வேளாண் இடர் நிஜம்!

இந்தியா ஒரு விவசாய நாடு என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோமே தவிர,

இந்தியா ஒரு விவசாய நாடு என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோமே தவிர, சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் துறை ஒன்று இருக்குமானால், அது வேளாண் துறையாகத்தான் இருக்கும். கடந்த வெள்ளிக்கிழமை, இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராட கூடியது வியப்பை ஏற்படுத்தவில்லை.
கட்சி சார்பற்ற பல்வேறு விவசாய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்ட அந்தப் பேரணியில், அநேகமாக எல்லா முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். அரசுத் தரப்பிலிருந்து ஒருவரும் கலந்து கொள்ளாதது எதிர்பார்க்கப்பட்டதுதான். அதிகரித்த குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்துதல் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் இந்தப் பேரணியிலும் வலியுறுத்தப்பட்டன. வேளாண் இடர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக இருந்தது.
கடந்த சில மாதங்களாகவே விவசாயிகளின் போராட்டம் ஆங்காங்கே வெடித்து வருகிறது. பரவலாக வன்முறையில் ஈடுபடாமல் தங்களது ஒற்றுமையையும் பலத்தையும் கட்டுப்பாடான முறையில் வெளிப்படுத்தும் விவசாயிகளின் போராட்டம் நகர்ப்புற இந்தியாவில் வேளாண் இடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தங்களது உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து இன்னும்கூட நகர்ப்புறவாசிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. விவசாயிகளின் போராட்டத்தை ஊடகங்களேகூட அன்றாட நகர்ப்புற வாழ்க்கையை பாதிக்கும் செயல்பாடாகத்தான் வர்ணிக்கின்றன என்பது மிகப்பெரிய சோகம்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் விவசாய உற்பத்தி அதிகரித்திருக்கிறது. தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. முன்பெல்லாம் வறட்சியும், போதுமான உற்பத்தியின்மையும் விவசாயிகளின் வறுமைக்குக் காரணமாக இருந்தன என்றால், இப்போது அதிகரித்த உற்பத்தி அவர்களுக்குப் பாதகமாகி இருக்கிறது. உற்பத்தி அதிகரிப்பால் உணவுப் பொருள்களின் விலை சரிந்திருக்கிறது. அதனால், விவசாயிகளின் திருப்பி செலுத்தப்படாத கடன் 20% அதிகரித்திருக்கிறது. 
நிகழாண்டில் அளவுக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டும்கூட, பத்துக்கும் மேற்பட்ட முறை விவசாயிகளின் போராட்டம் நடந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக 200-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் தில்லியில் முகாமிட்டிருக்கின்றன. அவர்களது மொத்த உற்பத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது வேண்டுகோள்.
நல்ல விளைச்சல் இருந்தும்கூட, விவசாயிகள் பிரச்னையை எதிர்கொள்வதற்கு என்ன காரணம்? அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம். குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்படுவது ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுகிறது என்பது இன்னொரு காரணம். பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுக் கோரல்கள், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பது இன்னொரு காரணம். அதனால், இந்திய விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கடனாளிகளாகவே தொடர்கின்றனர். 
ஆண்டொன்றுக்கு சராசரியாக 15,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் தங்களது நிலங்களை விற்றுவிட்டு, விவசாயக் கூலிகளாக மாறியிருக்கும் சம்பவங்கள் ஏராளம். இப்போதெல்லாம் விவசாயிகளின் தற்கொலை எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை; பழகிவிட்டது. தேசிய குற்ற ஆவண புலனாய்வுப் பிரிவுகூட கடந்த 2016 முதல் விவசாயிகளின் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டது என்பதிலிருந்து, எந்த அளவுக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் நாசிக்கிலிருந்து மும்பைக்கு மிகப்பெரிய பேரணி நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை ஏற்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த வாரம் மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் மீண்டும் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோலத்தான் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்கம், ஹரியாணா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகள் போராட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
எல்லா மாநிலங்களிலும் விவசாயிகளின் பிரச்னை ஒரே மாதிரியானதுதான். தங்களுக்கு அதிகரித்த விலை கிடைக்க வேண்டும், முறையான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வேண்டும், அரசு நிர்வாகத்தின் ஊழல் அகற்றப்பட வேண்டும் என்பவைதான் அவர்களின் கோரிக்கைகள். 
தெலங்கானாவில் விவசாயிகளுக்குப் பயிரிடுவதற்கான மானியம் வழங்கியிருப்பது, கர்நாடகத்தில் இணையச் சந்தை ஏற்படுத்தியிருப்பது, மகாராஷ்டிரத்தில் இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகளுக்கு மாற்றுவழி ஏற்படுத்தியிருப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, இவை எதுவுமே விவசாயிகளுக்கு நிரந்தரமான தீர்வை உருவாக்கிக் கொடுத்து விடவில்லை. 
வேளாண் இடர் என்பது நிஜம். வேளாண் இடரை விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. வேளாண் இடருக்கு விடை காண முடியாமல் போனால், ஆட்சி மாற்றத்துக்கு ஆட்சியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது வரலாறு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com