அவருக்கு நிகர் அவரே!

மேரி கோம், சர்வதேச விளையாட்டு அரங்கத்தில், மிகப்பெரிய ஆளுமையாக உயர்ந்து நிற்பதால் அவரை சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை

மேரி கோம், சர்வதேச விளையாட்டு அரங்கத்தில், மிகப்பெரிய ஆளுமையாக உயர்ந்து நிற்பதால் அவரை சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை என்று குறிப்பிடுவதில் தவறேயில்லை. மேரி கோம் அடைந்திருக்கும் வெற்றியும், அவர் படைத்திருக்கும் சாதனைகளும் வேறு எவராலும் கற்பனை செய்துகூட பார்க்க இயலாதது. 
மூன்று குழந்தைகளுக்குத் தாயான 35 வயது மேரி கோம், குழந்தைப் பருவத்திலிருந்து எதிர்கொண்ட வறுமையும், ஆதரவற்ற நிலையும் இன்னொருவராயிருந்தால் நிலைகுலைய வைத்திருக்கும்; சாதனையாளராக்கி இருக்காது. 
உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மேரி கோம் எதிர்கொண்ட சோதனைகளும் பிரச்னைகளும் ஏராளம் ஏராளம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஐந்தாவது முறையாக, உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றபோது, அவர் குத்துச்சண்டை வீரர்கள் பலரில் ஒருவராகத்தான் கருதப்பட்டார். அங்கீகாரத்துக்கான அவரின் ஏக்கமும், தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளும் கவனிக்கப்படவில்லை. 
அப்போது மேரி கோமிடம் பணம் இருக்கவில்லை; புகழும் இருக்கவில்லை; அவருக்காகக் கவலைப்படவும் உதவிக்கரம் நீட்டவும் யாரும் இருக்கவில்லை; தன் திறமையின் உச்சத்தில் அவர் இருந்தபோது அவருக்கு உதவி செய்ய எந்தப் புரவலரும் முன்வரவில்லை; ஆனால், இளமை இருந்தது. அன்றைய பின்னடைவுகளும் கவனிப்பின்மையும்தான் அவரை மன திடம் கொண்ட விளையாட்டு வீராங்கனையாக மாற்றியிருக்க வேண்டும். 
2001-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் வென்ற வெள்ளிப் பதக்கம்தான் அவருக்குக் கிடைத்த முதல் சர்வதேச விருது. இப்போது தனது 35-ஆவது வயதில் ஆறாவது தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். அவர் 2010-இல், தனது 27-ஆவது வயதில், தங்கப் பதக்கம் வென்றபோது, அதுவே அவரது கடைசி வெற்றியாக இருக்கும் என்று பலரும் கருதினர். மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டிருந்த மேரி கோம், ஓய்வு பெற்று விடுவார் என்றுதான் விமர்சகர்களும் எழுதினார்கள். 
2016-இல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் அவர் தோல்வியடைந்ததால், ஒலிம்பிக் பந்தயத்துக்கு தேர்வாகாமல் நிராகரிக்கப்பட்டார். அத்துடன் மேரி கோமின் சகாப்தம் முடிந்தது என்று முற்றுப்புள்ளி வைத்தவர்கள் பலர். 
2018 ஆசிய போட்டியில் அவர் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது. விமர்சகர்கள், அவர் ஒதுங்கிவிட்டார் என்று நினைத்தனர். ஆனால், மேரி கோம் அப்போது பதுங்கியது உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் தனது ஆறாவது தங்கப் பதக்கத்தை வெல்வதற்காகத்தான் என்பது இப்போது புரிகிறது. 
பொதுவாக, 35 வயதில் விளையாட்டு வீரர்கள் களத்திலிருந்து ஓய்வு பெறும் நிலையில், மேரி கோம் 2020 ஒலிம்பிக் பந்தயத்துக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. 2016 ஒலிம்பிக் பந்தயத்திற்கு, தான் தேர்வாகாமல் போனதால் ஏற்பட்ட ரணம் அவருக்கு இன்னும் ஆறவில்லை. 2020 டோக்கியோ ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் பெற்றாக வேண்டும் என்று அவர் முனைப்புடன் இருப்பதன் காரணம் அதுதான். 
மேரி கோம், உலக குத்துச்சண்டை போட்டியில் இதுவரை வென்ற ஆறு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும், 48 கிலோ அல்லது அதற்கும் கீழான எடைப் பிரிவுகளில் அடைந்திருக்கும் வெற்றிகள். ஒலிம்பிக் உள்ளிட்ட மிகப்பெரிய சர்வதேச போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவு கிடையாது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மேரி கோம் கலந்துகொள்ள வேண்டுமானால், அவர் 51 கிலோ எடைப்பிரிவில்தான் போட்டியிட்டாக வேண்டும். 
அதிக உயரமில்லாத மேரி கோம், தன்னைவிட உயரமான குத்துச்சண்டை வீரர்களை, அதிலும், வலுவான குத்துகளை எதிர்கொள்ளும் திறமையுள்ள வீரர்களை சந்திக்க நேரிடும். 2012-இல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மேரி கோம் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் அதுதான். அதனால்தான் அவரால் வெண்கலப் பதக்கம் மட்டுமே பெற முடிந்தது. அது தெரிந்தும்கூட, 2020-இல் தனது 37-ஆவது வயதில், களமிறங்கத் தயாராகி வருகிறார்.
தீவிரவாதத்தின் பிடியில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில், ஒரு சாதாரண விவசாயப் பின்னணியில் பிறந்து வளர்ந்த மேரி கோம், தன்னுடைய சொந்த முயற்சியாலும், தளராத மன உறுதியாலும், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற தாளாத முனைப்பினாலும் ஆறாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்று சரித்திரம் படைத்திருக்கிறார். அவரின் சாதனை, புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. அவரது வாழ்க்கை, திரைப்படமாகியிருக்கிறது. இந்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி இருக்கிறது. 
எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் இத்தகைய சாதனைகளைச் செய்ய முடிந்திருப்பதால்தான் மேரி கோம், சர்வதேச அளவில் பலருக்கும் முன்னுதாரணமாகவும், உந்து சக்தியாகவும் விளங்குகிறார். கால்பந்துக்கு மாரடோனா என்றால், குத்துச்சண்டைக்கு மேரி கோம் என்று உலகம் போற்றுகிறது. தடைகளை உடைத்தெறிந்து சாதனைகள் பல படைத்த மேரி கோம், 2020 டோக்கியோ ஒலிம்பிக் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்று மீண்டுமொரு சாதனையைப் படைத்தால் வியப்பதற்கு இல்லை. 
மேரி கோமுக்கு ஒவ்வொரு சாதனையும் அடுத்த சாதனைக்கான வெற்றிப்படி என்பதை அவரது வரலாறு நிரூபித்திருக்கிறது. மேரி கோமின் வெற்றி இந்தியப் பெண்ணினத்தின் வெற்றி; இந்தியாவின் வெற்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com