அமிருதசரஸ் விபத்து குறித்து ரயில் ஓட்டுநர் பொய் சொல்கிறார்: நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்

தசரா விழாவின் போது தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய ரயிலை இயக்கிய ஓட்டுநர், ரயில் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக பொய் சொல்கிறார்  என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அமிருதசரஸ் விபத்து குறித்து ரயில் ஓட்டுநர் பொய் சொல்கிறார்: நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்


அமிருதசரஸ்: தசரா விழாவின் போது தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய ரயிலை இயக்கிய ஓட்டுநர், ரயில் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக பொய் சொல்கிறார்  என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

ஏராளமானோர் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்ததைப் பார்த்ததும், ரயில் ஓட்டுநர் ஏன் ரயிலை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த ரயில் ஓட்டுநர், கூட்டத்தில் இருந்தவர்கள் ரயில் மீது கல் வீசித் தாக்கியதால்தான் ரயிலை நிறுத்தவில்லை என்று கூறியிருந்தார்.

இதனை முற்றிலும் மறுத்திருக்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். ரயிலை நிறுத்துவது இருக்கட்டும், ரயிலின் வேகத்தைக் கூட ஓட்டுநர் குறைக்கவில்லை. ஒரு சில நொடிகளில் ரயில் எங்களைக் கடந்து சென்றுவிட்டது என்கிறார் ஷெய்லேந்தர் சிங்.

மேலும், நிகழ்விடத்தில் ஏராளமானோர் ஒரு நொடியில் உயிரிழக்க பலர் காயமடைந்திருந்த நிலையில் நாங்கள் கற்களைப் பொறுக்கி ரயில் மீது வீசுவது என்பது நடக்கக் கூட விஷயமா? அதுவும் அந்த வேகத்தில் செல்லும் ரயில் மீது கற்களை வீசினோம் என்பது சாத்தியமா? ரயில் ஓட்டுநர் பொய் சொல்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரயில் ஓட்டுநர் கூறுகையில், தண்டவாளத்தில் ஏராளமானோர் நின்றிருப்பதைப் பார்த்ததும் அவசரகால பிரேக்கை அழுத்தினேன். ஆனாலும் ஏராளமானோர் தண்டவளாத்தில் நின்றிருந்தனர். ஹாரனையும் தொடர்ந்து அழுத்தினேன் என்கிறார்.

ரயிலை நிறுத்தலாம் என்று நினைக்கையில், ஏராளமானோர் ரயில் மீது கற்களை வீசினர். எனவே, ரயிலில் இருக்கும் பயணிகளின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு ரயிலை நிறுத்தாமல் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

ஆனால், ரயில் ஓட்டுநரின் வாதத்தை, விபத்தை நேரில் பார்த்தவர்கள் முற்றிலும் நிராகரிக்கின்றனர். ரயிலை நிறுத்துவது இருக்கட்டும்,  அதன் வேகத்தைக் கூட குறைக்கவில்லையே என்கிறார்கள் வேதனையோடு.

 
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் தசரா விழாவின் போது தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com