தேவர் அனையர் கயவர்!

குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதும், வெற்றி பெறுவதும் சட்டம் இயற்றும் அதிகாரம் உடையவர்களாக வலம் வருவதும் தடுக்கப்படாமல் தொடர்கிறது.

குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதும், வெற்றி பெறுவதும் சட்டம் இயற்றும் அதிகாரம் உடையவர்களாக வலம் வருவதும் தடுக்கப்படாமல் தொடர்கிறது. அரசு ஊழியர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரிப்பது போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் மீது சுமத்தப்படும் குற்றங்களையும் விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது அவசியமாகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர் மீதான குற்றங்களை ஓராண்டுக்குள் விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்கிற 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மேல்முறையீடு செய்து தங்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வழியில்லாமல் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இப்போது ஒருபடி மேலே போய், மாவட்டம் தோறும் பதவி வகித்த, பதவியில் இருக்கும் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
வழக்குரைஞரும் பாஜக தலைவருமான அஸின் உபாத்யாய என்பவர் குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், கே.எம்.ஜோஸப் ஆகியோர் அடங்கிய அமர்வு கேரளம், பாட்னா ஆகிய இரண்டு உயர்நீதிமன்றங்களும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டிருக்கிறது. அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்கும் வழக்குகளை முன்னுரிமை கொடுத்து மாவட்டங்களில் அமையும் சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. 
இதற்கு முன்னால் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் உத்தரவிலிருந்து இப்போதைய தீர்ப்பு மாறுபடுகிறது. உயர்நீதிமன்றம் முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப மாவட்ட அமர்வு நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை அமைக்கப் பணித்திருக்கிறது. மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்பான எல்லா வழக்குகளையும் மாவட்டங்களில் அமையும் சிறப்பு நீதிமன்றங்களில் குவிக்காமல், பிரித்துக் கொடுப்பதன் மூலம் விரைந்து விசாரித்து முடிவெடுக்க முடியும் என்கிற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் வரவேற்புக்குரியது.
இந்தியாவில் முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான 4,122 கிரிமினல் குற்றங்களுக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில் 1675 வழக்குகள் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பானவை. 264 வழக்குகளின் விசாரணை உயர்நீதிமன்றங்களால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கின்றன. 1991 முதல் நிலுவையில் இருக்கும் சில வழக்குகளில் இன்னும் கூடக் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்படவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் மட்டும் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான 992 வழக்குகள் அலாகாபாதிலுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே விசாரணை தாமதப்படுத்தப்பட்ட நிலையில்தான் தொடர்கின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் 109 வழக்குகளில் 38 வழக்குகளும், தெலங்கானாவில் 99 வழக்குகளில் 66 வழக்குகளும், அமர்வு நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 
மிக அதிகமான வழக்குகள் பிகார் மாநிலத்திலும் , கேரள மாநிலத்திலும்தான் காணப்படுவதாகப் பொதுநல வழக்கு தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் அதிகமான குற்றம் சாட்டப்பட்ட முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை எதிர்கொள்கின்றன. பெரும்பாலான வழக்குகள் தொடர்ந்து தள்ளிப்போடப்படுகின்றன. பாதிக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலைமை காணப்படுகிறது. இந்த வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்னால், குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதி, பலமுறை சட்டப்பேரவையிலோ, மக்களவையிலோ உறுப்பினராகிவிடும் விபரீதம் தொடர்கிறது.
1982இல் கொலைக் குற்றம் தொடர்பாக, கேரளத்தின் மின்துறை அமைச்சர் எம்.எம். மாணி மீதான வழக்கின் விசாரணை 36 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடங்கவில்லை. கர்நாடகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 10 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், ஒரு வழக்கில் கூடக் காவல்துறை இன்னும் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மீதான ஊழல் வழக்கு 2007-இல் தொடரப்பட்டும் கூட இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறது. 
இந்தப் பின்னணியில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை, மாவட்ட அளவில் ஓராண்டுக்குள் விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றத்துக்கு நமது பாராட்டுகள். மக்கள் மன்றத்தை ஏமாற்றுவது போல நமது அரசியல்வாதிகள் நீதிமன்றத்தையும் ஏமாற்றிவிடாமல் இருப்பார்கள் என்று நம்புவோமாக!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com