விண்ணளவு வெற்றி!

இந்திய விண்வெளி

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதியதொரு வரலாறு படைத்திருக்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி2 விண்வெளிக் கலம் கடந்த புதன்கிழமை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிசாட் - 29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.
கஜா புயல் எச்சரிக்கை இருந்தபோதும்கூட, திட்டமிட்டபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3-டி2 விண்கலம் ஏவப்பட்டது என்பது, நமது விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் தன்னம்பிக்கையையும், இந்தியா விண்கலன்களை ஏவுவதில் பெற்றிருக்கும் தொழில்நுட்ப அனுபவத்தையும் பறைசாற்றுகின்றன. ஜிசாட் - 29 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டிருக்கும் இந்த விண்கலம், நமது "இஸ்ரோ' விஞ்ஞானிகளால் ஏவப்பட்டிருக்கும் 67-ஆவது விண்கலம் என்பது பெருமிதத்துக்குரிய சாதனை.
ரூ.360 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜிசாட் - 29 செயற்கைக்கோளில், நவீன டிரான்ஸ்மீட்டர் பேண்டுகள், ஆப்டிகல் தகவல் தொடர்பு சாதனங்கள், உயர்திறன் கொண்ட கேமரா ஆகியவை முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளன. "இஸ்ரோ'வால் விண்ணில் ஏவப்பட்டிருக்கும் ஜிஎஸ்எல்வி மார்க் - 3 விண்கலம், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்பதுதான்  தனிச்சிறப்பு. 
கடந்த 2014-ஆம் ஆண்டில் மார்க் - 3 விண்கலம் மூலம் நமது விஞ்ஞானிகள் ஜிசாட் - 19 தகவல்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவினார்கள். இப்போது, இரண்டாவது முயற்சியும் வெற்றியடைந்திருக்கும் நிலையில், நாம் இனி எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும் என்பதுதான், இந்த முயற்சியின் மிகப்பெரிய சாதனை.
பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வரிசையில் இப்போது மார்க் - 3 விண்கலமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. பிஎஸ்எல்வி-யைப் பொருத்தவரை ஏவப்பட்ட 44 விண்கலன்களில் 41 வெற்றி பெற்றது. ஜிஎஸ்எல்வி-யில் 12 முயற்சிகளில் 7 வெற்றி பெற்றன. ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ஏவுகணை 2014 டிசம்பரில் முதன்முறையாக, விண்வெளிக்கு மனிதர்களைத் தாங்கிச் செல்லக்கூடிய 3.7 டன் எடைகொண்ட விண்கலத்துடன் வெற்றிகரமாக ஏவப்பட்டது. பிறகு 2017 ஜூன் மாதத்தில் 3,136 கிலோ எடை கொண்ட ஜிசாட் - 19 என்கிற தகவல்தொடர்பு செயற்கைக்கோள், மார்க் - 3 விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோளை ஏவியிருப்பதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது என்று கேட்கலாம். தகவல் தொடர்பு வசதியே கிடைக்காத பெரிய மலைத் தொடர்கள் சூழ்ந்த பகுதிகளுக்கு இதன் மூலம் தகவல் தொடர்பு வசதியை வழங்க முடியும். இமயமலைப் பகுதிகளான காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை இந்த செயற்கைக்கோள் திட்டத்தால், நமது முழு கண்காணிப்புக்குள் இருக்கும் என்பதும், அதிகப் பகுதிகள் தகவல் தொடர்பால் இணைக்கப்படும் என்பதும் மிக முக்கிய பயன்கள்.
அத்துடன் முடிந்துவிடவில்லை. இந்த செயற்கைக்கோள்கள் மூலம், அதிவேக இணைய வசதியை இந்தியா பெற முடியும். புவி வளங்கள் சார்ந்த தகவல்களை இந்த செயற்கைக்கோள்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் படம் பிடித்து, தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும். இந்தியப் பாதுகாப்புக்கும் இந்த செயற்கைக்கோள்கள் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இதுவரை இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட விண்கலன்களில், மிக அதிக எடை கொண்ட விண்கலம் மார்க் - 3 தான். அதுமட்டுமல்ல, அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தோல்வி மேல் தோல்விக்குப் பிறகு வெற்றிகரமாக விண்கலன்களை நாம் ஏவிய நிலைமை மாறி, இப்போது முதல் முயற்சியிலேயே வெற்றி
கரமாக விண்கலன்களை ஏவ முடிகிறது என்பது, எந்த அளவுக்கு நாம் விண்கலன்களை ஏவும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
இதுவரை நமது "இஸ்ரோ' விஞ்ஞானிகள் ஏவிய விண்கலன்களிலேயே மிகவும் துல்லியமான தொழில்நுட்பம் கொண்டது ஜிஎஸ்எல்வி மார்க் - 3 டி2 விண்கலம்தான். மனிதர்களை விண்ணுக்கு நேரடியாக அனுப்பும் முயற்சிதான் இதன் அடுத்த கட்டமாக இருக்கும். வரும் ஜனவரி மாதம் நாம் ஏவ இருக்கும் சந்திரயான் -2 திட்டத்தின் வெற்றிக்கு இந்த முயற்சி அடித்தளம் இடுகிறது. 
சர்வதேச அளவில், விண்வெளித் துறை என்பது 300 பில்லியன் டாலர் புழங்கும் துறை. திட்டமிட்ட பாதையில் ஜிசாட் - 29 செயற்கைக்கோளை நிறுத்தியிருப்பதால், வருங்காலத்தில் நமது விண்வெளி ஆய்வுகள் வணிக ரீதியிலான வெற்றியையும் வழங்கக்கூடும். கடந்த ஆண்டில் மட்டும் நாம் 104 விண்கலங்களை ஏவியிருப்பதுடன், மார்க் - 3 வெற்றியையும் சேர்த்துப் பார்க்கும்போது, உலகளாவிய அளவில் "இஸ்ரோ' முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் மூலம் வியாபார ரீதியாக நிதியாதாரம் ஏற்படுமானால், நமது விண்வெளி ஆராய்ச்சிகளை மேம்படுத்த உதவக்கூடும்.
இந்தியாவின் "இஸ்ரோ' விஞ்ஞானிகள், இதற்கு முன் 97 இந்திய செயற்கைக்கோள்களையும், 239 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். ஜிஎஸ்எல்வி மார்க் - 3 விண்கலம் ஜிசாட் - 29 செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியிருப்பது மட்டுமல்ல, நமது "இஸ்ரோ' விஞ்ஞானிகளின் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும்கூட விண்ணளவு உயர்த்தியிருக்கிறது. வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் "இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு நமது வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com