மூலிகை மரங்கள் வளர்ப்போம்

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கிறது. உழவு தொடங்கி மானாவாரியாக மேட்டு நிலங்களில் புஞ்சை தானியங்களை விதைக்கத் தொடங்குவார்கள்.

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கிறது. உழவு தொடங்கி மானாவாரியாக மேட்டு நிலங்களில் புஞ்சை தானியங்களை விதைக்கத் தொடங்குவார்கள். அதுபோல் மரம் நடுவதற்கும் ஏற்ற பருவம் இதுவே. ஒரு பக்கம் வனங்களில் மரங்கள் எந்த அளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. எனினும், இன்று விவசாயிகளும், புதிதாக விவசாயத்தில் ஈடுபடுவோரும், சில பொது நல அமைப்புகளும், வன ஆர்வலர்களும் மரம் வளர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு மரம் நடுவோர் குறிப்பிட்ட சில மரங்களை மட்டுமே நடுகிறார்கள். பலவகையான நாட்டு மரங்கள், மருத்துவ குணமுள்ள மரங்களை நாடுவது இல்லை. இவை கிடைப்பதும் அரிதாயுள்ளது. சாதாரணமாக வேம்பு, புங்கன், கொன்றை, வாகையுடன் தூங்குமூஞ்சி, குல்மோகர் போன்றவைதான் ஏராளமாகவும், மலிவாகவும் கிடைக்கின்றன. நல்ல மருத்துவ குணமுள்ள மரங்கள் அரிதாகிவிட்டன.
 உதாரணமாக, ஒரு காலத்தில் பரவலாகக் காணப்பட்ட வாத நாராயணன் மரம் இன்று மிக அரிதாகிவிட்டது. இம்மரத்தின் இலைச்சாறு வாதநோயை குணப்படுத்தும். இன்று பலருக்கும் கைகால் குடைச்சல், வலி, வீக்கம், மூட்டுவலி பிரச்னைகள் பெருகிவிட்டன. தமிழ் மருத்துவத்தில் பிரண்டை, வாத நாராயணன், தழுதாழை ஆகியவை வாத நோய்க்கான மருந்துகள். நாட்டு வைத்தியர்கள் இம்மூலிகைகளைக் கையாள்வது உண்டு. காலப்போக்கில் இவை காணாமல் போய்விட்டன.
 செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உலக ஓசோன் தினம் தமிழ் நாட்டில் கொண்டாடப்படாமல் கடந்து விட்டது. முகநூலைத் திறந்தால் புதியபுதிய தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வருகின்றன. அப்பாதினம், அம்மாதினம், தாத்தா தினம், முதியோர் தினம், இளைஞர் தினம், குழந்தைகள் தினம் என்று இனம் புரியாத ஏகப்பட்ட தினங்கள். இப்படியெல்லாம் தேடிப்பிடித்து கொண்டாடப்படும் போது, உலகம் வாழவேண்டும் பசுமை பொங்கவேண்டும் என்ற பொதுநல நோக்கில் ஐ.நா அறிவிக்கும் தினங்கள் பற்றி நாம் அதிகம் அறிவதில்லை. இனியாவது ஓசோன் தினத்தை நாம் கொண்டாடலாமே.
 ஓசோன் தினம் என்றதும் "சிப்கோ' இயக்கம் நினைவுக்கு வருகிறது. இந்தியா முழுவதும் மரங்களை வளர்க்கவேண்டும் என்ற உணர்வை சிப்கோ இயக்கமே தூண்டியது. 1973-1974 காலகட்டத்தில் உத்தராஞ்சலில் உள்ள தாசோலி மாவட்டத்தில் "கோபேஸ்வர் மண்டல்' என்ற கிராம சுயராஜ்ய இயக்கத்தின் மகளிர் அமைப்பினர் வனவிளைபொருள்களை ஜீவாதாரமாகக் கொண்டு பலவகையான குடிசைத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 1973-இல் வனத்துறை அதிகாரிகள் அலகாபாத்தை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு கோபேஸ்வர் மண்டல் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தார்கள். அந்நிறுவனம் கிரிக்கெட் மட்டை, ஹாக்கி மட்டை போன்ற விளையாட்டுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம். "மனிதர்கள் உயிர் வாழ மரம் வேண்டும், வனமே எங்கள் ஜீவாதாரம்' என்று குரல் கொடுத்து அந்த ஒப்பந்தக்காரர்களை தாசோலி மகளிர்குழு விரட்டி அடித்தது. இச்செய்தி அக்கம் பக்க கிராமங்களில் பரவியது.
 வனத்துறையினர் எந்த கிராமத்திற்கு வந்தாலும் கிராம மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தது. தாசோலி கிராம சுயராஜ்ஜிய இயக்கத்தின் நிறுவனர் சாந்தி பிரசாத்பட் , சிப்கோ இயக்கத்தின் பின் புலமாகச் செயல்பட்டு வந்த சூழ்நிலையில் தான், சுந்தர்லால் பகுகுணா என்ற மற்றொரு காந்தியவாதியின் உண்ணாவிரதப் போராட்டமும் நிகழ்ந்தது. இதன் காரணமாக தாசோலி மாவட்டத்தில் வனப்பாதுகாப்பு உணர்வு பீறிட்டெழுந்தது.
 நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்தே மரங்களை வெட்டும் ஒப்பந்தக்காரர்களின் வன அழிப்புகளால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக உத்தராஞ்சல் இருந்து வந்தது. உத்தரகன்ட் தனிமாநிலமாகப் பிரிக்கப்படதாதவரை அது உ.பி மாநிலத்தின் கீழ் கார்வால் மாவட்டமாக இருந்தது. 2013-இல் மழை வெள்ளம் உத்தராஞ்சலைத் தாக்கியது போல் 1973-74 சிப்கோ இயக்கம் தோன்றுவதற்கு முன்பே, அலக்நந்தா நதி வெள்ளம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தாசோலி மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். மண்ணில் மரங்களும், தாவரங்களும் கொண்ட பசுமைப் போர்வை இருந்தால் மண்ணரிப்பும், நிலச்சரிவும் ஏற்படாமல் வாழ்விடங்கள் காப்பாற்றப்படும் என்ற உண்மையை அனுபவ வாயிலாக உணர்ந்து சிப்கோ அறப் போராட்டம் உருவானது.
 கோபேஸ்வர் மண்டலில் இப்படி எதிர்ப்பு கிளம்பியதால் வனத்துறை ஒப்பந்தக்காரர்களுக்கு அங்கிருந்து 80 கி.மீ தொலைவில் ராம்பூர் ஃபாட்டா வட்டாரத்தில் ரேனி என்ற கிராமம் ஒதுக்கித்தரப்பட்டது. ஆண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் மட்டுமே இருந்த சூழ்நிலையில் ஒப்பந்தக்காரர்கள் மரம் வெட்ட வந்தனர். இதை அறிந்த பெண்கள் தாரை தப்பட்டை மூலம் ஒலி எழுப்பி மற்ற பெண்களை அங்கு வரவழைத்து ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் ஐந்து ஐந்து பேராகச் சூழ்ந்து கைகோத்தபடி நின்று மரங்களை வெட்ட முடியாமல் தடுத்தனர். "முதலில் எங்களை வெட்டிவிட்டு பிறகு மரங்களை வெட்டுங்கள்' என்று கூறினர். அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. பத்திரிகையாளர்கள் மூலம் இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் தெரிய வந்தது. சிப்கோ இயக்கத்தின் இந்த உச்சக்கட்ட போராட்டத்தின் எதிரொலியாக அப்போது ஆட்சியிலிருந்த இந்திரா காந்தி அரசு உடனடியாக வனங்களில் பழங்குடி கிராம வாசிகளின் ஜீவாதார உரிமையை அங்கீகரித்தது. அவர்களுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கிய பின்னரே, இந்தியா முழுவது மர வளர்ப்பு ஒரு புதிய எல்லையத் தொட்டது.
 மர வளர்ப்புக்கு வனத்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். ஒரு சில வனத்துறை அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கும் மரவியாபாரிகளுக்கும் துணை போகக் கூடியவர்கள் என்றாலும், மனசாட்சியுடன் நடப்போரும் உண்டு. வனத்துறை அவ்வப்போது வனவளர்ப்பு திட்டங்கள் பற்றி விளம்பரப்படுத்தும்போது, காகிதத் தொழிற்சாலை, தீப்பெட்டித் தொழிற்சாலை, பிளைவுட் தொழிற்சாலை போன்ற வர்த்தக ரீதியான மரங்களுக்கு, குறிப்பாக, தைல மரம், சவுக்கு, மலைவேம்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குவது போல் மூலிகை மரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
 வாதநாராயணன் ஒவ்வொரு ஊரிலும் நடப்படுமானால் வாதநோய் தீர அலோபதியை நாடி மக்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். தீராத வலியைத் தீர்த்து வைக்கும் இம்மூலிகை அழியும் நிலையில் உள்ளது.
 இவ்வாறே தேத்தான் கொட்டை, சேரான் கொட்டை, கருங்காலி, சிறு நாகப்பூ, சிவ குண்டலம் என்றும் பொந்தன் புளி என்றும் அழைக்கப்படும் ஆனைப்புளி, அகில், பூவரசு, புரசு, புன்னை, முள் முருங்கை, கடுக்காய், தான்றி, நார்த்தை, குமிழ், அசோகம், இலுப்பை, விளா, செம்மந்தாரை, வெப்பாலை, மாவிலங்கம், ருத்ராட்சம், மகிழம், வேங்கை, நீல நொச்சி, காசி வில்வம், மகா வில்வம், நாட்டு செம்பருத்தி, சங்கு புஷ்பம், பன்னீர் ரோஜா, விபூதிப் பச்சிலை, கரிசலாங்கண்ணி, தூதுவளை, பொடுதலை, வல்லாரை நித்திய கல்யாணி, சர்ப்ப கந்தி, பிரண்டை, முசுமுசுக்கை, ஆடாதொடை போன்ற பல தாவரங்கள் அருகும் நிலையில் உள்ளன. இவ்வகை அரிய தாவரங்களின் மருத்துவகுணம் மிகவும் சிறப்பானது.
 அதேசமயம் வழக்கில் உள்ள துளசி, முருங்கை, நெல்லி, மாதுளை, மஞ்சள், இஞ்சி, கிராம்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் போன்ற மளிகை சாமான்களும் எளிதில் கிடைக்கின்றன.வெட்டிவேர், நன்னாரி போன்றவை அரிதாகி வருகின்றன. சோத்துக் கத்தாழைக்கு அவ்வளவு நெருக்கடி இல்லை. மருத்துவ குணமுள்ள எண்ணெய்வித்துப் பயிர்களில் நாளுக்கு நாள் எள் சாகுபடி குறைவதால் திறனற்ற கொழுப்புள்ள நல்லெண்ணெய் விலை ஏறுமுகமாயுள்ளது. இவ்வாறே குசும் என்று கொல்லப்படும் "சாஃப்ளவர்' ஒரு அற்புதமான மூலிகை இதுவும் ஒரு எண்ணெய்வித்துப் பயிர். "சாஃபளவ'ரின் பூக்கள் நல்ல சிவப்பு. தொடக்கத்தில் இயற்கை சிவப்பு சாயத்திற்காக சாகுபடி செய்யப்பட்டது. பின்னர்தான் இதன் விதைப் பருப்பில் 40 சதவீதம் மருத்துவச் சிறப்புள்ள எண்ணெய் உள்ளதை அறிந்து சமையல் எண்ணெய்க்காக சாகுபடியானது. நல்லெண்ணெயை விட இதில் திறனற்ற கொழுப்பு குறைவு. குசும் மலர்களின் இதழ்கள் வயிற்றுப்புண் ஆற்றும் இவ்வாறே "லின்சீட்' என்ற ஆளிவிதை எண்ணெய்யும் மருத்துவ குணம் உள்ளது. ஒரு காலத்தில் ஆளிவிதை எண்ணெய் மசகு எண்ணெய்யாகவே பயனாயிற்று. பெயின்ட் தயாரிக்கவும் பயன்பட்டது. இப்போது இது உண்ணும் மருந்தெண்ணெயாக மாறிவிட்டது. ஆளிவிதைப் பருப்பு, எண்ணெய் எல்லாம் பல நோய்களுக்குத் தீர்வு என்று கூகுள் பதிவுகள் கூறுகின்றன. இவற்றில் எவ்வளவு நிஜம் எவ்வளவு பொய் என்று சொல்வதற்கில்லை.
 அழியும் நிலையில் உள்ள மரம், செடி, மூலிகைப் பயிர்களைத் தேடிக் கண்டுபிடித்து இனப்பெருக்கம் செய்வதன் மூலம் பாரம்பரியம் மிக்க நமது பல்லுயிர்ப் பெருக்கம் செழிப்படையும். எனினும், இப்படிப்பட்ட உணர்வில் கோயம்புத்தூர் வனக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் வன மரபியல் கோட்டம் செயல்பட்டால் தான் அருகிவரும் மரங்கள் மூலிகைகள் பெருகி வளரும். அதன் நோய் நிவாரணசக்தி பற்றிய விழிப்புணர்வும் செயல்பட்டால் அருகி வருபவை பெருகி வளர்ந்து செல்வத் சிறப்பையும் தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.
 
 கட்டுரையாளர்:
 இயற்கை விஞ்ஞானி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com