தினமணி வழங்கும் விருது!

இன்று மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள். இந்த ஆண்டு முதல் தினமணி நாளிதழ் சார்பில் அவரது பிறந்த நாளன்று மகாகவி பாரதியார் விருது எட்டயபுரத்தில்


இன்று மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள். இந்த ஆண்டு முதல் தினமணி நாளிதழ் சார்பில் அவரது பிறந்த நாளன்று மகாகவி பாரதியார் விருது எட்டயபுரத்தில் வழங்கப்பட இருக்கிறது. 
தலைசிறந்த பாரதி ஆய்வாளராகவோ, பாரதியைப் போற்றும் அவரது மரபில் வந்த கவிஞராகவோ, பாரதியின் புகழ் பரப்பும் தொண்டராகவோ இருக்கும் ஒருவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவரும் நமது தினமணி நாளிதழ் ஆண்டுதோறும் மகாகவி பாரதியார் விருதும் வாழ்த்துப் பத்திரமும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்க இருக்கிறது.
முதலாவது ஆண்டாக இன்று, பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில், தமிழக ஆளுநரால் அந்த விருது வழங்கப்படுகிறது. மூத்த பாரதி ஆய்வாளரான, பாரதியாரின் படைப்புகளைக் காலவரிசைப்படுத்திய 85 வயது சீனி. விஸ்வநாதன் அந்த விருதைப் பெறுகிறார்.
மகாகவி பாரதியைக் கொண்டாடவும், அவரது நினைவைப் போற்றிப் பாதுகாக்கவும் தினமணிக்கு உரிமையும் கடமையும் உண்டு. மகாகவி பாரதியாரின் 13-ஆவது நினைவு நாளன்று தினமணி தொடங்கப்பட்டபோது வாழ்க பாரதி! என்ற துணைத் தலையங்கம் முதல் நாளன்று தீட்டப்பட்டிருந்ததை இன்றைய தலைமுறையினருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். 
தமிழ் மொழியின் மறுமலர்ச்சியின் அடையாளம் பாரதியார்தான். பாரத நாட்டின் இதர மாகாணங்களில் எல்லாம் தேசிய எண்ணம் பொங்கி எழுந்துக்கொண்டிருந்த சமயத்தில் தமிழகம் மட்டும் உணர்ச்சிக் குன்றியிருந்ததைக் காணச் சகியாது தமிழர்களைத் தட்டி எழுப்பிய முன்னணி வீரர்கள் சிலரே. அவர்களுள் பாரதியாரே முக்கியமானவர் என்றும், நவயுகத்தின் தூதராக தோன்றிய கவிஞரை அவரது காலத்தில் தமிழகம் முற்றிலும் உணர்ந்துகொள்ளவில்லை. செல்வம் எத்தனை உண்டு புவிமீதே, அவை யாவும் படைத்த தமிழ்நாடு என்று கம்பீரமாகப் பாடிய அந்தக் கவிஞரை வறுமையில் வாடுமாறு விட்டுவிட்டது. இனியாவது அந்தக் கவிஞனின் திருநாமம் என்றென்றும் பசுமையாகத் தமிழர் சந்ததியிடை வாழ்வதாக! என்றும், வெளியான அந்த முதல் நாள் தலையங்கத்தில் விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை நிறைவேற்றும் பணியின் தொடர்ச்சிதான் இப்போது தினமணி நாளிதழ் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாருக்கு அவரது பிறந்த நாளன்று விழா எடுத்து சிறப்பிக்க முற்பட்டிருக்கும் இந்த முயற்சி.
இன்றைய தமிழ் இலக்கியத்தின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் வித்திட்ட பெருமை மகாகவி பாரதிக்கு உண்டு. அவர் கவிஞராகவும், சுதந்திரப் போராளியாகவும் மட்டுமே இல்லாமல் மிகப்பெரிய சமுதாயப் புரட்சிக்கு அடித்தளமிட்டுத் தந்தவர் என்பதையும் யாரும் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. ஒருசிலர் காழ்ப்புணர்ச்சியாலும், துவேஷத்தாலும் அவர் மீது வெறுப்பை உமிழ முற்பட்டிருக்கும் அவலத்தைப் பார்க்கும்போது, அவர்களுக்காகப் பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. 
தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான். அதனால்தான் அவ்வளவு பாடல்களும் மனத்தின் அடித்தளத்திலிருந்து வந்திருக்கின்றன. எல்லாம் இயற்கை. ஒன்றுகூட செயற்கை இல்லை. கம்பனுக்குப் பிறகு பாரதி ஒருவனே அப்படிப் பாடியவன். இடையில் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. எவ்வளவோ காவியங்கள் வெளிவந்திருக்கின்றன. எதுவும் பாரதிக்குப் பக்கத்தில் நிற்க முடியவில்லை. இன்னும் அந்த இடத்தை நிரப்ப இன்னொருவன் இல்லை என்று நாற்பது ஆண்களுக்கு முன்னால் தனது கண்ணதாசன் இதழில் எழுதுகிறார் கவியரசு கண்ணதாசன். 
பாரதி நூற்றாண்டு விழா 1981 டிசம்பரில் கொண்டாடப்பட்டபோது கவியரசு கண்ணதாசன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஆண்டுதோறும் பாரதியின் பெயரில் ஒரு விருதை நிறுவி, பாரதி ஆய்வாளர் ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தர வேண்டும் என்பதுதான் அவர் தெரிவித்திருந்த விருப்பம். 
சங்க இலக்கியத்துக்கு உவேசா போல, பாரதி இலக்கியத்துக்கு சீனி. விஸ்வநாதன் என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவருக்கு தினமணி நாளிதழ் மகாகவி பாரதியார் விருது வழங்கி கெளரவித்து அவரது கனவை நனவாக்க முற்பட்டிருக்கிறது. 
ஆண்டுதோறும் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறதே தவிர, மகாகவி பாரதிக்கு உகந்த மரியாதை நம்மால் இன்னும் தரப்படவில்லை. மக்களின் நிதியுதவியால் மூதறிஞர் ராஜாஜி, தோழர் ஜீவா, ஆசிரியர் கல்கி ஆகியோரால் எழுப்பப்பட்ட எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தின் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் செய்யப்பட்ட அறிவிப்புகள் 36 ஆண்டுகளாகியும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. 
எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்திற்கு பின்னால் மிகப்பெரிய கலையரங்கமும், காட்சிக்கூடமும், நூலகமும் அமைப்பதற்காக அப்போது ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் நிலம் இப்போது புதர் மண்டிக் காணப்படுகிறது. மணிமண்டபத்தைச் சுற்றிப் பசுமையான பூந்தோட்டம் அமைக்கப்படவில்லை. குறைந்தபட்சம், பாரதியார் விரும்பியதுபோல மணிமண்டபத்தைச் சுற்றி பத்துப்பன்னிரெண்டு தென்னை மரங்கள்கூட இல்லை. 
ஆண்டுதோறும், பிறந்த நாள் அன்றும், நினைவு நாள் அன்றும் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துவது அரசுச் சடங்காக மாறிவிட்டிருக்கிறது. 
இந்த நிலை மாற வேண்டும். உலகெங்கும் உள்ள பாரதி அன்பர்கள் கூடும் இடமாக எட்டயபுரம் மாற வேண்டும். பாரதி ஆய்வாளர்களின் கருவூலமாக மணிமண்டப நூலகம் உருவாக வேண்டும். 
கவியரசு கண்ணதாசன் கூறுவதுபோல, பாரதியைக் கொண்டாடாதவனுக்கு தமிழன் என்று சொல்ல அருகதை இல்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com