செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

இடைத்தரகர் மிஷெலுக்கு ஆதரவாக ஆஜரான காங்கிரஸ் பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

DIN | Published: 06th December 2018 02:41 AM


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான காங்கிரஸைச் சேர்ந்த வழக்குரைஞர், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணைக்காக, துபையிலிருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை நாடு கடத்தி வரப்பட்ட மிஷெல், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருக்காக அல்ஜோ கே ஜோசப் என்ற வழக்குரைஞர் ஆஜரானார். இவர், இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஆவார். இதனை குறிப்பிட்டு, பாஜக விமர்சித்தது. 
இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிறிஸ்டியன் மிஷெலுக்காக ஆஜராகும் முடிவை, அல்ஜோ கே ஜோசப் தன்னிச்சையாக எடுத்துள்ளார். கட்சியுடன் இதுதொடர்பாக எந்த ஆலோசனையும் அவர் மேற்கொள்ளவில்லை. இத்தகைய செயல்களை, இளைஞர் காங்கிரஸ் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. தனது முடிவு குறித்து ஜோசப் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாததால், இளைஞர் அணியின் சட்டப் பிரிவில் இருந்தும், கட்சியிலிருந்தும் அவர் உடனடியாக நீக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்தபோதிலும், அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கைகளில் ஜோசப் தீவிரமாக பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
 

More from the section

மிஸோரமில் வாக்கு எண்ணிக்கை முடிவு: 26 இடங்களில் வென்று ஆட்சியைப்  பிடித்த மிஸோ  தேசிய முன்னணி  
மகாத்மா காந்தி அன்றே சொன்னார்.. காங்கிரஸ் ஜெயிக்கும் என்று
தெலங்கானாவில் டிஆர்எஸ்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 3 போலீஸார் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் கொள்ளை
தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு சந்திப்பு