில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

வளாகத்துக்குள்ளேயே அவர்களுக்குத் தங்கும் வசதிகளும் இருப்பதால் ஊருக்குள் வலம் வரும் வேலை இல்லை.

மருத்துவமனைதான் அவர்களுக்கு வெளியுலகம்!

மனிதன் காட்டுக்குள் போனாலும் ஆபத்து. காட்டு விலங்கினங்கள் நாட்டுக்குள் வந்தாலும் ஆபத்து. அதனதன் இடத்தில் அவையவை அடங்கியிருப்பதுவே அவையவற்றுகுப் பாதுகாப்பு.

அது போலவே கன்னியாஸ்திரிகள் வாழ்க்கையும் அந்த ‘லெயோனார்டு’ மருத்துவமனையோடு மண்டி மறைந்து கிடந்தது. 

மனிதர்கள் உலக இன்பங்களைத் துய்த்துக் களைந்து வாழும் உலகை அவர்கள் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.

மகிழ்ச்சியில் அடிபட்டு நொந்து வெந்து நோய்களுக்குப் பலியாகி மருத்துவமனைக்குள் உயிர்ப் பிச்சை கேட்டு வந்து கிடக்கும் இழி பிறவிகளைத்தான் பார்ப்பார்கள்!

அவர்களுக்கு குடும்பம் இல்லை. தாய் தகப்பன் இல்லை, உறவுகள் இல்லை. எல்லோருமே அனாதைகள். அனாதைக்கு அனாதைகளே துணையாகி வாழ்கிறார்கள்.

கருணை கூர்த்தக் கண்களோடு முகத்தைக் குனிந்து நிற்கும் அன்னை மரியாளின் பார்வை ஒன்று மட்டும் போதும் அவர்களுக்கு.  எத்தனைப் பாரங்கள் இருந்தாலும் அவள் முன்னால் போய் மண்டியிட்டு நின்றுவிட்டால் அத்தனையும் மாயமாகிவிடும் அவர்களுக்கு.

ஆண்களின் ‘ஸ்பரிஷம்’ என்னவென்றே அறியாதவர்கள். ஆண்களின் அனல் மூச்சையும் அறியாதவர்கள். ஆனால் அவர்களின் உயிர் மூச்சைப் போகவிடாமல் மீட்கும் முயற்சிக்குள்ளிருப்பவர்கள்.

மணமான பெண்கள் அங்கே நடக்கும்போது தரையே அதிரும். காரணம் குடும்பச் சுமைகள் போடும் போடு! அவை படுத்தும் பாடு!

அந்த கன்னியாஸ்திரிகளும் பெண்கள்தான். பூனை நடக்கும்போது கூடச் சத்தம் எழும்பிவிடும். அதைவிட மென்மையாக நடப்பார்கள். ஏன்? அவர்களுக்கு குடும்பப் பாரங்கள் இல்லை!

மனிதன் நோயாளியாவது துரதிஷ்டம். அது பாவம்.

ஆனால் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளி ஒரு  அதிர்ஷ்டக்காரன், அவன் புண்ணியம் செய்தவன் என்றால் மிகையாகாது!

காரணம் அத்தேவதைகள்  அவர்களிடம்  காட்டும் அன்பு ..பரிவு..சேவை!

காய்ச்சல் தலைவலி முதல் கைகால் போனவர்கள், இதய நோய் வந்தவர்கள், சிறுநீரகங் கெட்டவர்கள், தொற்று நோய்களுக்குப் பலியானவர்கள் என்று பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள் வரை அனைவருக்கும் சிகிச்சை அளிப்பவர்கள்.

ஆனால் குழந்தைப் பேறு சிகிச்சையிலும் தலையிடுகிறார்களே, அதற்கு எத்தனை பெரிய மனோ தைரியம்வேண்டும்!

கல்யாணம் ஆகி பிள்ளை பெற்ற நர்ஸம்மா பிரசவம் பார்ப்பது வேறு.

பெண்கள் பிரசவ வலியில் துடிக்கும் போது அவளுக்குக் கல்யாணமும் கணவனும் எட்டிக் காயாகக்  கசப்பார்கள்.

‘உன்னை யாரு கல்யாணம் பண்ணச் சொன்னது. பண்ணிட்டு இந்த மாதிரி பட்டு மாயச் சொன்னது?’ என்று அந்த நர்ஸம்மாக்கள் சீண்டுவது வழக்கம்.

சில ஆயாக்கள் வரம்பு மீறிச் சென்று ‘அன்னிக்கு மட்டும்’ அது நல்லா இருந்துச்சு. இன்னிக்கு மட்டும் அது கசக்குதாக்கும், சும்மா கெடடீ’ என்று நையாண்டி பேசுவார்கள்.

மயக்கம் தெளிந்து தன் மார்பில் போடப்பட்ட குழந்தைக்குப் பால் ஊட்டும் போது தாயின் முகத்தில் ஏற்படும் பரவசத்தைப் பார்க்க வேண்டுமே!

அதையும் பார்த்துவிட்டு அந்த ஆயாக்கள்  சும்மா போக மாட்டார்கள்.

‘இப்ப மட்டும் இனிக்குதாக்கும், இது மட்டும் எங்க இருந்து வந்துச்சாம், அங்க இருந்துதான வந்துச்சு?’  என்று குத்திக்காட்டும் போது வெட்கத்தோடு தலை குனிந்து கொள்வாள்  அவள்.

பிரசவித்த மனைவியைப் பார்க்க வரும் எந்தக் கணவனுமே தன்னை ஒரு குற்றவாளியாகவேப் பாவித்துக் கொண்டு கை கட்டி நிற்கிறான்!

‘உன் பொண்டாட்டி உயிர் பொழைச்சது கடவுள் புண்ணியம். செத்துப் பொழச்சுட்டா  பாவம்..ஹ்ம்...’ என்று ஆயாக்கள் சொல்லிவிட்டுப் போகும்போது அந்தக் ‘கேடு கெட்டச் சுகம்தானே”  இதற்கெல்லாம் காரணம்? போதும் போதும்.. வேண்டாம் இனிமேல் என்று தீர்மானித்துக் கொண்டு அழைத்துச் செல்கிறான்.

குழந்தை தொட்டிலுக்குப் போகும் வரை எல்லாம்.

மறுபடியும் அவளைத் தீண்டும்போது ‘சூடு பட்டப் பூனை’ போல உடலைக் குறுக்கிக் கொள்வாள்.  ஒன்றோடு பட்ட பாடுகள்  போதும். இனியும் வேண்டாம் இந்த நரகம் என்று அவனை நெட்டித் தள்ளுவாள்.

கணவனின் தீண்டுதலுக்கும் தூண்டுதலுக்கும் கடுமையான தடைஉத்தரவு போடுவாள்.

ஊரடங்கு உத்தரவை காரணத்தோடுதான் போடமுடியும். காலம் முழுவதும் போட முடியுமா?

 தடையுத்தரவு ரத்தானதும் தெரியாது படையெடுத்துக் கிளம்புவதும் தெரியாது.

படுக்கையறை மீண்டும் யுத்தக் களமாகிவிடும்!

குழந்தை கைகால்களை அசைத்துக் காரணம் இல்லாமல் அழாது. அதுகூட  அப்போது அவர்கள் காதுகளில் விழாது.

யுத்தம் முடிவுக்கு வரும் முன்பே மீட்புப் படையாக மாறி எழுந்து போய் மார்போடு அணைத்துக்கொண்டு அமுதூட்டுவாள்.

முடிந்துபோன இன்பம் முட்டாள்தனமான  இன்பமாக அப்போது அவளுக்குள் இழையோடும்!

*

எனவே-

கல்யாணம் ஆன  மருத்துவர் பிரசவம் பார்ப்பது வேறு-

கல்யாணமே ஆகாத ஒரு கன்னிப்பெண் பிரசவம் பார்ப்பது வேறு!

அங்கே அனுபவப் பாடம் கண்ணுக்குள் தெரியும்.

இங்கே அநுமானப் பாடம் மட்டுமே நினைவில் ஓடும்!

அதுதான் கொடுமை!

உடல் இன்பம் என்னவென்றே அறியாமல் உதறித் தள்ளிவிட்டு பருவத்தே துறவுக்கு வந்துவிட்ட பெண்கள் பிரசவம் பார்க்கும் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.

‘பருவத் துறவி முதல் ‘பல்’ போனத் துறவிகள் வரை பெண்ணாசைக்குப் பலியாகிவிடுறார்கள்.

எங்கேனும் ஒரு பெண் துறவி அப்படிப் பலியாகியிருப்பாளா?

மாட்டாள்.

காரணம் அவள் வறுத்தெடுத்த விதையாகியிருப்பாள்.

மீண்டும் முளைவிட மாட்டாள்!

அப்படிப்பட்ட இளம் பெண்கள் மருத்துவம் பார்க்கும் உயரிய மருத்துவமனை வத்தலக்குண்டு ‘லெயோனார்டு’ மருத்துவமனை. அந்த மருத்துவமனையில்தான் அப்படி ஒரு உண்மைச் சம்பவமும் அன்று நடைபெற்றது!

*

எனது சகோதரி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது வழக்கம் போல   காலை உணவை எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்குள்  சென்றேன்.

வார்டு வராந்தாவின் இருமறுங்கிலும் நின்று கொண்டிருந்த  நோயாளிகளும்  உறவினர்களும் என்னை ஏற இறங்கப் பார்த்தபடி ஏதோ கிசுகிசுத்துக் கொண்டார்கள். 

எனக்கு ‘பக்..பக்’ என்றது. நடை தளர்ந்தது, மனம் உடைந்தது.

என் சகோதரியைச் சுற்றி சோகம் படந்த முகத்தோடு பலர் கூடி நின்றுகொண்டிருந்தார்கள்!

‘என்னாச்சு அக்காவுக்கு?’ என்று பய உணர்வோடு போய்க் கேட்டேன்.

‘உங்க அக்காவுக்கு  ராத்திரி குழந்தை பொறக்கறப்போ ரொம்ப ‘சீரியஸ்’ ஆயிடுச்சு. பெரிய டாக்டரம்மா வந்து பார்த்துட்டு தாய் போயிடும், இல்லேன்னா குழந்தை போயிடும். வேற வழியில்லை. கடைசியா மரியாள்ட்டக் கொண்டுபோய்ப் போட்டு ஜெபம் பண்ணுங்க’ என்று சொல்லீட்டாங்க தம்பி’ என்று என்னிடம் சொன்னார்கள்.

அப்பறம் என்னாச்சு? என்றேன்.

உடனே, அத்தனை கன்னியாஸ்திரிகளும் என் சகோதரியைத் தூக்கிக்கொண்டு மருத்துவ மனை வளாகத்துள் இருந்த மரியாள் சிலைக்குக் கொண்டுசென்று காலடியில் போட்டார்களாம். அவர்கள் அனைவரும் சுற்றிலும் மண்டியிட்டு நின்றுகொண்டு விடிய விடிய ஜெபம் செய்துகொண்டிருந்தார்களாம்!

‘நாங்களும் விடிய விடிய அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம் தம்பி. போன உயிர் காலையிலதான் திரும்புச்சு. உங்க அக்கா பொழைச்சது கடவுள் புண்ணியம்ப்பா’ என்று அவர்கள் சொன்னபோது நான் சிலையாகிப் போனேன்!

அக்காவைப் பார்த்தேன். மூச்சு இழையோடிக் கொண்டிருந்தது. என்ன குழந்தை என்றுகூடப் பார்க்கவில்லை. ஓடோடிச் சென்று அந்த மரியாள் சிலையையே வைத்தக் கண்  வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருந்தவன் நான்.

அதுவரை  எனக்கு அந்த மாதா சிலை சிமிண்டுக் கலவையினால் வார்க்கப்பட்ட ஒரு சிலை. ஆடைக்கு  நீலம், முகத்திற்கு ரோஜா, உதடுகளுக்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பெரிய சைஸ் பொம்மை!

அதன் பிறகுதான் அவள் அமைதியாக நின்று அருள்பாலிக்கும் உயிரோவியம்!

இக்கட்டுரையில் தொடக்கத்தில் ஒரு உயிரை இழந்துதான் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற மருத்துவ விஞ்ஞானத்தைப் பற்றிக் கூறியிருந்தேன்.

கடவுள் மனது வைத்தால் இரண்டு உயிர்களையும் ஒருசேரக் காப்பாற்ற முடியும் என்பது ஆன்மீக மெய்ஞானம். அதுதான் அன்றைக்கு  அங்கு நடந்தது.

ஒரு உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கை விரித்து விட்டது விஞ்ஞான மருத்துவம்.

இரண்டு உயிர்களையும் மீட்டுத் தந்தது மெய்ஞான  மருத்துவம்!

விஞ்ஞானம் ஒரு ஊனக் கண் தியானம்.

மெய்ஞானமோ ஞானக் கண் தியானம், மறந்துவிடாதீர்கள்.

விஞ்ஞானம் தோற்கக் கூடும். மெய்ஞானம் தோற்காது!

ஞானம் பெருகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com