திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

அவசரச் சட்டம்தான் தீர்வு!

By ஆசிரியர்| Published: 20th October 2018 01:34 AM

பூஜைகளுக்குத் தடை ஏற்படாமல் வழக்கம் போல சபரிமலையில் சந்நிதானம் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபடுவது தொடர்வது ஆறுதல் அளிக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனக்கொந்தளிப்பும், போராட்டமும் கோயிலில் சம்பிரதாயச் சடங்குகளை முடக்கிவிடாமல் இருப்பது, தந்திரி, சாந்திகள் என்றழைக்கப்படும் பூஜாரிகள், பந்தள ராஜ குடும்பத்தினர் ஆகியோரின் அதீத கடமையுணர்வின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் எழுந்திருக்கும் பக்தர்களின் ஏகோபித்த எதிர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. ஐயப்ப பக்தி எந்த அளவுக்கு இருந்திருந்தால், இப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராட முன்வந்திருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தங்களுக்கு சபரிமலைக்குச் செல்லும் சுதந்திரம் கிடைத்திருப்பதாக அவர்கள் மகிழவில்லை. வழிவழியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சம்பிரதாயம் தகர்க்கப்படுகிறதே என்று குமுறுகிறார்கள்.
சபரிமலையில் பெண்களுக்கான உரிமை பாதிக்கப்படுவதாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களுக்கான சமஉரிமையை நிலைநாட்டி இருப்பதாகவும் பெரும்பாலான ஆங்கில, வடநாட்டு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருப்பது புரிதல் இல்லாமையின் வெளிப்பாடு என்றுதான் கொள்ள வேண்டும். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருப்பதுபோல, இறை நம்பிக்கையும், சமயச் சம்பிரதாயங்களும் இந்திய சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆழமாக ஊன்றி நிற்பவை. இந்திய சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ளாமல், அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் பொருத்தமான சிந்தனையையும், கருத்துக்களையும் இங்கே நடைமுறைப்படுத்த நினைப்பது தவறு.
சபரிமலையில் செய்தி சேகரிக்க ஊடகங்கள் அனுப்பியிருந்த மூன்று பெண்களில் இருவர் இந்து மதத்தைச் சாராதவர்கள். ஆண்டுதோறும் சபரிமலையில் காவல் பணிக்குச் செல்லும் காவலர்கள்கூட விரதம் இருப்பவர்களாக இருப்பது வழக்கம் என்பது தெரியுமா? அப்படி இருக்கும்போது மத நம்பிக்கையை அவமதிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பெண் நிருபர்களை, அதுவும் சபரிமலை ஐயப்பனில் நம்பிக்கை இல்லாதவர்களை அனுப்பியதை என்னவென்று வர்ணிப்பது?
பெண்ணுரிமை கிடைத்தது என்பதை உலகுக்குப் பறைசாற்ற சபரிமலைக்கு அனுப்பப்பட்ட பெண்ணியவாதியில் ஒருவர், ரெஹானா பாத்திமா என்கிற மாடல் அழகி. தனது அரைநிர்வாண விளம்பரங்களால் பிரபலமானவர். ஏக்கா என்கிற திரைப்படத்தில் புரட்சிகரமாக நிர்வாணமாக நடித்தவர். இவருக்குக் கருப்பு வேடம் கட்டி, நெற்றியில் திருநீறு பூசி, துளசிமாலை அணிவித்துப் பெண் பக்தையாக, பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி சபரிமலைக்கு அனுப்புகிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் வக்கிரம் எத்தகையது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்களுக்குப் பெண்ணுக்கான சம உரிமையைவிட, ஐயப்பன் என்கிற இறைநம்பிக்கையை அவமானப்படுத்துவதுதான் நோக்கம் என்பது வெளியாகிறது.
ஜப்பானில் ஹோமினே சாந்தி என்கிற பெளத்த ஆன்மிகத் தலம் இருக்கிறது. யுனெஸ்கோவின் உலக கலாசார சின்னங்களில் அதுவும் ஒன்று. இங்கே பெண்களுக்கு அனுமதியில்லை. அது குறித்து, ஜப்பானியப் பெண்களும், சீர்திருத்தவாதிகளும், ஜப்பானிய உச்சநீதிமன்றமும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
மதச் சடங்குகளும் ஆசாரங்களும் எப்படி நடைபெற வேண்டும் என்பதை நீதிமன்றங்களோ, ஆட்சியாளர்களோ தீர்மானிக்க முடியாது. முத்தலாக் சட்டத்தையே எடுத்துக் கொண்டாலும் அதில் நீதிமன்றமோ, அரசோ தலையிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் முத்தலாக்கை ஆதரிப்பவர்களல்ல. பாகிஸ்தான், மொராக்கோ, ஈரான், வங்கதேசம், சூடான், ஜோர்டான், சிரியா, ஏமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியும்.
அவர்களது எதிர்ப்பெல்லாம் முத்தலாக் தடைச் சட்டத்தை நீதித்துறையும், அரசும் திணிக்க முற்பட்டதுதான். எல்லா இஸ்லாமிய அமைப்புகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் மூலமே முத்தலாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி இருந்தால், இஸ்லாமிய சமுதாயம் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.
சபரிமலையில் குறிப்பிட்ட வயதுப் பிரிவினருக்கு மட்டுமே அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, சபரிமலையிலும், தர்மசாஸ்த்திரத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் எனும்போது, இதில் சம்பந்தப்படாத சிலரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதுதான் பிரச்னைக்கே காரணம்.
மக்கள் மன்றத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், முதல்வர் பினராயி விஜயன் மழை வெள்ள சேதத்துக்கு நிதிநிரட்ட வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு விட்டார். தேவஸ்வம் போர்டு சபரிமலை நிலைமை குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதெல்லாம் சரி, மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்ள முடியுமானால், சபரிமலைத் தீர்ப்புக்கு ஏன் அவசரச் சட்டம் கொண்டுவரத் தயங்குகிறது? நரேந்திர மோடி அரசும் தங்களை முற்போக்குவாதி அரசாகக் காட்டிக்கொள்ள எத்தனிக்கிறதா என்ன?
 

More from the section

விண்ணளவு வெற்றி!
வீரம் மதிக்கப்படவில்லை!
இன்னொரு அணைக்கு என்ன அவசியம்?
கனவு நனவாகாது!
ஏன் இந்த தயக்கம்?