விபத்தில் இறந்த மகனது நினைவாக கண்ணில் படும் சாலைக்குழிகளை எல்லாம் நிரப்பி வரும் வித்யாச மனிதர்!

தரமற்ற சாலைகளைப் போட்டுத்தந்த சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களே அதை செப்பனிட்டு மீண்டும் சாலைகளை தரமானதாக அமைத்துத் தர வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்க வேண்டும். 
விபத்தில் இறந்த மகனது நினைவாக கண்ணில் படும் சாலைக்குழிகளை எல்லாம் நிரப்பி வரும் வித்யாச மனிதர்!

மும்பையைச் சேர்ந்த தாதாராவ் பிலோரே, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனியொரு மனிதராக இதுவரை இந்தியா முழுவதிலுமாக உயிராபத்து விளைவிக்கும் வகையில் கேட்பாரற்றுத் திறந்து கிடந்த சுமார் 600 சாலைக்குழிகளை மூடியுள்ளார். இவரது தன்னார்வச் செயல்பாட்டில் சிறிதும் பொருளாதார நோக்கமோ அல்லது சுய விளம்பர தாகமோ இல்லவே இல்லை. 16 வயதில், நம்பிக்கை மிகுந்த மாணவனாகத் திகழ்ந்த தமது மகன் பிரகாஷ் பிலோரேவியின் அகால மரணமே அவரை இப்படியொரு சேவை செய்யத் தூண்டியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாதாராவ் பிலோரேவின் மகன், பிரகாஷ் பிலோரே சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு காரணம் மூடப்படாத சாலைக்குழிகளே. இந்தியாவில் மூடப்படாது திறந்து கிடக்கும் சாலைக்குழிகளால் நாளொன்றுக்கு ஆயிரம் நபர்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள். ஆனாலும் சாலைக்குழிகளைப் பற்றியதான விழிப்புணர்வு நமது மக்களுக்கு வந்திருக்கிறதா என்றால்? இல்லையென்று தான் சொல்ல வேண்டும். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களில் இருந்து மாறுபட்டு தமக்கான பேரிழப்பின் பின்னும் தாதாராவ் பிலோரி மும்பை சாலைகளைச் செப்பனிடப் புறப்பட்டது தான் மிகப்பெரிய விந்தை.

சாலைக்குழிகளைச் செப்பனிட்ட பிறகு ஒவ்வொருமுறையும் தாதாராவ் பிலோரி தமது மண்வெட்டியை கீழே வைத்து விட்டு அகன்ற வானை நிமிர்ந்து நோக்குகிறார். வானை நோக்கி விபத்தில் இழந்த தம் மகனின் நினைவாக ஓரிரு நிமிடங்கள் பிரார்த்தனை செய்கிறார். மும்பை மாதிரியான நெருக்கடியான பெருநகரத்தின் பாழடைந்த சாலைகளை அரசாங்கம் தான் சரி செய்யவேண்டும் என்று மக்கள் காத்திருப்பதில் அர்த்தமில்லை. நம்மால் ஆன முயற்சிகளை நாமும் செய்யத் தொடங்கலாம். அப்போது தான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்பதாக இருக்கிறது தாதாராவ் பிலோரியின் எண்ணம்.

இதற்காகக் கட்டட வேலைகள் நடைபெறும் பகுதியில் இருந்து மணல் மற்றும் ஜல்லிக்கற்களைச் சேகரிக்கிறார் தாதாராவ். அவற்றைக் கொண்டு தான் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் சுமார் 600 சாலைக்குழிகளை நிரப்பி சமப்படுத்தி இருக்கிறார். இந்தியாவில் வாழ்வதற்குத் தகுதியான நகரங்களின் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கும் மும்பை வெகு சீக்கிரத்தில் திறந்து கிடக்கும் சாலைப் பள்ளங்கள் விஷயத்தில் முதலிடம் பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில், அந்த அளவில் மும்பை நகரவாசிகளின் தினசரி சாலைப் பயணங்களில் பீதியுண்டாக்கக் கூடிய முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக விஸ்வரூபமெடுத்து வருகின்றன இந்த சாலைப் பள்ளங்கள்.

இந்நிலையில் 48 வயது காய்கறி வியாபாரியான தாதாபாய் பிலோரே, சாலைப் பள்ளத்தின் காரணமாக நிகழ்ந்த விபத்தில் இறந்த மகனது நினைவைப் போற்றும் வகையில் இப்படியோர் முயற்சியை மேற்கொண்டு வருவது மேலும் பலரது உயிர்ப்பலி நேராமல் தடுக்கும் என்று அவர் நம்புகிறார். என் மகன் எங்களை விட்டுச் சென்றதில் எங்கள் வாழ்வே வெறுமையாகி விட்டது. இப்படியோர் வெறுமை வேறொருவர் வாழ்வில் அவர்களுடைய அன்புக்குரியவர்களை இழப்பதினால் வந்து விடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அதனாலேயே என் மகன் பெயரில் இப்படியோர் சேவையை எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார் தாதாராவ்.

விபத்தன்று தன் மகன் பிரகாஷ் பிலோரே, தனது ஒன்று விட்ட சகோதரருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அது மும்பையின் அடைமழைக் காலம். அப்படியோர் அடைமழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கையில் மும்பையின் சாபங்களான சாலைப் பள்ளங்களை இனம் காண முடியவில்லை. ஏதோ ஒரு சாலைப் பள்ளத்தில் இரு சக்கர வாகனம் எதிர்பாராமல் உருண்டதில் வாகனத்தின் பில்லியனில் தலைக்கவசம் அணியாமல் அமர்ந்து பயணித்த பிரகாஷ் தூக்கி எறியப்பட்டார். வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த சகோதரர் தலைக்கவசம் அணிந்திருந்தபடியால் அவர் சிறு காயங்களுடன் தப்பி விட முடிந்தது. ஆனால், பிரகாஷுக்கு தலையில் அடிபட்டு அவர் உயிர் இழக்க நேரிட்டது பெரும் சோகம். தலைக்கவசத்தைத் தாண்டியும் இந்த விபத்தில் மும்பையின் சாலைப் பள்ளங்களே உயிரிழப்புக்கான முதல் காரணமாகி விட்டன.

மும்பை கூடிய விரைவில் தன்னகத்தே பெருகி வரும் சாலைப் பள்ளங்களுக்காகவே கின்னஸ் உலகச் சாதனை பதிவேட்டில் முதலிடம் பெற்றாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. மும்பையில் மட்டும் இன்றைய தேதிக்கு நகர் முழுவதுமாக 27,000 சாலைப்பள்ளங்கள் இருப்பதாக www.mumbaipotholes.com எனும் இணையதளம் ஆதாரப் பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு ஆட்சேபணை இருந்த போதும் இதில் உண்மை இல்லாமலும் இல்லை என்கிறார் தாதாராவின் அண்டை வீட்டுக்காரரான நவின் லடே.

நாளொன்றுக்கு 10 சாலை விபத்துக்கள் இந்த சாலைப் பள்ளங்களின் காரணமாகவே நிகழ்வதாக அரசு இணையதளம் கூறுகிறது.

புள்ளிவிவரக் கணக்குகளின் படி இந்தியா முழுவதிலுமாக ஒவ்வொரு ஆண்டும் 3,597 பேர் சாலை பள்ளங்களின் காரணமாக விபத்தில் மரணமடைகின்றனர். 

மக்கள் எப்போதும் போல அரசையும், அதிகாரிகளையும்  குறை கூறிக் கொண்டு அமைதி காத்து விடுகிறார்கள். ஆனால், சாலைகள் அப்படியே தான் இருக்கின்றன.

நல்ல தரமான சாலைகள் வேண்டுமென்றால் மோசமான, தரமற்ற சாலைகளைப் போட்டுத்தரும் ஒப்பந்த தாரர்களிடம் அரசு ஒரு நிபந்தனை விதிக்க வேண்டும். சாலைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சேதமடைந்தால் காரணம் அவர்கள் பயன்படுத்திய தரமற்ற கட்டுமானப் பொருட்களால் மட்டுமே என்று பொறுப்பேற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களே அதை செப்பனிட்டு மீண்டும் சாலைகளை தரமானதாக அமைத்துத் தர வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மீண்டும் தரமற்ற சாலைகளை வருங்காலத்தில் போடாமல் இருப்பார்கள். என்கிறார்கள் தன்னார்வலர்கள்.

சாலை பணிகள் ஒப்பந்த விஷயத்தில் அரசு மேலும் சிரத்தையுடன் செயல்பட்டு தரமானவர்களை தேர்ந்தெடுத்து நகரின் கட்டமைப்பில் தரத்தை நிலைநிறுத்த வேண்டும். என்கிறார் தாதாராவ் பிலோரே.

தான் மட்டுமே இதுவரை 585 சாலைப்பள்ளங்களை நிரவி மூடியிருப்பதாகவும் அவற்றில் பலவற்றையும் தான் தனியொரு மனிதனாகச் செப்பனிட்டதாகவும் மிகுந்தவை தனது சமூக சேவையில் நாட்டமும் விருப்பமும் கொண்ட தன்னார்வலர்களின் உதவியால் சாத்தியப்பட்டதென்றும் அவர் தெரிவித்தார். தனது இந்த சமூகப்பணிக்காக தாதாராவை பாராட்டாத இந்திய ஊடகங்களே இல்லை. இதற்காக பல்வேறு விருதுகளையும் கூட மனிதர் பெற்றிருக்கிறார் என்பதோடு அவருக்கு  'சாலைப்பள்ள சகோதரர்' (pothole dada) என்ற பட்டப் பெயரையும் பெற்றுத்தந்துள்ளது.

தன்னுடைய சேவைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மேலும் மேலும் இப்படியான சேவைகளில் ஈடுபடும் ஊக்கத்தை தமக்கு அளிப்பதாகக் கூறும் தாதாராவ், எப்போதெல்லாம் மகனது இழப்பு தம்மை அளவுக்கதிகமாக வலிமை குன்றச் செய்கிறதோ அப்போதெல்லாம் நாம் மணலையும், ஜல்லியையும் தூக்கிக் கொண்டு சாலைப் பள்ளங்களை நிரப்பக் கிளம்பி விடுவேன். அப்படியான தருணங்களில் என் மகன் பிரகாஷ் என்னுடனேயே என் வேலைகளில் துணை நிற்பதாக நான் உணர்கிறேன்’ என்கிறார் தாதாராவ்.

தான் வாழும் காலம் முழுமையும் இந்தச் சேவையில் ஈடுபடப் போவதாகவும் எங்கெல்லாம் சாலைப் பள்ளங்கள் தென்படுகின்றனவோ அங்கெல்லாம் உடனடியாக இறங்கி அதை மூடும் வேலையில் தான் இறங்குவதாகவும் தாதாராவ் பிலோரே தெரிவித்திருக்கிறார்.

இழப்பு மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது, பண்படுத்துகிறது, சமுதாயத்திற்கு உதவிகரமானவர்களாக மாற்றுகிறது என்பதற்கு நாம் வாழும் காலத்திய மிகச்சிறந்த உதாரணம் இந்த தாதாராவ் பிலோரே!

அவரது பணிகள் வாழ்க வளர்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com