மரணப் பாதைகள்!

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் 2017-ஆம் ஆண்டுக்கான இந்திய சாலை விபத்து குறித்த அறிக்கை ஏற்கெனவே இருக்கும்அதிர்ச்சியை அதிகரிக்கிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் 2017-ஆம் ஆண்டுக்கான இந்திய சாலை விபத்து குறித்த அறிக்கை ஏற்கெனவே இருக்கும்அதிர்ச்சியை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.9 சதவீதம் குறைந்திருக்கிறது என்பது ஆறுதல் அளிப்பதாக இல்லை. அந்த அறிக்கையின்படி, சாலை விபத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 1,47,913. நீரில் மூழ்கி இறந்தவர்கள், இயற்கையின் சீற்றத்தால் கொல்லப்பட்டவர்கள், ரயில் விபத்தில் மாண்டவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட, சாலை விபத்தில் இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகம் எனும்போது இதுகுறித்து நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது.
 2013-இல் இரு சக்கர வாகனவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,957. விபத்தில் சிக்கி மரணமடைந்த பாதசாரிகளின் எண்ணிக்கை 12,330. இப்போது வெளியாகியிருக்கும் அரசு புள்ளிவிவரத்தின்படி, அதுவே 48,746-ஆகவும், 20,457-ஆகவும் அதிகரித்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, நமது சாலைகள் பாதுகாப்பற்ற மரணப் பாதைகளாகிவிட்டனவோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. உலகிலேயே இந்தியாவில்தான் சாலை விபத்தில் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகம். ஆண்டுதோறும் சராசரியாக 1.5 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். அவர்களில் 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 74,000 எனும்போது வளர்ச்சி அடையும் தேசம் இதுகுறித்த எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?
 2017-இல் மட்டும் நாளொன்றுக்கு 10 பேர் குண்டும் குழியுமாக இருக்கும் சேதமடைந்த சாலைகளால் விபத்துக்குள்ளாகிறார்கள். 2017-இல் மட்டும் பழுதடைந்த சாலைகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,597. தீவிரவாத தாக்குதல்களில் கடந்தாண்டு உயிரிழந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் ஆகியோரின் மொத்த எண்ணிக்கையே 803 தான் எனும்போது, 3,597 பேர் பழுதடைந்த சாலைகளால் உயிரிழந்திருப்பது எப்படி அதிர்ச்சி அளிக்காமல் இருக்கும்?
 பாதசாரிகளின் மரணம்தான் மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. 2014-இல் 12,330-ஆக இருந்த பாதசாரி மரணங்களின் எண்ணிக்கை, 2017-இல் 66% அதிகரித்து 20,457-ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நாளும் தெருவில் நடந்துபோகும் 56 பாதசாரிகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கிறார்கள். அதேபோல, நாள்தோறும் சராசரியாக இரு சக்கர வாகனத்தில் செல்வோர் 134 பேரும், சைக்கிளில் செல்வோர் 10 பேரும் மரணமடைகிறார்கள். பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், மிதி வண்டியில் செல்வோர் ஆகிய மூன்று பிரிவினரும் சேரும்போது கடந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் பாதிக்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களாகத்தான் இருக்கும்.
 கடந்த மாதம் தெலங்கானாவில் 61 பயணிகளுடன் வேகமாகச் சென்ற பேரூந்து ஒன்று சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காததால் விபத்துக்குள்ளாகி அனைவரும் மரணமடைந்தனர். இதுபோல, தேவையில்லாத இடங்களில் காணப்படும் வேகத்தடைகள், ஆபத்தான வளைவுகள், முறையாக அமைக்கப்படாத சாலைகள் ஆகியவை குறித்தெல்லாம் சாலை போக்குவரத்துத் துறை ஆய்வு செய்வதே இல்லை. முறையான சாலை அறிவிப்புகள், நெடுஞ்சாலைக் காவல், தயார் நிலையில் முதலுதவி மருத்துவக் குழு இவை குறித்தும் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.
 இன்னும்கூட இரு சக்கர வாகன ஓட்டிகள் இடதுபுற ஓரமாகத்தான் செல்ல வேண்டும் என்பதும், குறைந்த வேக வாகனங்கள் வலப்பக்கமாக செல்லக் கூடாது என்பதுகூட வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதுமில்லை, அது குறித்த விழிப்புணர்வை சாலைப் போக்குவரத்துத் துறை ஏற்படுத்துவதுமில்லை. ஓட்டுநர் உரிமங்கள் விலை பேசப்படுவதும்கூட சாலை விபத்துகளுக்கு முக்கியமானக் காரணம்.
 புதிய புதிய வாகனங்கள் மாதந்தோறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றின் அமைப்பும் பாதுகாப்பு அம்சங்களும் அதிக கவனம் பெறுகின்றன. அதேபோன்ற முனைப்பு சாலைகளின் கட்டமைப்பிலும், தரத்திலும், பராமரிப்பிலும் காட்டப்படுவதில்லை. பொதுப்போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்தும் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.
 எல்லாவற்றிற்கும் மேலாக சாலையின் இரு மருங்கிலும் இருக்கும் நடைபாதை என்பது வெறும் அடையாளமாக ஏற்படுத்தப்படுகிறதே தவிர, வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருப்பதுபோன்று சாலையின் இருபுறமும் குறைந்தது 10 அடி நீளமுள்ள நடைபாதைகள் இந்தியாவில் இல்லாமல் இருப்பது பாதசாரி விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணம். சாலைகளைக் கடப்பதற்கு ஆங்காங்கே பாதசாரிகளுக்கு வழித்தடங்கள் இல்லாமல் இருப்பதால் அது நெடுஞ்சாலையானாலும், நகர்ப்புற, கிராமப்புற சாலையானாலும் பொதுமக்கள் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையோ, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளோ, அரசு நிர்வாகமோ கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
 அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தைவிட இருபது மடங்கு அதிகம் சாலை விபத்துகள் நடந்திருக்கின்றன என்று தில்லி இந்திய தொழில்நுட்பக் கழக ஆய்வு தெரிவித்திருப்பதை மிகைப்படுத்தல் என்று ஒதுக்கிவிட முடியவில்லை. அதிநவீன வாகனங்களுக்கு அனுமதி அளிப்பதும், சுங்கக் கட்டணச் சாலைகளை அமைப்பதும் மட்டுமே அல்ல வளர்ச்சி. பாதசாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத மரணச் சாலைகள் இருக்கும் வரை, இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com