திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

தேவையில்லாத தலையீடு!

By ஆசிரியர்| Published: 06th November 2018 01:27 AM

நேற்று மாலை ஐந்து மணிக்கு சித்திரை ஆட்ட விசேஷ சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அதேநேரத்தில், இன்னும் கூட சிலர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை பாதகமாக்கி, சபரிமலையின் சம்பிரதாயங்களை மீறி கோயிலுக்குச் செல்ல முற்படாமலும் இல்லை. சபரிமலையில் கமாண்டோ படையினர் உள்பட ஏறத்தாழ 2,300 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் ஐயப்பன்மார்கள் பக்தியுடன் வழிபடும் புனிதத்தலத்தில் இந்த அளவுக்குக் காவலர்கள் நிறைந்து காணப்படுவது வேதனையளிக்கிறது. 
இந்தியாவிலேயே அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் ஐயப்பன்மார்களாக சமத்துவ உணர்வுடன் கூடும் புனிதத்தலமான சபரிமலை, விவாதப் பொருளாக மாறியிருப்பதற்கு உச்சநீதிமன்றமும், கேரள மாநில அரசும்தான் காரணம் என்று குற்றம் சாட்டாமல் இருக்க முடியவில்லை. தேவையே இல்லாத நீதிமன்றத் தலையீடு, இன்று கேரள மாநிலத்தை மத ரீதியிலான சிந்தனைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடுவதில்லை என்கிற சம்பிரதாயம் ஐயப்ப பக்தர்களின் அங்கீகாரத்துடன் காலங்காலமாக நடைமுறையில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த சம்பிரதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தீர்ப்பளித்தது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் இறை நம்பிக்கை இல்லாத இடதுசாரி அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மக்கள் மன்றத்தின் உணர்வுக்கு மாறானது என்று கூறி, மறு ஆய்வு செய்ய மறுத்தது மட்டுமல்ல, அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும் முற்பட்டதன் விளைவுதான் இந்தப் பிரச்னை இந்த அளவுக்கு தீவிரமடைந்ததற்குக் காரணம். 
கடந்த மாதம் கேரள மாநிலத்தில் பெருமளவில் பெண்கள் கலந்துகொண்ட மெளன ஊர்வலங்கள், ஐயப்ப கோஷத்துடனான போராட்டங்கள் ஆகியவை தொடர்பாக கேரள அரசு 3,371 பேரை கைது செய்திருக்கிறது. ஏறத்தாழ 545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் இப்போது சிறப்பு பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கிறது. 
இந்த பிரச்னை குறித்து இறை நம்பிக்கையும், சபரிமலை ஐயப்பனிடம் பக்தியும் உள்ள எந்தவொரு பக்தையும் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவோ, ஆதங்கம் இருப்பதாகவோ உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை. இதில் சம்பந்தப்படாத யாரோ ஒருவர், பெண்களின் உரிமை என்கிற அடிப்படையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் ஆரம்பத்திலேயே நிராகரித்திருக்க வேண்டும். இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பைத் திருத்தி எழுதும் வாய்ப்பை இந்த மனுக்கள் வழங்கியிருக்கின்றன. 
சபரிமலை வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு உடன்படாத நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பு மிகமிக முக்கியமானதும், குறிப்பிடத்தக்கதுமாகும். தீர்ப்புகள் திருத்தி எழுதப்படுவது ஒன்றும் புதிதல்ல. 2016-இல் குலு தசரா பண்டிகையையொட்டி மிருகபலி நடத்துவதை இமாசலப் பிரதேச உயர்நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது. மேல் முறையீடு வந்தபோது, முதலில் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. பிறகு மறு ஆய்வில், குலு தசரா பண்டிகைகளில் மிருக பலியை அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது. 
2015-இல் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மிருக பலிக்குத் தடை விதிக்கக் கூறி பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டபோது, உச்சநீதிமன்றம் அந்தப் பொதுநல வழக்கை ஏற்றுக்கொள்ள 
மறுத்தது. நூற்றாண்டு கால பழக்க வழக்கங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் எதிராகக் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பளிக்க முடியாது என்று தனது நிராகரிப்புக்கு விளக்கம் தந்தது உச்சநீதிமன்றம். அந்த விளக்கம் சபரிமலை பிரச்னைக்கும் பொருந்தும்.
நீதிமன்ற வரலாற்றில் இதுபோல எத்தனை எத்தனையோ வழக்குகள் மறு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு தீர்ப்புகள் திருத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல, பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துகளுடன் ஒத்துப் போகாமல் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மறு ஆய்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. எந்தவொரு தீர்ப்பும் முடிவான தீர்ப்பு அல்ல. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ராபர்ட் ஜாக்ஸன் கூறியது போல, உச்சநீதிமன்றத்தால் திருத்தி எழுதப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்புகளில் பெரும்பான்மையான தீர்ப்புகள், உயர் உச்சநீதிமன்றம் ஒன்று இருக்குமேயானால், அதனால் திருத்தி எழுதப்படும். எந்தவொரு தீர்ப்பும் குறையில்லாததோ, இறுதியானதோ அல்ல என்பதை முன்னாள் நீதிபதிகள் பலரின் தீர்ப்புகள் உணர்த்தியிருக்கின்றன. 
ஐயப்ப பக்தியுள்ள எந்தவொரு பெண்மணியும் சபரிமலை சம்பிரதாயங்களை மீற விரும்பமாட்டார். அதேபோல, முறையாக விரதம் இருக்காமல் பதினெட்டாம் படியில் ஏற வயது வித்தியாசமில்லாமல் எந்தவொரு பெண்மணியும் துணியமாட்டார். வீம்புக்காகவும், விளம்பரத்துக்காகவும் சம்பிரதாயத்தை சிதைக்கும் வக்கிர எண்ணத்தோடு செயல்பட முனையும் நபர்களை பக்தர்கள் தடுப்பதில் தவறு காண முடியாது. 
நீதிமன்றங்கள், மத சம்பந்தமான பிரச்னைகளில் வழிகாட்டுவதற்கோ, தீர்ப்பளிப்பதற்கோ உரிமையை எடுத்துக் கொள்ளக்கூடாது. பாஜகவும், இந்து அமைப்புகளும் சபரிமலை பிரச்னையை அரசியல் ஆதாயமாக்குகின்றன என்று குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, அதற்கு வழிவகுக்காமல் சபரிமலை சம்பிரதாயங்களில் பக்தர்களின் உணர்வுகளுக்கு இடமளித்து அரசும், நீதித்துறையும் ஒதுங்கிக் கொள்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
 

More from the section

விண்ணளவு வெற்றி!
வீரம் மதிக்கப்படவில்லை!
இன்னொரு அணைக்கு என்ன அவசியம்?
கனவு நனவாகாது!
ஏன் இந்த தயக்கம்?