இணைந்த கைகள்: அன்புச் சகோதரர்களாக பின்னிப் பிணையும் ஆசியாவும் ஐரோப்பாவும்!

நீண்ட கால வரலாற்றுப் பிணைப்பு கொண்ட ஆசியாவும் ஐரோப்பாவும் வெவ்வேறு பாரம்பரிய கலாச்சார சூழல்கள், பல்வேறு சர்ச்சைகள், கருத்துவேறுபாடுகள்
இணைந்த கைகள்: அன்புச் சகோதரர்களாக பின்னிப் பிணையும் ஆசியாவும் ஐரோப்பாவும்!


நீண்ட கால வரலாற்றுப் பிணைப்பு கொண்ட ஆசியாவும் ஐரோப்பாவும் வெவ்வேறு பாரம்பரிய கலாச்சார சூழல்கள், பல்வேறு சர்ச்சைகள், கருத்துவேறுபாடுகள் என தனித்தனியாக இயங்கி கொண்டிருந்தாலும்  உலகம் முழுவதும் இப்போது அமைதி, கூட்டு ஒத்துழைப்பு மற்றும் பரவலான வளர்ச்சி போன்ற தேடல்களின் மையப்புள்ளியில் இணைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

எனவே அவ்வப்போது அமைப்பு ரீதியாக, ஒன்றிணைந்து கூட்டு விவாதம் மூலம் சர்வதேச முன்னேற்றங்கள் மற்றும் பொது அமைதி, கூட்டு வளர்ச்சி குறித்து உலக நாடுகள் சிந்தித்து வருகின்றன. அந்த வகையில் ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து  ASEM ஆஸம் மன்றத்தை உருவாக்கி வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேசி கூட்டாக கைகோர்த்து புதிய ஒப்பந்தங்களை உருவாக்கி வருகின்றன.  

ASEM ஆசம் மன்றத் தோற்றம்
ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கும் இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு ஒரு பிராந்திய மன்றமாக நிறுவப்பட்டது தான் ASEM என்ற இந்த அமைப்பு..  இதில் வடகிழக்கு மற்றும் தெற்காசியாவில் இருந்து 17 உறுப்பு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 28 கூட்டாளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த இரண்டு பிராந்தியங்களின் ஒருங்கிணைப்பு ஒரு புதிய உலக மேலாண்மையை சமநிலைப்படுத்துதுவதற்கான சாத்தியத்தை கொண்டுள்ளது.

ஆசிய பசிபிக் கட்டமைப்பு,  பொருளாதார வளர்ச்சி,  அரசியல் சூழல், சர்வதேச வர்த்தகத்தில் புதிய மாற்றங்கள், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கிய காரணியாக உள்ள ஆசிய பொருளாதார வளர்ச்சி, மற்றும் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல், உள்ளிட்ட நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் ASEM  மன்றம். இதன் முதலாவது கூட்டம் 1996ம் ஆண்டு மார்ச் மாதம் பாங்காக்கில் நடைபெற்றது.

1990 களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவுகளால் ஏற்பட்ட பனிப்போர் முடிவு, சர்வதேச உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க விளைவைக் கொடுத்தது. முந்தைய காலங்களில் நிகழ்ந்ததைப் போலவே, கருத்தியல் முரண்பாடு ஏற்படாதவண்ணம் நாடுகள் அல்லது குழுக்கள் ஒருவரோடு ஒருவர் நல்லுறவு கொள்ளத் தீர்மானித்தன. வெவ்வேறு தத்துவார்த்த மற்றும் அரசியல் பின்னணி கொண்ட பல நாடுகளும் தங்கள் தேசிய நலன்களை பெற தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும் என 1996 இல் ASEM வலியுறுத்தியது.
அரசியல் மற்றும் பொருளாதார பின்னணி
1989-ம் ஆண்டில், ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் 12 நாடுகள் இணைந்து ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) என்ற ஒரு மன்றத்தை அமைத்தன. இது ஐரோப்பாவிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஐரோப்பா, ஆசியாவுடனான தன் உறவை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆசிய நாடுகளை அணுகி ஆசிய நாடுகளில் பிராந்திய அமைப்பு ஒத்துழைப்புக்கு அடித்தளமிட்டது. இதையடுத்து ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வலுவான உறவு தேவை என்பதை அரசியல் ரீதியாக உணர்ந்து வேகமான மாற்றம் மற்றும் இறுக்கமான போட்டியின் செயல்பாட்டின் மத்தியில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்குவதன் நோக்கில் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. 

சமூக கலாசாரப் பின்னணி
ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கும் நீண்டகால உறவு ஒரு முக்கிய வழிமுறையாகும். வரலாற்று பக்கங்கள் கொஞ்சம் கசப்புணர்வை கொடுத்தாலும் காலனித்துவ காலத்திலிருந்து பிறகு பல ஐரோப்பிய நாடுகள் ஆசியா பற்றி ஒரு புரிதலை உருவாக்க, முனைப்பு காட்டின. ஆசிய ஆய்வுகள் மையங்களும் ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதேபோல் ஆசியாவிலும் ஐரோப்பாவின் பல்வேறு கலாச்சார அம்சங்கள் சமூக அரசியல் கட்டமைப்பு போன்றவற்றை உள்வாங்கி கொண்டுள்ளன. அந்த வகையில் நூற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடன் விளங்கக் கூடிய ஆசியா - ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு விரிவான மற்றும் பல கலாசார ஒத்துழைப்பை உருவாக்கவும்  பிராந்திய அமைதி மற்றும் உலக சமாதானத்தை அடையவும் ASEM ஒரு பெரிய வாய்ப்பைக் உருவாக்கியுள்ளது.

ASEM ஆசம் மாநாடுகள்
ASEM ஆசம் என்ற இந்த அமைப்பு 3 முக்கிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டுள்ளன. 1) அரசியல் பாதுகாப்பு, (2) பொருளாதாரம் வர்த்தக முதலீடு, (3) கலாச்சாரம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பு. இதன் அடிப்படையில் இயங்கும் ASEM மன்றத்தின்  8வது ASEM உச்சிமாநாடு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. அப்போது ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை முறையாக ASEM மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ASEM மன்றத்தின் 12 வது மாநாடு
உலக சமாதானம், 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நலன்களை அதிகரித்தல், அதுமட்டும் இல்லாமல்  உலகில் மிக உயர்ந்த அளவில் நாகரீகம் வளர்ச்சியடைந்த பகுதியாக அறியப்பட்டிருக்கும் இடங்களில் வாழும் மக்களுடன் ஒரு அறிமுகமாதல், நட்பை அதிகரித்தல்,  அறிவை வளர்த்துக்கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல்.  "தனித்துவமான" உறவு மேம்பாடு, கூட்டாளிகளுடன் "ஒற்றுமையை ஊக்குவித்தல் என பல நோக்கங்களுடன் செயல்பட தொடங்கிய இந்த அமைப்பின் 12 வது மாநாடு இம்மாதம் 18 மற்றும் 19ம் நாள்களில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து ஆசிய, ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின.

இதில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டார். சீனாவின் சார்பில் சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் கலந்து கொண்டார். பெல்ஜியம் மன்னர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பல்வேறு நாட்டு தலைவர்களையும் சிறப்பான முறையில் வரவேற்றார்.

இம்மாநாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று அரசியல் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சீனா முன்வைத்தது. சீனா - ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான உறவு வலுப்படுவதன் மூலம் ஆசிய - ஐரோப்பிய கண்டங்களுக்கிடையே உள்ள வர்த்தக பரிமாற்றம் மேம்படும். விரைவில் சீன முதலீட்டு உடன்படிக்கை கையொப்பம் இடப்படும் எனவும் இம்மாநாட்டில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச விவகாரங்களில் இதுபோன்ற கூட்டமைப்புகள் மற்றும் மன்றங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சியினால் உலக அளவிலான நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் எட்ட முடியும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 

இத்தகைய  மாற்றங்களுக்கு முன்னேற்றங்களுக்கும் ஆசியாவின் மிகப்பெரிய வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் முழு ஒத்துழைப்பு தரவேண்டிய அவசியம் இருக்கிறது. சீனா தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்ற பாதையில் சீரான வளர்ச்சி பெற்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படியான கூட்டு முயற்சியின் மூலம் உலநாடுகளின் எல்லா பகுதிகளிலும் சீரான வளர்ச்சிப் போக்கை கொண்டு சேர்க்க ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய லட்சியமான ஆசியாவுடன் வர்ந்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதற்கும் இது பெரிதும் உதவியுள்ளது. இந்நிலையில் ஆசிய - ஐரோப்பிய தொடர்பு  மற்றும் மானியப் பரிமாற்றத்தை முன்னேற்றுவது குறித்து சீனா கருத்தில் கொண்டுள்ளது. அதுபற்றி இம்மாநாட்டில் சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் பன்நாட்டு தலைவர்களுடன் விவாத்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com