ராஜஸ்தானிலும் இழுபறி... சுயேட்சைகளிடம் ஆதரவு கோருகிறதா காங்கிரஸ்?

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 
ராஜஸ்தானிலும் இழுபறி... சுயேட்சைகளிடம் ஆதரவு கோருகிறதா காங்கிரஸ்?


5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும், தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இழுபறியான நிலையும் நீடித்து வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 100 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி 110 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வந்தது. ஆனால், அதன்பிறகு காங்கிரஸ் கட்சி 90 தொகுதிகளிலும், பாஜக 87 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று இழுபறி நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், 

"அரிதிப் பெரும்பான்மையை நோக்கி காங்கிரஸ் நகர்ந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவில் நாங்கள் உறுதியாக முழுப்பெரும்பான்மை பெறுவோம். இருப்பினும், பாஜக எதிர்ப்பு கட்சிகள் எங்களுக்கு ஆதரவளிக்கலாம். நாங்கள் அதை வரவேற்கிறோம்" என்றார்.  

அங்கு பகுஜன் சமாஜ் கட்சி 4 தொகுதிகளிலும், சுயேட்சை மற்றும் இதர கட்சிகள் 18 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதனால், இவர்களது முன்னிலை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.   

முன்னதாக, சச்சின் பைலட் சுயேட்சை மற்றும் இதர கட்சிகளின் ஆதரவை கோருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com