5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: ஒரு நாயகன்... உதயமாகிறான்...?

ராகுல் காந்தி ஒரு ஆண்டுக்கு முன், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான இதே டிசம்பர் 11-ஆம் தேதி தான் காங்கிரஸ் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: ஒரு நாயகன்... உதயமாகிறான்...?


ராகுல் காந்தி ஒரு ஆண்டுக்கு முன், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான இதே டிசம்பர் 11-ஆம் தேதி தான் காங்கிரஸ் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

ராகுல் காந்தியை பப்பு என்று எதிர்க்கட்சிகள் கேலி செய்வது வழக்கம். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வருவதற்கு ஒரு ஆண்டுக்கு முன் அவரிடம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. ஆட்சியில் இருக்கும் வலுவான பாஜகவையும் மோடி அலையையும் ராகுல் காந்தி எப்படி எதிர்கொள்ளவுள்ளார் என்கிற பேச்சுகள் அப்போது அரசியல் வட்டாரத்தில் ஒலித்தது. அவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருந்தாலும், அது பொது தளத்தில் ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கவில்லை.  

இருப்பினும், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பயணிக்கத் தொடங்கினார். ஆளும் பாஜகவை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க எதிர்க்கட்சிகள்/பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்த ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எதிர்க்கட்சிகளிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி:

இந்தக் கூட்டணிக்கு முன்னோட்டமாக அமைந்தது தான் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல். கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. ஆனால், தேர்தல் முடிவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. அதில், மொத்தம் 224 தொகுதிகளில் பாஜக 104, காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37, இதர 3 இடங்களில் வெற்றி பெற்று தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை அதனிடம் இல்லை. 

அதனை பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் பாஜகவை ஆட்சியில் அமரவைக்கவிடாமல் காய் நகர்த்தியது. 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த போதிலும், 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, பல பிரச்னைகளுக்கு பிறகு, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அங்கு ஆட்சி அமைத்தது. 

இது ஏன் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது என்றால், காங்கிரஸ் அல்லாத பாரதம் உருவாக்க வேண்டும் என்ற கோஷம் பாஜகவால் முன்வைக்கப்பட்டது. அதேசமயம், பாஜக தெற்கில் கால் பதிப்பதற்கான வாய்ப்பு அங்கு தகர்க்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து குமாரசாமி பதவியேற்பு விழாவை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு அந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மெகா கூட்டணி எனும் வலுவான கூட்டணியை உருவாக்கினார்கள். 

பிரதமர் வேட்பாளராவதில் சிக்கல்:

இருப்பினும், பிரதமர் மோடியை எதிர்கொள்வதற்கு இந்த மெகா கூட்டணியின் வலுவான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விகள் எழத் தொடங்கின. அப்போது ராகுல் காந்தி, சரத் பவார், மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகிய நால்வரில் யாரேனும் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருந்ததாக பேச்சுகள் சலசலத்தன. அதில், சரத் பவார் வயது மூப்பு காரணமாக பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம், பிரதமருக்கு ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தலாம் என்றும் பேச்சுகள் எழுந்ததாக கூறப்பட்டது. அதனால், மாயாவதி அல்லது மம்தா பானர்ஜி இருப்பதால் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. அப்படி ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்தாலும் அதை கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா என்கிற சந்தேகமும் எழுந்தது. 

மோடியை கட்டிப்பிடித்ததும், கண் சிமிட்டியதும்:

இந்த நிலையில் தான் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதுவும் பாஜக கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியே அதை கொண்டு வந்தது. 

அப்போது ராகுல் காந்தி பேசியது அவரது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு உரையாக அமைந்தது. ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை கையில் எடுத்து ஒரு நீண்ட நெடிய உரையை ராகுல் காந்தி ஆற்றினார். அதில், பிரதமர் மோடி தவறு செய்திருப்பதால் அவரால் என் கண்களை பார்க்க முடியவில்லை என்று பேசியது அனைவரையும் கவர்ந்தது. அதன்பிறகு, உரையை முடித்துவிட்டு, அவர் என்னை சிறுப்பிள்ளை என்கிறார் ஆனால், நான் அவர் மீது வெறுப்பு கொள்ளமாட்டேன் என்று கூறி பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் இருக்கைக்கே சென்று அவரை கட்டிப்பிடித்தார். அதன்பிறகு, தனது இருக்கைக்கு வந்து அமர்ந்த ராகுல் அருகில் இருந்த உறுப்பினரை நோக்கி கண் சிமிட்டினார். இந்த மூன்றும் நாடாளுமன்றம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், ரஃபேல் தொடர்பாக ராகுல் காந்தியின் பேச்சும் பேசிய விதமும் தான் அன்றைய தினம் மற்றும் அடுத்த தினம் பிரதான செய்தியாக வெளிவந்தது. 

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதுவரை, பப்பு என்று பரவலாக கேலி செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, அதன்பிறகு தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தான ஒரு எதிர்பார்ப்பை அனைவரது மத்தியிலும் விதைக்கத் தொடங்கினார். 

ரஃபேல் எனும் பாஜகவுக்கு எதிரான கருவி:

அந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரஃபேல் விவகாரம் பூதாகரம் ஆனதை உணர்ந்த ராகுல், மத்திய அரசை எதிர்கொள்வதற்கான மிகப் பெரிய கருவியாக ரஃபேலை கையில் எடுக்கத் தொடங்கினார். காங்கிரஸ் தலைவர்கள் ரஃபேல் விவகாரம் தொடர்பான தகவல்களை சேகரிக்கவேண்டும், புள்ளிவிவரங்களுடனும், ஆதாரப்பூர்வமாகவும் அந்த விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று கட்டளையிட்டார் ராகுல். 

அதன்பிறகு, ரஃபேல் விவகாரத்தைக் கொண்டு அவர் தொடர்ந்து பிரதமர் மோடியை நேரடியாக விமரிசிக்கத் தொடங்கினார். பிரசார மேடைகள், டிவிட்டர் என ரஃபேல் மூலம் மிகப் பெரிய நெருக்கடியை பிரதமர் மோடிக்கு அளித்தார். பிரதமர் மோடி ஒரு திருடர் என்றும் இந்தியாவின் பாதுகாவலர் விவசாயிகள் பணத்தை அனில் அம்பானியிடம் வழங்கிவிட்டார் என்றும் காட்டமாக தாக்கினார். இதில் பிரதமர் ஒரு திருடர் என்ற கூற்று டிவிட்டரில் பயங்கர டிரெண்டிங் ஆனது. 

இதுபோன்ற சூழ்நிலைகளில் ராகுல் காந்திக்கு உதவும் வகையில் ரஃபேல் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பேட்டி, டஸால்ட் நிறுவனம் தகவல்கள் வெளியாகின. அதனால், அவர் விமரிசனங்களோடு நிறுத்தாமல் மத்திய ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையத்தில் இதுதொடர்பாக முறையிட்டார். ரஃபேல் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்.  2014-இல் காங்கிரஸ் கட்சிக்கு 2ஜி ஊழல் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது போல் பாஜகவுக்கு ரஃபேல் விவகாரத்தை ஏற்படுத்தும் அனைத்து முயற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 

கட்சியில் முக்கியப் பொறுப்பு: 

அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவராகவும், செயல்படத் தொடங்கிய ராகுல் காந்தி கட்சியின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் காரியக் கமிட்டியை கூண்டோடு கலைத்தார்.  அதன்பிறகு, கட்சியை பலப்படுத்தும் வகையில், அந்த கமிட்டிக்கு  புதிய உறுப்பினர்களை நியமித்தார். அதில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் என கலந்து நியமித்தார்.   

இதன்நீட்சியாக, கட்சியில் மிக முக்கியமான பொறுப்பு ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்கும் பேச்சுகள் துளிர்விட்ட அந்த நேரத்தில் கூட்டணி குறித்தான முடிவுகள் எடுப்பதற்கான மிக முக்கிய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்டவர்கள் ராகுலுக்கு துணையாக நின்றனர். 

இதன் தொடர்ச்சியாக ரஃபேல் விவகாரத்தை தொடர்ந்து விமரிசித்து வந்த ராகுல் காந்தி, அதன்பிறகு விவசாயிகள் பிரச்னை, இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்னை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி என மக்கள் பிரச்னைகளையும் கையில் எடுத்து பாஜகவுக்கு நெருக்கடி அளித்தார். 

கைகொடுத்த விவகாரங்கள்:

ராகுல் காந்திக்கு உதவும் வகையிலேயே சிபிஐ அதிகாரிகள் மோதல், ஆர்பிஐ மத்திய அரசு மோதல் போக்கு, ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கருத்து தெரிவிப்பது, லண்டன் வருவதற்கு முன் அருண் ஜேட்லியிடம் பேசினேன் என விஜய் மல்லையா பேசியது, பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு, விவசாயிகள் போராட்டம் போன்ற நிகழ்வுகள் திட்டமிட்டது போல் வரிசையாக அரங்கேறி வந்தது. இந்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொண்ட ராகுல் காந்தி, இந்த விவகாரங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம், சிபிஐ அலுவலகங்கள் முன்பு நாடு தழுவிய போராட்டம் என போராட்டங்களை மேற்கொண்டார். இதில், சிபிஐ போராட்டத்தில் கைது ஆனது வாக்கு வங்கி அரசியலில் ராகுல் காந்தி ஒரு தலைவராக தன்னை படிப்படியாக உயர்த்தினார்.   

இந்த தொடர் செயல்பாடுகளால் ராகுல் காந்தியை தொடர்ந்து பப்பு என கேலி செய்யப்பட்டு வந்த பேச்சுகள் கணிசமாக குறைந்தது.

இருப்பினும், மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தன்னை முன்நிறுத்திக்கொள்ளவில்லை. தேர்தலுக்குப் பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. 

இந்த தேர்தலுக்காக ராகுல் காந்தி 5 மாநிலங்களுக்கும் சென்று தீவிர பிரசாரங்கள் மேற்கொண்டார். அவர், பிரசாரம் மேற்கொள்ள குறிப்பிட்ட ஒரு சில மாநிலங்களுக்கு செல்லும்போதெல்லாம் அன்றைய தினம் டிவிட்டரில் ராகுல் காந்தியின் ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் தலைவரின் சர்ச்சைக் கருத்துக்கு கண்டனம்:

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் சிபி ஜோஷி, பிரதமர் மோடி, பாஜக எம்பி உமா பாரதி, ஹிந்து ஆதரவாளர் சாத்வி ரிதம்பரா ஆகியோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள், அவர்களுக்கு ஹிந்து மதம் குறித்து ஒன்றும் தெரியாது. பிராமணர்கள் தான் ஹிந்து மதம் குறித்து படித்தவர்கள். அவர்களுக்கு தான் ஹிந்து மதம் குறித்து தெரியும் என்ற சர்ச்சைக் கருத்தை கூறியதாக செய்திகள் வந்தன. 

ஆனால், ராகுல் காந்தி கட்சியின் தலைவராக இந்த கருத்துக்கு மௌனம் காக்காமலும் அல்லது அது அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவிக்காமலும், சிபி ஜோஷியின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது. சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையும் பாதிக்கும் வகையில் கட்சித் தலைவர்கள் இது போன்ற கருத்துகளை பேசக்கூடாது. கட்சிக் கோட்பாடுகளையும், கட்சி நிர்வாகிகளின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஜோஷி தனது தவறை நிச்சயம் உணருவார். தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும்" என்றார்.

அதன்படி, சிபி ஜோஷியும் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.       

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்:

இந்நிலையில், 2019 மக்களைத் தேர்தலுக்கான அரையிறுதியாக காணப்பட்டு வந்த இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், தெலங்கானாவில் வெற்றியையும், மிஸோரமில் ஆட்சியையும் காங்கிரஸ் இழந்துள்ளது. எனினும், மற்ற 3 மாநிலங்களின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல முடிவையே அளித்துள்ளது. 

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று சரியாக ஒரு ஆண்டு காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பது ராகுல் காந்திக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. 

அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணிக்கான பிரதமர் வேட்பாளர் போட்டியிலும் ராகுல் காந்தி இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தனக்கென ஒரு இடத்தை உறுதி செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. 

இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் என்று கருதிவிடமுடியாது. வர இருக்கும் 6 மாதங்களில் கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்து தான் அதன் முடிவுகள் அமையும். அதனால், இந்த முக்கியமான 6 மாதத்தில் கட்சிகள் எப்படி செயல்படவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 

ஆனால், பப்பு என கேலி செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு முதலாம் ஆண்டு முடிவில் தற்போது வலுவான ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. பிரதமர் மோடிக்கு எதிரான வலுவான தலைவர் இல்லை எனும் நிலையை மாற்றி, வெற்றிடத்தை நிரப்புவதற்கான ஒரு சூழலை இந்த தேர்தல் மூலம் ராகுல் காந்தி ஏற்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com