கேரள கன்னியாஸ்திரி வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் மர்ம மரணம்

முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக கேரள கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள கன்னியாஸ்திரி வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் மர்ம மரணம்


முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக கேரள கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பேராயர் பிராங்கோ நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

வழக்கின் முக்கிய சாட்சியான பாதிரியார் சூரியகோஸ் கட்டுதாரா பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணம் மர்ம மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பேராயராக இருந்த முலக்கல், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு தருணங்களில் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக, கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து போலீஸார் பேராயர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

எனினும் கன்னியாஸ்திரியின் இந்த புகாரை மறுத்து வந்த முலக்கல், தனது பேராயர் பதவியை ராஜிநாமா செய்தார். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக பலரும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பேராயர் கடந்த மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் கோட்டயம் மாவட்டம், பாலாவில் உள்ள சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இதையடுத்து, கடவுச் சீட்டை ஒப்படைத்து விட்டு கேரளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்காக இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டும்தான் கேரளத்துக்கு வர வேண்டும் என்றும் நிபந்தனையின் அடிப்படையில் முலக்கலுக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டு, பஞ்சாப்பில் தங்கியிருந்த நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com