வியாழக்கிழமை 13 டிசம்பர் 2018

ராஜஸ்தான், தெலங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு

DIN | Published: 06th December 2018 04:18 AM


ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை மாலையுடன் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக, வரும் வெள்ளிக்கிழமை (டிச.7) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தம் 200 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணமடைந்து விட்டதால், அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 189 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 2,274 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த் குமார் புதன்கிழமை கூறியதாவது:
ராஜஸ்தான் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம், புதன்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 
இந்த தேர்தலில் 4.77 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
பாஜக ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், அக்கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சில மத்திய அமைச்சர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். முதல்வர் வசுந்தரா ராஜேவும் தினசரி பல பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
காங்கிரஸ் சார்பில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரம் செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.


தெலங்கானாவில்...: இதேபோல், தெலங்கானாவிலும் புதன்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா பேரவைக்கு வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், மாநில காபந்து முதல்வரான சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தனித்தும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. பாஜகவும் தனித்துப் போட்டியிடுகிறது. 
இதேபோல், அஸாதுதீன் ஒவைஸியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் களத்தில் உள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றனர். ராகுல் காந்தியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டனர்.


டிச.11-இல் முடிவுகள் அறிவிப்பு: இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள், வரும் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளிலும், மத்தியப் பிரதேசம், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 28-ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளும், வரும் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மற்றவர்கள் மீது குற்றம்சாட்டி தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம்

- ராகுல் காந்தி

 


சோனியா, ராகுலின் வருமான வரிக்கணக்கு விவரங்களை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருப்பது மத்திய அரசுக்கான வெற்றி

- பிரதமர் மோடி

More from the section

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு: நாளை தீர்ப்பு
மிஸோரம் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 40-இல் 36 பேர் கோடீஸ்வரர்கள்: அடேங்கப்பா ரிப்போர்ட்!
ராஜஸ்தான் முதல்வராகிறார் அஷோக் கெலாட்: இன்று மாலை அறிவிப்பு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி 
தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு