வெற்றி இனிக்கப் போவதில்லை!

மக்களவைக்கு 65 உறுப்பினர்களைத்


மக்களவைக்கு 65 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும்  மூன்று முக்கியமான ஹிந்தி பேசும் மாநிலங்களில் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதில் ஐயப்பாடில்லை. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக எதிர்கொண்டிருக்கும் தோல்விக்கும், காங்கிரஸ் கட்சி அடைந்திருக்கும் வெற்றிக்கும் பின்னணியில் வேளாண் இடர் மிக முக்கியமான காரணியாக இருப்பது தெரிய 
வந்திருக்கிறது. 
மாநில அளவிலும் தலைநகர் தில்லியிலும் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே விவசாயிகள் தொடர்ந்து போராடுகிறார்கள். உற்பத்தியான பாலை சாலைகளில் கொட்டியும், வெங்காயத்தைத் தெருவில் இறைத்தும் விவசாயிகள் நடத்திய போராட்டங்களை அரசியல் நாடகம் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நையாண்டி செய்தார். பிரச்னையின் ஆழத்தை மத்திய அரசு உணரவில்லை என்பதைத்தான் அது எடுத்துக்காட்டுகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒருவர்தான் வேளாண் இடர் மிகவும் கடுமையானது என்றும், உடனடியாக அதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆனால், அவரது எச்சரிக்கை பாஜகவாலும் மத்திய அரசாலும்  ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளைப் பொருத்தவரை, பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஏமாற்றமாகவும் அமைந்துவிட்டிருக்கிறது. அரசுக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுத் தருவதற்கு பதிலாக கெட்ட பெயரை ஏற்படுத்தித் தந்திருக்கிறது பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம். அதிக அளவிலான காப்பீட்டுத் தொகையும், முறையாக வழங்கப்படாத இழப்பீடும் பெரும்பாலான விவசாயிகளை இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற வைத்திருக்கிறது.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் கணிசமான வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்பட்டது என்பதுதான் உண்மை. வீட்டு வசதி, சாலைகள் மேம்பாடு, கழிப்பறை வசதிகள், எரிவாயு இணைப்பு, தொலைத்தொடர்பு இணைப்பு உள்ளிட்ட எல்லா வளர்ச்சித் திட்டங்களிலும் இந்த மூன்று மாநில அரசுகளும் திறமையாக செயல்பட்டும்கூட, பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என்பது வியப்பில் ஆழ்த்தும் திருப்பம். இதற்கு மிக முக்கியமான காரணம், உற்பத்திக்கேற்ற விலை இல்லாமல் போனதும், முறையான கொள்முதல் கொள்கை கடைப்பிடிக்கப்படாமல் போனதும்தான் என்பதை பாஜக மிகவும் தாமதமாக உணர்ந்திருக்கும் என்று நம்பலாம்.
சத்தீஸ்கரில் ஆட்சிக்கு வந்த பத்து நாட்களில் விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததற்கு இந்த வாக்குறுதி மிக முக்கியமான காரணம். 
இதற்கு முன்னால் இதேபோல, விவசாயக் கடன் தள்ளுபடி அறிவித்த மாநிலங்களில் அதை நடைமுறைப்படுத்தியபோது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பஞ்சாபில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலான வேளாண் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கு நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், வாக்குறுதி அளித்ததுபோல, எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல்  கடன் தள்ளுபடி இல்லாமல் போனால், இன்றைய பாஜகவின் நிலைமையை பின்னர் காங்கிரஸ் எதிர்கொள்ள நேரிடும். 
சத்தீஸ்கரில் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.2,000 வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. உற்பத்தியாகும் 50 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்ய ரூ.3,750 கோடி தேவைப்படும். அறுவடைக் காலம் தொடங்கிவிட்டிருக்கும் நிலையில், சத்தீஸ்கரில் அமைய இருக்கும் காங்கிரஸ் ஆட்சி இந்த தர்மசங்கடத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? 
இதேபோன்ற நிலைமையைத்தான் சோயாபீன்ஸ், சோளம் ஆகியவற்றுக்காக மத்தியப் பிரதேசம் எதிர்கொள்கிறது. மாநிலம் முழுவதிலுமான சந்தைகளில் விவசாயிகள் உற்பத்தியுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கொள்முதல் செய்வதற்குப் புதிய அரசுக்கு ரூ.2,200 கோடி தேவைப்படும்.
விவசாயிகள் பிரச்னையை புத்திசாலித்தனமாக கையாண்டு அதன் பலனை தேர்தலில் அடைந்திருப்பது தெலங்கானா ராஷ்டிர சமிதி மட்டுமே. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் அரசு, "ரயது பந்து திட்ட'த்தின் அடிப்படையில் 15 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் பயிரிடுவதற்காக உதவித் தொகை அளித்து, விளை பொருள்களை அவர்கள் பொதுச்சந்தையில் விற்றுக்கொள்ள அனுமதித்திருக்கிறது. இந்த அணுகுமுறைதான் அந்த அரசுக்குப் பெரும் ஆதரவை ஏற்படுத்தியது.
தேர்தலில் வெற்றி பெற்று மூன்று மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றினாலும்கூட, காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் வாரி வழங்கியிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளே அந்தக் கட்சிக்கு எதிராக மாறினாலும் வியப்படையத் தேவையில்லை.
தேர்தலில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வெற்றி அடைந்துவிடலாம். அதை நிறைவேற்றாமல் போனால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com