அதிர்ச்சி வைத்தியம்!

ஐந்து மாநில சட்டப்பேரவை முடிவுகள் எதிர்பாராத அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை.


ஐந்து மாநில சட்டப்பேரவை முடிவுகள் எதிர்பாராத அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. வாக்குக் கணிப்பு முடிவுகள் உறுதிப்படுத்தி இருப்பதுபோலவே, ராஜஸ்தானில் பாஜக தோல்வியைத் தழுவி இருப்பதும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருப்பதும் எதிர்பார்த்ததுதான். தேர்தலுக்குத் தேர்தல் ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது என்பது கடந்த இருபது ஆண்டு வரலாறு.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் வெற்றியும் எதிர்பாராததல்ல. தெலங்கானா மாநிலம் பிரிவதைக் கடுமையாக எதிர்த்த தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், காங்கிரஸ் ஒருவேளை இப்போதைய நிலைமையைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். காங்கிரஸின் சந்தர்ப்பவாதக் கூட்டணியையும், தெலங்கானா ராஷ்டிர சமிதியையும் ஒத்துக் கொள்ளாத வாக்காளர்கள், பாஜகவுக்கு வாக்களிக்க முற்பட்டதால், எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி பெரு வெற்றிபெற்றுத் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.
40 உறுப்பினர்கள் கொண்ட மிஸோரத்தில், கடந்த 10 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த காங்கிரஸ் அகற்றப்பட்டிருக்கிறது. மிஸோரத்தைப் பொருத்தவரை, தேர்தல் தோல்விகளையும், ஆட்சியாளர்களையும் தீர்மானிப்பது தேர்தல் முடிவுகளோ, அரசியல் கட்சிகளோ அல்ல. மொத்த மக்கள் தொகையில் 87% கிறிஸ்தவர்கள் என்கிற நிலையில், கிறிஸ்தவ மத சபைதான் மிஸோரம் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக மிஸோரத்தில் அமலில் இருந்த மது விலக்கை, முதல்வர் லால் தன்ஹாவ்லா தலைமையிலான காங்கிரஸ் அரசு கைவிட்டதை கிறிஸ்தவ மத சபை ஒத்துக் கொள்ளவில்லை. அதன் பிரதிபலிப்புதான் இப்போதைய ஆட்சி மாற்றம்.
வடகிழக்கு மாநிலங்கள், மக்களவைக்கு 25 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன. இந்த மாநிலங்களில் காங்கிரஸின் கடைசிக் கோட்டையாக இருந்த மிஸோரமும் இப்போது சரிந்துவிட்டிருக்கிறது. இதன் பிரதிபலிப்பு 2019 மக்களவைத் தேர்தலில் காணப்படும் என்பதால், பாஜக சற்று ஆறுதல் அடையலாம். மத்தியில் ஆட்சி மலரும் கட்சியை ஆதரிப்பது என்பது வடகிழக்கு மாநில அரசியல்வாதிககளின் வழக்கம் என்பதால், காங்கிரஸ் தன்னைத் தேற்றிக் கொள்ளலாம்.
2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொடர்ச்சியாக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெறத் தொடங்கியபோது, பிரதமர் நரேந்திர மோடி தனது இலக்காக காங்கிரஸ் இல்லாத இந்தியா அமைவதை நிர்ணயித்தார். அது நடக்கவில்லை. காங்கிரஸ் இல்லாத வடகிழக்கு மாநிலங்கள்தான் சாத்தியப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் நிலவிய கடும் போட்டியும் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததும் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தியது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுத்து, மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது, பாஜகவின் வீழ்ச்சிக்கு அடுத்தகட்ட அறிகுறியாகக் கருதப்பட்டது. அந்த வரிசையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, காங்கிரஸுக்குத் தனது வருங்காலத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. 
கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜகவுடன் நேரடியாக மோதிய தேர்தல் எதிலும் காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலில், மிக மிக அதிகமான தொகுதிகளில் பாஜகவுடன் நேரடியாக மோதும் கட்சியாக இருப்பது காங்கிரஸ் மட்டுமே. சுமார் 150-க்கும் அதிகமான தொகுதிகளில், பாஜகவை காங்கிரஸ் எதிர்கொள்கிறது. அதனால்தான், இந்தச் சுற்று சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து மக்களவைக்கு 65 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மத்தியப்பிரதேசத்தில் இரண்டு, சத்தீஸ்கரில் ஒன்று என்று காங்கிரஸ் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இப்போதைய சட்டப்பேரவை முடிவுகளால், 2019 மக்களவைத் தேர்தலில் 65 தொகுதிகளிலும் பாஜகவுக்குத் கடுமையான போட்டியை ஏற்படுத்தி, அதில் பாதிக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பை காங்கிரஸுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மக்களவைத் தேர்தல் முடிவுகளைக் கணித்துவிட முடியாது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மாநிலம் சார்ந்த பிரச்னைகளின் அடிப்படையில்தான் வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பது தெரிகிறது. இதே மனநிலை மக்களவைத் தேர்தலின்போது காணப்பட வேண்டும் என்பது கிடையாது.
ஆட்சியில் இருப்பவர்கள் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகத்தான் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை நாம் பார்க்க வேண்டும். தெலங்கானா தவிர, ஏனைய நான்கு மாநிலங்களிலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை காணப்பட்டது தெரிகிறது. இதேபோல, மத்திய ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களவைத் தேர்தலில் இருக்காது என்பது என்ன நிச்சயம்?
மாநிலத் தேர்தல் முடிவுகள் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கும் செய்தி இதுதான் - இந்திய ஜனநாயகம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. வாக்குப் பதிவு இயந்திரமும் சரியாகத்தான் வேலை செய்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com