ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவர்- நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. 
அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த வழக்கில் என்னை ஒரு தரப்பாகச் சேர்க்கக் கோரி நான் தாக்கல் செய்த மனு மீது, எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிடுகையில்,  ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழுவுக்கு தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் இல்லை. அக்குழு தெரிவித்துள்ள கருத்தில் தமிழக அரசின் வாதங்கள் இல்லை. எனவே, இந்த விவகாரத்தை தீர்ப்பாயம் விரிவாக ஆராய வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொர்பாக தமிழக அரசு உரிய காரணங்களைக் தெரிவிக்க வேண்டும் என்றனர். 
இதைத் தொடர்ந்து, மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் முன்வைத்த வாதம்: 
நீதிபதி தருண் அகர்வால் குழு சமர்பித்துள்ள அறிக்கையில், குழு ஆய்வு செய்த இடத்தில் 3.5 லட்சம் மெட்ரிக் டன் தாமிரக் கழிவுகள் பட்டா நிலம் எனக் கூறப்படும் இடத்தில் கொட்டப்பட்டுள்ளது எனவும், அக்கழிவுகளை 12 மீட்டர் உயரம் வரை குவித்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் கொட்டப்படும் தாமிரக் கழிவுகள் விதி மீறலுக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவே நிலத்தடி நீர் மாசுபாட்டுக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இவற்றை தருண் அகர்வால் குழு பரிசீலிக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதியில் குடிநீரில் மொத்தம் கரைந்துள்ள திடப்பொருள்கள் (டிடிஎஸ்) உப்புத்தன்மையை அதிகரித்து வருகிறது. மாசுக் கட்டுப்பாடு விதிகளை ஸ்டெர்லைட் மீறுவது இது முதல் முறையல்ல. இது தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தடை விதித்த தமிழக அரசின் நிலைப்பாடு சரியே. இது தொடர்பாக கடந்த மே 29-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து,வேதாந்தா குழுமம் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம்,தமிழக அரசு தவறான தகவல்களை தீர்ப்பாயத்தில் அளித்து வருகிறது. 
உண்மையான தரவுகளை முன்வைக்க வேண்டியது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கடமையாகும். பொதுவாகவே தமிழகத்தின் நிலத்தடி நீரின் டிடிஎஸ் அதிகமாகவும், பெரும்பாலும் உப்புத்தன்மையுடனும் காணப்படுகிறது. குறிப்பாக, கடலுக்கு அருகில் தூத்துக்குடி இருப்பதால், நிலத்தடி நீரில் டிடிஎஸ் அளவு அதிகமாகக் காணப்படுகிறது. தவிர, ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசு அடையவில்லை. எனவே, ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசாணைக்கு எதிரான மேல்முறையீட்டை பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்கலாம்என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் எதிர்மனுதாரரான வைகோ தனது வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் தயாரிக்கப்படும் உலையின் உயரம் 60 மீட்டர்தான் உள்ளது. ஒரு நாளைக்கு 391 டன் உற்பத்தி ஆகும் போது அந்த உயரம் சரிதான். ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 1,200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில், வெளி மாநிலங்களில் இருந்து குண்டர்களும், நக்ஸல்களும் வந்தார்கள் என ஸ்டெர்லைட் வழக்குரைஞர் கூறியது பொய். வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என பொதுமக்கள் லட்சம் பேருக்கு மேல் போராட்டத்தில் திரண்டனர். அதில் 13 பேர் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தமிழக அரசின் காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல், இந்த வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும். மேலும், தீர்ப்பாயத்தின் இணையதளத்திலும் தீர்ப்பு பதிவேற்றப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com