கர்தார்பூர் எழுப்பும் அச்சம்!

சீக்கியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை கடந்த புதன்கிழமை, இந்திய - பாகிஸ்தானிய அரசுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

சீக்கியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை கடந்த புதன்கிழமை, இந்திய - பாகிஸ்தானிய அரசுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா, கர்தார்பூர் சாஹேப் என்கிற, அமிருதசரஸ் பொற்கோயிலுக்கு நிகரான புனிதத்துவம் வாய்ந்த சீக்கிய ஆலயத்துக்கு, இந்திய சீக்கியர்கள் செல்வதற்கான வழித்தடத்துக்கு வழிகோலப்பட்டிருக்கிறது.
 இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையிலிருந்து வெறும் 4 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையோரமாக, பாகிஸ்தான் பகுதியில் அமைந்திருக்கிறது கர்தார்பூர் சாஹேப் என்கிற முக்கியமான சீக்கியர்களின் புனிதத்தலம். இன்றைய பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் அமைந்த 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கர்தார்பூர் சாஹேபில்தான் சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவ் தனது கடைசி 18 ஆண்டுகளைக் கழித்தார். இங்குதான் அவர் இறையடி சேர்ந்தார்.
 அடுத்த ஆண்டு, முதலாவது சீக்கிய குருவான பாபா குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த ஆண்டு. இதை கோலாகலமாகக் கொண்டாட இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் தயாராகி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், இந்திய எல்லையில் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து கர்தார்பூர் தர்பார் சாஹேப் என்று அழைக்கப்படும் குருத்துவாராவுக்கு புனிதப்பயணப் பாதையொன்றை ஏற்படுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்மானித்திருக்கின்றன.
 கர்தார்பூர் குருத்வாராவுக்கு இந்தியரொருவர் பயணம் செய்ய, லாகூருக்குச் சென்று அங்கிருந்துதான் நமது எல்லையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள குருத்வாராவுக்கு வரமுடியும் என்கிற நிலைமை இருந்து வருகிறது. இப்போது குர்தாஸ்பூரிலிருந்து கர்தார்பூர் குருத்வாரா வரை 4.5 கி.மீ. நீளமுள்ள ஒரு சிறப்புப் பாதை ஏற்படுத்தப்பட இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே சீக்கியப் புனிதப் பயணிகள், கர்தார்பூர் குருத்வாராவுக்கு எல்லை கடந்து பயணிக்க இந்திய அரசு கோரி வருகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
 கடந்த புதன்கிழமை கர்தார்பூரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதற்கான பூமி பூஜையை நடத்தினார். இந்தியாவிலும் அதேநாளில் இந்திய எல்லை வரையிலான பாதையை அமைக்கும் திட்டத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் தொடங்கி வைத்தனர். இந்திய அரசின் சார்பில் இரு துணை அமைச்சர்கள் பாகிஸ்தானில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். தனிப்பட்ட நட்பு முறையில் பஞ்சாப் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்துவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தானின் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவும் சிறப்புப் பாதைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டதிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஒப்புதலுடன்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பது தெளிவாகிறது.
 இரு நாடுகளுக்குமிடையே தனி நபர்களும், சுற்றுலாப் பயணிகளும் பயணிப்பதற்கான முயற்சிகள் நீண்டகாலமாகவே முன்னெடுக்கப்படுகின்றன. 1995-இல் பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு, கர்தார்பூர் குருத்வாராவை புதுப்பிக்க ஒப்புக்கொண்டது. அதேபோல இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயும், பேநசிர் புட்டோவும் எல்லையின் இருபுறமும் வாழும் சீக்கியர்கள் முக்கியமான குருத்வாராக்களுக்கு பயணிப்பதற்கு சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
 1998-இல் பிரதமர் வாஜ்பாயின் லாகூர் விஜயமும், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் சில நட்புறவு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றாலும், அவ்வப்போது பாகிஸ்தானின் ஆதரவுடனும், தூண்டுதலுடனும் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களும், ஊடுருவல்களும் நல்லிணக்க நடவடிக்கைகளை தடம் புரள வைத்தன. பாகிஸ்தான் அரசின் பேச்சும் செயலும் வெவ்வேறு விதமாக இருப்பதால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வியைத் தழுவுவதில் வியப்பொன்றும் இல்லை.
 குர்தாஸ்பூர் நிகழ்வில் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் வகையில் பேசியிருக்கிறார். ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டும் பிரான்ஸும், ஜெர்மனியும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்ததுபோல இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது மனக் கசப்புகளை மறந்து இணைய வேண்டும் என்றும், அணு ஆயுத வல்லரசுகளான இரண்டு நாடுகளும் போர் குறித்து சிந்திப்பது பைத்தியக்காரத்தனம் என்றும் தெரிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் ஒருபுறம் நேசக்கரம் நீட்டும் பாகிஸ்தான், மும்பை தீவிரவாதத் தாக்குதல், உரி, பதான்கோட் தாக்குதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் நேசக்கரம் நீட்டுவது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?
 கர்தார்பூரில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில், காலிஸ்தான் தீவிரவாதிகள் காணப்பட்டதும், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கான சுவரொட்டிகள் காணப்பட்டதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. புனிதப் பயணத்துக்கு வழிகோலும் பாதை, பயங்கரவாத ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்?
 கர்தார்பூர், சமாதானத்துக்கான தொடக்கம் என்று மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில், காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துக்கு வலு சேர்க்கும் பாதையாகி விடுமோ என்கிற அச்சமும் மேலிடுகிறது. சிங்களத் தீவுக்கு பாலம் அமைப்பதற்கே பயப்படுகிறோம். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானுக்குப் பாதை அமைத்து மகிழவா முடியும்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com