பலவீனத்தின் வெளிப்பாடு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.65- லிருந்து ரூ.74-ஆகக் குறைந்திருக்கிறது. இது மேலும் அதிகரித்து ரூ.75-ஐத் தாண்டக்கூடும் என்று பொருளாதார

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.65- லிருந்து ரூ.74-ஆகக் குறைந்திருக்கிறது. இது மேலும் அதிகரித்து ரூ.75-ஐத் தாண்டக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவு சரிவடைந்து வரும் நிலையில், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயில் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருக்கிறார். இதைப் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா என்பது ஐயம்தான்.
அமெரிக்க டாலரின் மரியாதையே அது சர்வதேசச் செலாவணியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுதான். எல்லா நாடுகளும் பிற நாடுகளுடனான தங்களது வர்த்தகத்தை அவரவர் செலாவணியில் நடத்த வேண்டும் என்று விருப்பப்பட்டாலும், அதை ஏனைய நாடுகள் ஏற்றுக் கொள்ளாது. டாலரில் பரிமாற்றம் நடத்தப்படும்போது, தங்களிடமுள்ள டாலர் அந்நியச் செலாவணியைப் பயன்படுத்தி வேறு நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்பதுதான் அதற்குக் காரணம். 
சர்வதேசச் செலாவணியாக ஆரம்பத்தில் பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங்தான் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஒரு வல்லரசாக உருவெடுத்ததும், ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனிகளை இழந்ததும் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தை அதிகரித்தன. கடந்த 70 ஆண்டுகளாக சர்வதேசச் செலாவணியாக அமெரிக்காவின் டாலர் அங்கீகரிக்கப்பட்டதுதான் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. 
சர்வதேசச் செலாவணியாக மட்டுமல்லாமல், எல்லா நாடுகளுமே தங்களது சேமிப்பை டாலரில் பாதுகாப்பதால், அமெரிக்காவுக்கு இயல்பாகவே மிகப்பெரிய அடிப்படை மூலதனம் கிடைத்து விடுகிறது. அமெரிக்காவின் இந்த அசுர பலத்தை உடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மறைமுக முயற்சிதான் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும், அதன் செலாவணியான யூரோவும். அந்த முயற்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனதால், டாலர் இப்போதும் உலகச் செலாவணிகளின் மதிப்பு நிர்ணயத்துக்கான செலாவணியாகத் தொடர்கிறது.
உலகிலுள்ள ஏனைய நாடுகளைப் போலவே அமெரிக்காவும் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னையை எதிர்கொள்ளத்தான் செய்கிறது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 2017-ஆம் ஆண்டின் 552 பில்லியன் டாலரை (ரூ. சுமார் 40.4 லட்சம் கோடி) விரைவில் கடந்துவிடும் போல் இருக்கிறது. அதேபோல, அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை 800 பில்லியன் டாலரைவிட (ரூ. சுமார் 58.6 லட்சம் கோடி) அதிகம். அமெரிக்காவின் மொத்த கடன் இன்றைய நிலையில் 21 டிரில்லியன் டாலருக்கும் (ரூ. சுமார் 1,538 லட்சம் கோடி) அதிகமாகக் காணப்படுக்கிறது. இப்படி இருந்தும் கூட, அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக இருப்பதற்குக் காரணம், டாலர் சர்வதேசச் செலாவணியாக இருப்பதுதான். உலக நாடுகள் அனைத்துமே தங்களது வர்த்தகத்தையும், சேமிப்பையும் அமெரிக்க டாலரில் மேற்கொள்வதால் பற்றாக்குறைகளையும், கடனையும் அமெரிக்காவினால் கையாள முடிகிறது.
ரஷியா உள்ளிட்ட சில நாடுகளுடனும், இந்தியாவின் அண்டை நாடுகளான சார்க் நாடுகளுடனும், இந்தியா ரூபாயில் வர்த்தகப் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. அந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியும், இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்கு ஏற்றுமதியும் கணிசமான அளவு நடந்து வருவதால் அது சாத்தியமாகிறது. அதே நேரத்தில், உலகின் ஏனைய நாடுகளுடன் இந்தியாவுக்கு வர்த்தகப் பரிமாற்றம் இரு தரப்பிலுமாக இல்லாமல் இருப்பதால், இந்தியச் செலாவணியான ரூபாயில் வர்த்தகம் என்பது சாத்தியமல்ல. 
உலகளவில் கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது. கடந்த 2017-18 நிதியாண்டில் மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்திருக்கிறோம். கச்சா எண்ணெயின் இறக்குமதிக்கு ஏற்றாற்போல இந்தியாவின் ஏற்றுமதிகள் அதிகரிக்கவில்லை. அதிக மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டதும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டதும் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து இந்தியாவின் தொழிற்துறை முழுமையாக மீண்டெழவில்லை. 
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ரஷியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்துதான் பெருமளவு கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது. இந்த நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதிக்கும் அங்கிருந்து பெறும் கச்சா எண்ணெய் இறக்குமதியின் மதிப்புக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், அந்த நாடுகள் பிரதமரின் வேண்டுகோள்படி அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய்க்கான விலையைப் பெற்றுக் கொள்ளும் என்று தோன்றவில்லை. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமரின் வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பதுதான் எதார்த்த நிலை.
2019 -இல் மக்களவைக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நரேந்திர மோடி அரசு மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதை எதிர்கொள்வதற்குத் தொழில் துறையை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிப்பதிலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதைப் பயன்படுத்தி ஏற்றுமதியை முடுக்கிவிட்டு, அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிப்பதிலும்தான் அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, நமது பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையில் சர்வதேசத் தளத்தில் வேண்டுகோள் வைப்பதால் பயனில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com