பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (டிச.11) தொடங்கவுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்


பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (டிச.11) தொடங்கவுள்ளது. இதில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், இந்திய ரிசர்வ் வங்கி 
கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்தக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 20 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத் தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்தத் தொடரில் 23 மசோதாக்கள், பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அதேவேளையில், புதிதாக 20 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 2 மசோதாக்கள் திரும்பப் பெறப்பட உள்ளன.
முக்கிய மசோதாக்கள்: முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, ஒழுங்குபடுத்தப்படாத டெபாசிட் திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா, மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள், இந்தத் தொடரில் எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றன.
காங்கிரஸ் வலியுறுத்தல்: 
அதேவேளையில், மக்களவையிலும் மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த மசோதா, மாநிலங்களவையில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறாத நிலையில், 2014-இல் அந்த மசோதா காலாவதியானது.
தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநில அரசுகளுக்கு அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினார். அதில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் செவ்வாய்க்கிழமைதான், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளன.
சிவசேனை மிரட்டல்: 
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற சிவசேனை எம்.பி. சந்திரகாந்த் கைரே, ராமர் கோயில் கட்டுவது தொடர்பான சட்ட மசோதாவை, இக்கூட்டத் தொடரில் 
மத்திய அரசு கொண்டு வர வேண்டும்; இல்லையெனில் அவை சுமுகமாக நடைபெற நாங்கள் 
அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார். 

ரஃபேல் விவகாரத்தை எழுப்புவோம்: காங்கிரஸ் 
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று குளிர்கால கூட்டத் தொடரில் வலியுறுத்த உள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது. இதேபோல், இதர உயர் அமைப்புகளின் தன்னாட்சியிலும் மத்திய அரசு தலையிட்டு, அவற்றை வலுவிழக்கச் செய்கிறது. இந்த விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தி வருகிறது. இதுதொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவோம் என்றார் அவர்.
விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக, காங்கிரஸ் மட்டுமன்றி தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

விவாதிக்க மத்திய அரசு தயார்: மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அழைப்பின்பேரில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படுவதற்கு, அரசும் எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். அவை விதிகளுக்கு உள்பட்டு எழுப்பப்படும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்ததாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கஜா, மேக்கேதாட்டு: தமிழக எம்பிக்கள் முடிவு
இந்தக் கூட்டத்தொடரில், கஜா புயல் நிவாரணம், மேக்கேதாட்டு அணை விவகாரம், விவசாயிகளின் நிலைமை, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களின் நிலை, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசு விவகாரங்களை எழுப்ப முடிவு செய்துள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக , திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று, மேக்கேதாட்டு விவகாரத்தையும் குளிர்கால கூட்டத்தொடரில் தமிழக எம்பிக்கள் எழுப்புவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com