மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)

ஒரு முன்னோட்டம்

இந்தப் பகுதியில் நாம் மஞ்சள் காய்ச்சல் குறித்து தெரிந்துகொள்ளப் போகிறோம். மஞ்சள் காயச்சல் என்றவுடன், பலரும் மஞ்சள் காமாலை என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல.

மஞ்சள் காமாலை என்பது ரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதால் ஏற்படுவது. மஞ்சள் காய்ச்சல் என்பது சிவப்பணுக்கள் அதிகமாகச் சிதைவதாலோ, கல்லீரல் வைரஸ் தொற்றுக்கு ஆட்படும்போதோ, அல்லது பித்த நீர் வெளியேறும் பாதைகளில் ஏற்படும் அடைப்பினாலோ உண்டாகலாம்.

மஞ்சள் காய்ச்சல் என்பது, டெங்கு, சிக்குன்குனியா போல ஒரு காய்ச்சல். இந்தக் காய்ச்சலும் ஏடீஸ் வகை பெண் கொசுக்களால்தான் ஏற்படுகிறது. ஆனால், இந்தக் காய்ச்சலால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படலாம். இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் வகையும், டெங்கு, சிக்குன்குனியாவை ஏற்படுத்தும் வைரஸ் வகையும் ஒன்றேதான்.

இந்த வகைக் காய்ச்சல் நமது நாட்டு மக்களை இதுவரை பாதித்ததில்லை. ஆனால், இந்த வகைக் காய்ச்சல் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள பெரும்பாலான நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டினர் பலரும் இந்த நாடுகளுக்குச் சென்றுவருவதால், இந்தக் காய்ச்சல் நமது நாட்டிலும் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, இந்தக் காய்ச்சல் குறித்தும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.

மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு

ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என சுமார் 47 நாடுகளில் இந்தக் காய்ச்சல் வைரஸ் சுழன்றுகொண்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில், 2013-ம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் வரை இறந்துபோயிள்ளனர்.

மஞ்சள் காய்ச்சல் வரலாறு

கடந்த 17, 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளிலேயே இந்தக் காய்ச்சலின் பாதிப்பு தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக,  அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பல நூற்றாண்டுக் காலமாக இந்தக் காய்ச்சல் ஏற்பட்டுக்கொண்டிருந்த போதும், எதனால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது என்று பலருக்கும் புலப்படவில்லை. ஏதோ ஒரு பாக்டீரியா தொற்றினால் ஏற்பட்டிருக்கலாம் என சிலரு கருதினார்கள். காற்றின் மூலமாகப் பரவி மனிதனை பாதிக்கிறது என்றும் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

1690-ம் ஆண்டு முதன்முறையாக இந்தக் காய்ச்சலால் அமெரிக்காவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஃபிலடெல்ஃபியா (1793), ஹைதி (1790, 1802), நியூ ஆர்லியன்ஸ் (1905) பகுதிகளில் இந்தக் காய்ச்சலின் பெரும் பாதிப்பினால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். 1899-ம் ஆண்டு, பனாமா கால்வாய்ப் பணியை ஃப்ரான்ஸ் அரசு நிறுத்தியதற்கு முக்கியக் காரணம், இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான பணியாளர்கள் மஞ்சள் காய்ச்சலாலும், மலேரியாவினாலும் இறந்ததுதான்.

1793-ல் ஃபிலடெல்ஃபியாவில் மஞ்சள் காய்ச்சலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது, அதுதான் அமெரிக்காவின் தலைநகராக இருந்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டனும், காய்ச்சல் காரணமாக ஃபிலடெல்ஃபியாவை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதியில் ஏற்பட்ட பாதிப்பின்போது, அங்கு போர் வீரர்களுடன் சென்ற நெப்போலியனின் மைத்துனர் சார்லஸ் லெக்லெர்க் (Charles Leclerc), மஞ்சள் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

1900-ம் ஆண்டு, ஜேம்ஸ் கரோல் (James Carroll) என்ற அமெரிக்க ராணுவ மருத்துவர், மஞ்சள் காய்ச்சல் நோயாளியைக் கடித்த அதே கொசுவைக் கொண்டு தன்னையும் கடிக்கச் செய்து, தனக்கும் மஞ்சள் காய்ச்சல் ஏற்படச் செய்து, அதன்மூலம், கொசுவால்தான் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார். இந்தக் கண்டுபிடிப்புக்கு, அவரது நண்பர் வால்டர் ரீடு (Walter Reed) பெரும் உதவியாக இருந்தார்.

மஞ்சள் காய்ச்சலுக்கு இன்று நாம் பயன்படுத்தும் தடுப்பூசியை தென் ஆப்பிரிக்க மருத்துவ அறிஞர் மாக்ஸ் தீலர் (Max Theiler) கண்டுபிடித்தார். 1938-ம் ஆண்டில் இருந்து இந்த ஊசி பயன்பாட்டில் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்காக, 1951-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மாக்ஸ் தீலருக்கு வழங்கப்பட்டது.

மஞ்சள் காய்ச்சல் வைரஸ் குறித்து..

இந்த வைரஸ் ஃப்ளாவி வைரஸ் வகையைச் சேர்ந்தது. கோள வடிவத்தில், 30 முதல் 60 நேனோ மீட்டர் அளவு கொண்டதாக இருக்கும். இதன் உடலில் ஒரு சிறிய ஆர்என்ஏ சுருள் இருக்கும். மஞ்சள் காய்ச்சல் வைரஸ்தான், முதன்முதலாக கொசுக்களால் பரவும் வைரஸ் என்று கண்டறியப்பட்ட வைரஸ் ஆகும். இந்த வைரஸ் இன்றுவரை ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்துகொண்டே இருக்கிறது.

மஞ்சள் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள்

மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை ஏடீஸ் (Aedes) பெண் கொசுக்கள் மட்டுமே பரப்புவதில்லை. ஹீமோகோகஸ் (Haemogogas) என்ற வகைக் கொசுக்களும் பரப்புகின்றன.

காய்ச்சலின் பல்வேறு முகங்கள்

இந்த மஞ்சள் காய்ச்சல் மூன்று விதமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

1. காடுகளில் காணப்படுவது

2. ஆப்பிரிக்காவில் காணப்படுவது

3. நகர்ப்புறங்களில் காணப்படுவது

காடுகளில் காணப்படுவது (Sylvatic Yellow Fever)

காடுகளில் வாழும் குரங்கு போன்ற விலங்குகளுக்கு கொசுக்களால் ஏற்படும் மஞ்சள் காய்ச்சல். இவ்வகைக் காய்ச்சல், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் ஏற்படுகிறது.

ஆப்பிரிக்காவில் காணப்படுவது (Intermediate Yellow Fever)

இந்த வகை மஞ்சள் காய்ச்சல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் மட்டும் காணப்படும். இங்கு, கொசு மூலம் குரங்குகளுக்கும், குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் மஞ்சள் காய்ச்சல் பரவுகிறது.

நகர்ப்புறங்களில் காணப்படுவது (Urban Yellow Fever)

நகரப்புறங்களில் உள்ள ஏடீஸ் கொசுக்கள், இந்த வைரஸை ஒரு மனிதரிடம் இருந்து இன்னொருவருக்கு பரப்புகின்றன.

மஞ்சள் காய்ச்சலால் ஏற்படும் தொந்தரவுகளும் நோய் அறிகுறிகளும்

கொசு கடித்த பிறகு, உடலுக்குள் வைரஸ் கிருமி நுழைந்த 3 முதல் 6 நாள்களுக்குள் தொந்தரவுகள் ஏற்பட ஆரம்பிக்கும். பிற கொசுவினால் பரவும் வரைஸ் காய்ச்சல் போலவே, இவர்களுக்கும் காய்ச்சல், தலைவலி (தாங்கமுடியாத தலைவலியாக இருக்கலாம்), மூட்டுகளிலும், தசைகளிலும் வலி ஏற்படலாம்.

சிலருக்குக் கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படலாம். இது பெரும்பாலும் மூன்றாவது நாள் ஏற்படும். உடலிலும் குடலிலும் ரத்தக் கசிவுகள் ஏற்படலாம். இரைப்பை, குடல், ரத்தக் கசிவுகளால் ரத்த வாந்தி, மலம் கறுத்துப்போதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இவையெல்லாம் அபாய எச்சரிக்கை மணிகள்.

பெரும்பாலானவர்கள், 3 அல்லது 4 நாள்களிலேயே காய்ச்சல் குறைந்து பழைய நிலையை அடைந்துவிடுவார்கள். ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல் அடுத்த கட்டத்தை அடைந்து உடலை வெகுவாகப் பாதிக்கும்.

மஞ்சள் காய்ச்சல் போன்ற பிற பாதிப்புகள்..

மஞ்சள் காய்ச்சலை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?

பலருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தாலும், அதிலிருந்து மஞ்சள் காய்ச்சலை வேறுபடுத்திக் கண்டறிய வேண்டும். மஞ்சள் காய்ச்சலாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். பிற காரணங்களாலும் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், மலேரியா, எலிக்காய்ச்சல், பிற வைரஸ் பாதிப்புகளால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு (அதாவது, கல்லீரல் வைரஸ் காய்ச்சல்), காய்ச்சலுடன் ஏற்படும் ரத்தக்கசிவு பாதிப்புகள், டெங்கு ஆகியவற்றில் இருந்தும் மஞ்சள் காய்ச்சலை வேறுபடுத்திக் கண்டறிய வேண்டும்.

பரிசோதனைகள்

டெங்கு காய்ச்சல் போல இவர்களுக்குப் பொதுவான ரத்தப் பரிசோதனைகளான சிறுநீர்ப் பரிசோதனைகள், மலேரியா, எலிக்காய்ச்சலுக்கான பரிசோதனைகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். அத்துடன், மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கண்டறியும் பரிசோதனை செய்ய வேண்டும். எதிர்ப்பாற்றல் புரதப் பரிசோதனையில் IgM மற்றும் IgG பரிசோதனைகளும் அடங்கும். இதனை எலீசா பரிசோதனை மூலமாகக் கண்டறியலாம். மேலும், MIA எனப்படும் பரிசோதனையும் உண்டு.

(இப்பரிசோதனைகளைச் செய்யும்போது, மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு IgM எதிர்ப்பாற்றல் புரதங்கள் ரத்தத்தில் நீண்ட காலம் இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்).

Plague Reduction Neutralisation Test, பிசிஆர் (RT-PCR) மஞ்சள் காய்ச்சல் ஆர்என்ஏ பரிசோதனை (Yellow Fever Viral RNA Test) ஆகிய பரிசோதனைகள் மூலமும் மஞ்சள் காய்ச்சலை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

சிகிச்சைகள்

இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை அழிக்கவும் மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. எனவே, டெங்கு, சிக்குன்குனியா போலவே, தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் மற்றும், நோய் பாதிப்பில் இருந்து உடலைப் பாதுகாப்பதற்கான சிசிக்சைகள் என்ற வகையில்தான் இதற்கு சிகிச்சை செய்யவேண்டி உள்ளது.

காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகளைக் குறைப்பதற்கான மருந்துகள், உடலுக்குத் தேவையான திரவங்களைத் தருவதற்கான மருந்துகள், நோயாளி பாணியில் சொல்ல வேண்டுமென்றால், ‘குளுக்கோஸ் ஏற்றுவது’, அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டால், தேவையான ரத்தம் ஏற்றுவது, கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படாமல் கண்காணித்து சிகிச்சை அளிப்பது, பிற பாக்டீரியா போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பது ஆகியவை இந்தக் காய்ச்சலுக்கான சிகிச்சையின் முக்கிய அம்சங்களாகும். ஆகவே, இவ்வகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பெரும்பாலும் மருத்துவமனையில் சேர்த்து, முறையாகக் கண்காணித்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

வராமல் தடுக்க..

இந்தக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள் கண்டறிந்து பயன்படுத்தப்படுகிறது. 17D மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி உள்ளது. இதனைப் போட்டுக்கொண்டால், பத்து நாள்களில் இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகிறது. ஒரு மாதத்துக்குள் 99 சதவீத எதிர்ப்பாற்றலை உடல் பெற்றுவிடும்.

எனவே, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். அதேபோல், மேற்கண்ட நாடுகளில் இருந்து வருபவர்களும், மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்கான சான்றைக் காட்டினால்தான் இந்தியா போன்ற நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தத் தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொண்டால் போதும். ஊக்க ஊசிகள்கூட தேவையில்லை. வாழ்நாள் முழுவதும் இந்தக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பாற்றல் கிடைத்துவிடும்.

வேறு ஒரு வைரஸ் காய்ச்சலுடன் அடுத்து சந்திப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com