மத்திய அமைச்சர் குஷ்வாஹா திடீர் ராஜிநாமா: பாஜக கூட்டணியில் இருந்தும் விலகல்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் சமதா (ஆர்எல்எஸ்பி) கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் குஷ்வாஹா திடீர் ராஜிநாமா: பாஜக கூட்டணியில் இருந்தும் விலகல்


மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் சமதா (ஆர்எல்எஸ்பி) கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா திடீரென ராஜிநாமா செய்துள்ளார். மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அவரது கட்சி விலகியுள்ளது.
பதவி விலகல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) தலைமையில் நான் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்துள்ளேன். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பணியாற்றாமல், அரசியல் எதிரிகள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு தெரிவிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தில்லியில் குஷ்வாஹா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமது கட்சி விலகுவது என்று முடிவெடுத்திருக்கும் தகவலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் 2014ஆம் ஆண்டு பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், நல்ல காலம் பிறக்கும் என்று மக்கள் நம்பினர். பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் என்பதால், அப்பிரிவு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து மக்களை மோடி ஏமாற்றி விட்டார். இதனால் பிகாரில் இந்த முறை ஒரு மக்களவைத் தொகுதியில் கூட பாஜக கூட்டணியால் வெற்றி பெற முடியாது. இதேபோல், மத்திய அமைச்சரவையை பிரதமர் மோடி ரப்பர் ஸ்டாம்பாக்கி விட்டார். மத்திய அமைச்சரவையில் விவாதிக்காமலேயே முடிவுகளை மோடி சொந்தமாக எடுத்து வருகிறார். இது அரசியலமைப்புக்கு விரோதமானதாகும். ஒபிசி தொடர்பான கணக்கெடுப்பு விவரத்தை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் ஒருவித பீதியும், குழப்பமும் நிலவுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டத்தையே பாஜக செயல்படுத்துகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்போ, சமூக நீதிக்கு எதிரான அமைப்பாகும். 
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து எனது கட்சி விலகிவிட்டது. எதிர்க்கட்சி கூட்டணியில் சேரும் திட்டமும் எங்கள் கட்சியிடம் உள்ளது. பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் எனக்கு எதிராக செயல்பட்டார் என்றார் குஷ்வாஹா.
சோனியாவுடன் விரைவில் சந்திப்பு: காங்கிரஸ் தலைமையிலான எதிரணியில் ஆர்எல்எஸ்பி கட்சி சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை குஷ்வாஹா விரைவில் சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் குஷ்வாஹாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எல்எஸ்பி கட்சியிலுள்ள 2 எம்எல்ஏக்கள், பாஜக கூட்டணிக்கு அணி மாறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ், ஆர்ஜேடி வரவேற்பு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஆர்எல்எஸ்பி கட்சி விலகியிருப்பதை காங்கிரஸ் கட்சியும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியும் வரவேற்றுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவுகளில், ஆட்சியில் இருப்போரிடம் உண்மையை தெரிவித்ததற்கு குஷ்வாஹாவுக்கு பாராட்டுகள்; புதிய இந்தியாவை நாம் படைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் கூறுகையில், ஜனநாயகத்தை காக்க சரியான முடிவையே குஷ்வாஹா எடுத்துள்ளார். மத்தியில் ஆட்சியிலிருந்து பாஜகவை நீக்குவதற்கு இனி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பது குறித்து குஷ்வாஹா முடிவெடுக்க வேண்டும் என்றார்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆர்எல்எஸ்பி கட்சி அங்கம் வகித்தது. இருப்பினும், பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், ஆர்எல்எஸ்பி கட்சிக்கும் மோதல் போக்கு நிலவியது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 2 தொகுதிகளுக்கு மேல், ஆர்எல்எஸ்பி கட்சிக்கு ஒதுக்கப்பட மாட்டாது என்று பாஜகவும் திட்டவட்டமாக அறிவித்தது. இதனால் அதிருப்தியில் இருந்த குஷ்வாஹா, பாஜக கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகும் முடிவை எடுத்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஆர்எல்எஸ்பி கட்சி 2 தொகுதிகளில் வென்றது. இதுதவிர்த்து, அக்கட்சிக்கு பிகாரில் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து ஆர்எல்எஸ்பி கட்சி விலகியிருப்பது அக்கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகவே கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com