16. சிக்குன்குனியா காய்ச்சல்

16. சிக்குன்குனியா காய்ச்சல்

சிக்குன்குனியா காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.

முந்தைய ஆறு அத்தியாயங்களில் டெங்கு காய்ச்சல் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் பார்த்தோம். அடுத்து, நாம் சிக்குன்குனியா காய்ச்சல் பற்றிப் பார்ப்போம்.

சிக்குன்குனியா காய்ச்சலும் நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான காய்ச்சல்தான். பல ஆண்டுகளாகத் தமிழகத்தை மட்டுமல்லாமல், இந்தியாவையே ஆட்டிப்படைத்து வருகிறது.

எங்கெல்லாம் பரவியுள்ளது..

இந்தியாவில் மட்டுமல்லாமல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பல்வேறு நாடுகள், மடகாஸ்கர், ஆசியாவில் சீனா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, கொரியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளிலும் இந்தக் காய்ச்சலின் பாதிப்பு இருந்து வருகிறது.

சிக்குன்குனியா என்றால் என்ன அர்த்தம்?

சிக்குன்குனியா என்பது ஆப்பிரிக்க மொழியான ‘மகோண்டீ’யில் (Makonde) இருந்து வந்தது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள், பல்வேறு மூட்டுகளின் வலியால் அவதிப்பட்டு, வளைந்து சுருண்டு படுத்துக்கொள்வார்கள். சிக்குன்குனியா என்றால், அந்த மொழியில் ‘வளைந்துவிடுதல்’ என்று பொருள்.

சிக்குன்குனியாவின் தோற்றமும்விளக்கமும்

இந்தக் காய்ச்சலின் பாதிப்பு 1779-ல்தான் முதன்முதலில் ஏற்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். ஆனால், இந்தக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கி விவரித்தவர்கள், மரியன் ராபின்சன் (Marion Robinson) மற்றும் லம்ஸ்டன் (Lumsden) ஆகியோர்தான். இவர்கள்தான், 1952-ல் மோஸாம்பிக் மற்றும் டான்ஸானியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இக்காய்ச்சல் குறித்து ஆராய்ந்தார்கள். 1955-ம் ஆண்டு இக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கினார்கள்.

இந்தியாவில் சிக்குன்குனியாவின் பாதிப்பு

இந்தியாவைப் பொறுத்தவரை, இவ்வகைக் காய்ச்சலின் பாதிப்பு முதன்முறையாக 1960 மற்றும் 1970-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அப்போது இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை. இந்தியாவுடன் சேர்ந்து பிற தெற்காசிய நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு, மீண்டும் 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் மீண்டும் இந்தியா முழுவதும் இந்தக் காய்ச்சலின் பாதிப்பு ஏற்பட்டது.

பிறகு, 2005, 2006 மற்றும் 2010-ம் ஆண்டு வரை இதன் தாக்கம் தொடர்ந்த்து. ஆனால், 2011-ம் ஆண்டில் இருந்து இதன் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரம், அங்கொன்றும் இங்கொன்றுமாக இக்காய்ச்சலின் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தக் காய்ச்சலுக்கு, அதாவது இந்த வைரஸ் வகைக்கான எதிர்ப்புத் திறன் மக்கள் உடலில் தோன்றியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால், மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ மீண்டும் பெரிய அளவில் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்படவில்லை.

எப்படிப் பரவுகிறது?

இந்த சிக்குன்குனியா காய்ச்சலையும் ஏடீஸ் வகை பெண் கொசுக்கள்தான் பரப்புகின்றன. இந்தக் கொசுவின் புராணத்தை நாம் ஏற்கெனவே படித்துத் தெரிந்துகொண்டோம். இவ்வகைக் கொசுக்கள், டெங்கு வைரஸை போலவே சிக்குன்குனியா வைரஸையும் பரப்புகின்றன.

எதனால் ஏற்படுகிறது?

இந்தக் காய்ச்சல் சிக்குன்குனியா (CHIK-V) வகை வைரஸ் வகையால் ஏற்படுகிறது. இந்த வைரஸில் இரண்டு உள்பிரிவுகள் உள்ளன. ஒன்று, ஆசிய பிரிவிலும், மற்றொன்று ஆப்பிரிக்கா பிரிவிலும் காணப்படுகிறது. இது ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ் வகையாகும். டோகோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், ஆரம்பத்தில் தசைகளிலும் மூட்டுகளிலும் பெருகுவதால்தான் மனிதர்களுக்குப் பல்வேறு தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இவை 60 முதல் 70 நானோமீட்டர் அளவு கொண்டவை. கோள வடிவத்தில் காணப்படும்.

கொசு கடித்த 3 முதல் 7 நாள்களுக்குள் நோயாளிக்கு சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்படும்.

தொந்தரவுகள்

  • காய்ச்சல், மூட்டுவலி இருக்கும்.
  • உடல் வலி, தலைவலி, மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்.
  • சிலருக்கு டெங்கு போல், தோல் சிவந்துபோகலாம் (Rash).
  • சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படலாம்.
  • பெரும்பாலும், ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், மூட்டுவலி, தசைவலி இரண்டும் பல மாதங்கள் வரைகூட நீடிக்கலாம்.
  • தாங்க முடியாத உடல்வலி, தசைவலி, மூட்டுவலி மற்றும் வீக்கம்தான் இக் காய்ச்சலின் சிறப்புத் தொந்தரவுகள்.

சிக்குன்குனியா போன்ற பிற பாதிப்புகள்

இவ்வகைக் காய்ச்சலின் பல தொந்தரவுகள் டெங்கு காய்ச்சலைப் போலவே இருக்கும். மேலும், ஜிக்கா (Zika) வைரஸ் பாதிப்பும் இதுபோன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். இதில் விசேஷம் என்னவென்றால், டெங்கு என்றாலும், சிக்குன்குனியா என்றாலும், ஜிக்கா என்றாலும், இந்த மூன்று வைரஸ் வகைகளையும் பரப்புவது ஏடீஸ் வகைக் கொசுக்கள்தான்.

மருத்துவப் பரிசோதனைஆய்வுக்கூடப் பரிசோதனை

நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது என்ன வகைக் காய்ச்சல் என்பதைக் கண்டறிய மருத்துவரை நாட வேண்டும். அவரது பரிசோதனைக்குப் பின் சில ஆய்வுக்கூடப் பரிசோதனைகளைச் செய்து சிக்குன்குனியா காய்ச்சலைப் கண்டுபிடிக்கலாம்.

பொதுவாக, காய்ச்சலுக்குச் செய்யும் ரத்தப் பரிசோதனைகள் (CBC), சிறுநீர் பரிசோதனைகள், நெஞ்சுப் பகுதி எக்ஸ்ரே ஆகிய அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை

மேலும், சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை மூலம் (RT – PCR – Reverse Transcriptase – Polymerase Chain Reaction) இந்தக் காய்ச்சலைப் பிற வகை வைரஸ் காய்ச்சலில் இருந்து எளிதாக அடையாளம் காணமுடியும்.

சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை காய்ச்சல் ஏற்பட்ட 6 நாள்களுக்குள் செய்வது நல்லது.

மேக்-எலிசா பரிசோதனை

ஆறு நாள்களுக்குப் பிறகும் காய்ச்சல் இருந்தால், மேக்-எலிசா (MAC-ELISA) பரிசோதனை செய்யவேண்டி இருக்கும். இதன்மூலம், இவ்வகை வைரஸ் வகைக்குக் எதிராக உருவான எதிர்ப்பாற்றல் புரதங்களை (IgM/IgG, Chikungunya Neutralizing antibodies) அளவிட முடியும்.

IgM வகை எதிர்ப்பாற்றல் புரதம், காய்ச்சல் ஏற்பட்ட 3 முதல் 5 வாரங்களில் ரத்தத்தில் உச்ச அளவை எட்டும். அவை தொடர்ந்து இரண்டு மாதம் வரை ரத்தத்தில் இருக்கும்.

சிகிச்சைகள்

சிக்குன்குனியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், இந்த வைரஸை அழிப்பதற்கும் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இவ்வகைக் காய்ச்சலுக்கும் பொதுவான சிகிச்சைகள், தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் என்ற அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொதுவான சிகிச்சை

இவ்வகை சிகிச்சையில், நோயாளிக்கு முதலில் ஓய்வு எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

காய்ச்சல் அதிகமாக இருந்தால், புற நோயாளியை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய கஞ்சி, பழரசம், இளநீர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். இது, அவர்கள் சோர்வைப் போக்கும்.

வாய்வழி உணவு உட்கொள்ள முடியாமல் போனால், மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்குத் தேவையான திரவ மருந்துகள், வைட்டமின் ஆகியவற்றை சிரை குழாய்கள் வழியாகச் செலுத்தி சிகிச்சை செய்ய வேண்டும்.

தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சை

நோயாளியின் காய்ச்சல், உடல் வலியைக் குறைப்பதற்காக பாரசிட்டமால் மருந்து உட்கொள்ள கொடுக்கலாம். இந்த மருந்தை உட்கொள்ள முடியாத நிலையில், காய்ச்சலை குறைப்பதற்கான திரவ மருந்தை சிரை வழியாகச் செலுத்த வேண்டும்.

இதேபோன்றே, நோயாளிக்கு குமட்டல், வாந்தி ஆகியவற்றைக் குறைப்பதற்கான மருந்துகளையும் தொடர்ந்து கொடுப்பதுடன், நோயாளியின் காய்ச்சல் அளவு, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசத் துடிப்பு, உள்செல்லும் நீர் மற்றும் வெளியேறும் நீரின் அளவு போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இந்த நோயாளிகளுக்கும் ஆஸ்பிரின் (NSAIDS), பிற வலி குறைப்பான் மருந்துகளை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்து ஆஸ்பிரின் மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், அதுகுறித்து மருந்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

இந்தக் காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.

தடுப்பு முறைகள்

வரும் முன் காப்பது சிறந்துதான். ஆனால், சிக்குன்குனியாவை அதுபோல் தடுக்க முடியாது. ஏனென்றால், அதற்கான தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொசு கடிக்காமல் தடுப்பது, கொசுக்களை ஒழிப்பு, சுற்றுப்புறத்தைச் சுற்றி நீர் தேங்காமல் தடுப்பது, தூய்மையாக வைத்துக்கொள்வது போன்றவைதான் இதற்கான ஒரே வழி.

அடுத்த வாரம் வேறு ஒரு வைரஸ் காய்ச்சல் குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com