கையறு நிலை...

பத்து நாள்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு விடுத்திருந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை நகரில் செயல்படும்

பத்து நாள்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு விடுத்திருந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை நகரில் செயல்படும் தண்ணீர் லாரிகள் தங்களது இயக்கத்தை நிறுத்திவிட்டிருந்தன. இதனால் பல உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டன. அடுக்குமாடிக் குடியிருப்புகளும், மருத்துவமனைகளும்கூட மிகப்பெரிய இடர்பாட்டை எதிர்கொண்டன. 
வணிகப் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விநியோகம் செய்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் திருட்டு உள்ளிட்ட பிரிவின் கீழ் குற்றப்பதிவு செய்து வழக்குத் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆட்சிகள் மாறினாலும் சென்னையைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளிலிருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் டேங்கர்கள் மூலம் நகரிலுள்ள குடியிருப்புகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் விநியோகம் செய்வதை முறைப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஒருவகையில் வரவேற்புக்குரியது என்றுதான் கூற வேண்டும்.
சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தினந்தோறும் தண்ணீர் டேங்கர்கள் மூலம் 4.30 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விநியோகம் செய்கிறது. தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக 9 கோடி லிட்டர் தண்ணீரை அடுக்குமாடிக் குடியிருப்புகள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு விநியோகம் செய்து பெரும் லாபம் அடைகின்றனர். இதனால் தண்ணீர் டேங்கர் லாரிகளை நம்பித்தான் சென்னை மாநகர இயல்பு வாழ்க்கையே நடைபெற்றாக வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 
குடிநீர் வாரியம் 800 தனியார் தண்ணீர் லாரி டேங்கர்களை தன்னுடைய ஒப்பந்தத்தில் வைத்துக்கொண்டிருக்கிறது. 9,000 லிட்டர் கொள்ளளவுள்ள 450 லாரி டேங்கர்களும், 6,000 லிட்டர் கொள்ளளவுள்ள 350 லாரி டேங்கர்களும் சென்னை குடிநீர் வாரியத்தின் தண்ணீர் விநியோகப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. இதற்காக மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அவ்வளவே. 
ஆனால், சுமார் 4,100 தனியார் தண்ணீர் லாரி டேங்கர்கள் நாளொன்றுக்கு 24,000 நடைகள் சென்னையின் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கின்றன. 12,000 லிட்டர் கொள்ளளவுள்ள 2,000 லாரி டேங்கர்கள், நாளொன்றுக்கு 5 நடை வீதம் குடியிருப்புகள், விடுதிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு சுமார் 9 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கின்றன. 24,000 லிட்டர் கொள்ளளவுள்ள 1,500 லாரி டேங்கர்கள், நாளொன்றுக்கு 5 நடை வீதம் 15.60 கோடி லிட்டர் தண்ணீரை விநியோகிக்கின்றன. 33,000 லிட்டர் கொள்ளளவுள்ள 550 லாரி டேங்கர்கள், தினந்தோறும் 4 நடைகள் வீதம் 2.64 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கின்றன. இது போதாதென்று 40,000 கொள்ளளவுள்ள 50 லாரி டேங்கர்கள் 80 லட்சம் லிட்டர் தண்ணீரை விநியோகிக்கின்றன. 
உரிமம் பெற்ற 1,400 கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் சென்னையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்குகின்றனர். இதல்லாமல் நட்சத்திர தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், குடியிருப்புகள் ஆகியவற்றின் அன்றாடத் தேவை குறித்து சரியான புள்ளிவிவரம் இல்லை. வரைமுறையில்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் புற்றீசல் போல உருவாகியிருக்கின்றன. இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு தேவையான தண்ணீர் குறித்து கட்டட அனுமதிக்கு முன்பு எந்தவித உத்தரவாதமும் பெறப்படுவதில்லை. 
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், நகர் -ஊரமைப்பு திட்ட இயக்ககமும் (டவுன் அண்ட் கன்ட்ரி பிளானிங்), பெருநகர சென்னை மாநகராட்சியும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும், வணிக வளாகங்களுக்கும், கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்குகின்றனவே தவிர, அதற்கு முன்னால் இந்த அளவு வளர்ச்சியை எதிர்கொள்ளும் அளவுக்குத் தண்ணீர், குடிநீர் ஆதாரத்தை உறுதிப்படுத்துவது குறித்து கவலைப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பெருநகர சென்னையின் அசுர வளர்ச்சியை எதிர்கொள்ளும் அளவுக்குக் கழிவுநீர் கட்டமைப்பு கிடையாது என்பது குறித்துக் கவலைப்படுவதில்லை. அதன் விளைவுதான் சிறு மழை பெய்தாலும் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கும் அவலமும், சாக்கடை நீர் வீடுகளுக்குள் நுழையும் விபரீதமும். 
ஆரம்பம் முதலே சென்னை நகரின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல தண்ணீர் ஆதாரத்தை உறுதிப்படுத்தி, அதன் அடிப்படையில் மட்டுமே குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கார்ப்பரேட் மருத்
துவமனைகள், விடுதிகள் ஆகியவற்றிற்கான அனுமதியை வழங்குவதைத் தொலைநோக்குப் பார்வையுடன் முந்தைய 60 ஆண்டு அரசுகள் அணுகியிருந்தால், இன்று தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்களின் அச்சுறுத்தலுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 
போதுமான அளவு தண்ணீர் வழங்குவதற்கு அரசால் முடியாத நிலையில், தனியார் தண்ணீர் லாரி டேங்கர் உரிமையாளர்களிடம் சமரசம் பேசி நிலைமையை சீராக்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டிருக்கும் நிலையில், இனிமேலாவது ஆட்சியாளர்களும் நிர்வாகமும் இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு குறித்து சிந்தித்து செயல்படத் தொடங்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவு அரசின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அதிகரித்து வரும் நிலத்தடி நீர் பயன்பாட்டின் பேராபத்தை உணர்த்தியிருக்கிறது, அதுவரையில் ஆறுதல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com