பணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் குறைவதேன்?

நமது நாட்டில் போதிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது ஒரு மாபெரும் பிரச்னையாக நாட்டை ஆட்டிப்

நமது நாட்டில் போதிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது ஒரு மாபெரும் பிரச்னையாக நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், நமது நாட்டில் பணிக்குச் செல்லும் மகளிரின் எண்ணிக்கையும், விகிதமும் குறைந்து கொண்டே வருகின்றன என்பது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்காத ஒரு பிரச்னை. 
2015-16-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, நமது நாட்டில், பணிக்குச் செல்லும் வயதுடையவர்களில் (15 -59) 27 விழுக்காடு மகளிர் மட்டுமே வருமானம் ஈட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அதாவது 2004 -05-இல் இது 43 விழுக்காடாக இருந்தது. நகரங்களை விட கிராமப்புறங்களில் மகளிரின் பணி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. 
கிராமப்புறங்களில் 2004 -05-ஆம் ஆண்டில் 49 விழுக்காடாக இருந்த பணிக்குச் செல்லும் மகளிரின் விகிதம், 2015 -16-இல் 32 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதே கால கட்டத்தில் நகரங்களில் இந்த விகிதம் 24.4 விழுக்காட்டிலிருந்து 16 .6 ஆகக் குறைந்துள்ளது. 
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு சில அரபு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில், பணியில் உள்ள மகளிரின் விகிதம் இந்தியாவை விட அதிகமாக உள்ளது. சீனா(64%), வங்கதேசம்(57 %) அமெரிக்கா(56 %) ஐரோப்பிய நாடுகள் (51%) இங்கெல்லாம் பணிக்குச் செல்லும் வயதுடையவர்களில் பாதிக்கு மேற்பட்ட மகளிர் பணியில் உள்ளார்கள். இந்த விஷயத்தில் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகள் கூட நம்மைவிட முன்னிலையில் உள்ளன. பாகிஸ்தான் மட்டுமே நம்மைவிட ஓரளவு பின்தங்கி (25 %) உள்ளது. 
நமது நாட்டு மகளிரின் குறைவான பணி விகிதத்திற்கு நிச்சயமாக நமது மகளிர் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை என்பதைக் காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பணிக்குச் செல்லும் வயதுடைய 580 லட்சம் மகளிர், வேலை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். 
மகளிரின் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளுக்கான தர வரிசையில் 144 நாடுகளில் தற்பொழுது நமது நாடு 139-ஆவது இடம் வகிக்கிறது எனும் அதிர்ச்சி தரும் தகவலை உலகப் பொருளாதார அமைப்பின் உலக பாலின இடைவெளி அறிக்கை (குளோபல் ஜெண்டர் கேப் ரிப்போர்ட் 2017) வழங்குகிறது.
நமது நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லும் பெண்களின் விகிதமும், எழுத்தறிவு பெற்ற மகளிரின் விகிதமும் அதிகரித்துக் கொண்டிருந்தும் பணிக்குச் செல்லும் மகளிரின் விகிதம் ஏன் குறைந்து கொண்டே வருகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. 
முன்பைவிட இப்போது பெண்கள் அதிக ஆண்டுகள் பள்ளிப் படிப்பைத் தொடர்வதனால் பணிக்குச் செல்லத் தயாராக உள்ளவர்களின் எண்ணிக்கை குறைத்துள்ளது என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அப்படி பள்ளி இறுதி வரையில் கல்வியைத் தொடரும் பெண்களை, அவர்கள் பெற்றோர் திருமணச் சந்தையில் அவர்களது மதிப்பு கூடும் என்ற காரணத்துக்காகவே பெரும்பாலும் பள்ளிப் படிப்பைத் தொடர அனுமதிக்கிறார்கள். தங்கள் பெண்களை பணிக்கு அனுப்பும் நோக்கம் அவர்களுக்கு இல்லை. 
பணி புரிவோர்- வேலைக்குச் செல்லாதோர் பற்றி அரசு சேகரிக்கும் புள்ளிவிவரங்களின்படி ஓரளவு பள்ளிப் படிப்பை முடித்த அல்லது பள்ளி இறுதி வரை கல்வியைத் தொடர்ந்த மகளிரை விட, எழுத்தறிவில்லாத அல்லது கல்லூரி இறுதி வரையில் கல்வியைத் தொடர்ந்த மகளிரே அதிகம் பணிக்குச் செல்கின்றனர். அதாவது, கொஞ்சம் கூட எழுத்தறிவு இல்லாத பெண்களிலும், கல்லூரி வரையில் படித்துள்ள பெண்களில் மட்டுமே அதிக விழுக்காடு பேர் பணிக்குச் செல்கின்றனர். 
இதற்கு முக்கிய காரணம் ஓரளவு படித்த பெண்கள் கூலி வேலை போன்ற சாதாரண வேலைகளுக்குப் போகத் தயாராக இல்லை என்பதே. இவர்கள் செய்யக்கூடிய வேறு வேலைக்கான வாய்ப்புகளும், குறிப்பாக கிராமப்புறங்களில் மிகக் குறைவாகவே உள்ளன. 
நமது நாட்டில் சமீப காலமாக குடும்பங்களின் வருமானத்தின் நிரந்தரத் தன்மை அதிகரித்துள்ளதும், மகளிர் பணிக்குச் செல்வது குறைந்துள்ளதற்கான ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வருமானத்தின் நிரந்தரத்தன்மை அதிகரிக்க அதிகரிக்க குடும்பங்களில் மகளிர் பணிக்குச் செல்வது குறையும் என்றும், அதற்கு பதில் மகளிர் வீட்டின் சமூக நலனைப் பாதுகாப்பதில் அதிகம் அக்கறை காட்டுவார்கள் என்றும் உலக வங்கியின் ஆய்வு ஒன்று கூறுகிறது. 
பயிற்சித் திறன் சாராத கீழ்மட்ட வேலைகளை ஏற்பதற்கும் அவர்களது குடும்ப கெளரவம் தடையாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 
நமது நாட்டில் பெரும்பாலான மகளிர் விவசாயம் சார்ந்த பணிகளிலேயே ஈடுபட்டுள்ளனர். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி149.8 மில்லியன் மகளிர் பணியில் உள்ளனர். இவர்களில் மூன்றில் இருவர் தங்களது சொந்த நிலத்தில் அல்லது விவசாய கூலித் தொழிலாளியாகப் பணியாற்றுகின்றனர்.
விவசாயத் தொழில் இயந்திரமயமாக்கப்பட்டதன் விளைவாக கூலிவேலை செய்பவர்களுக்கான பணிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. நாட்டின் தற்பொழுது விவசாயத்தை நம்பியிருப்போரின் நிலை என்ன என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். மேலும், தகுந்த பாதுகாப்பின்மை, தங்குவதற்கான வசதியின்மை, குடும்பத்தினரின் எதிர்ப்பு, சமூகக் கட்டுப்பாடுகள் முதலிய காரணங்களினால் எல்லா பெண்களாலும் தாங்கள் வசிக்கும் கிராமம் அல்லது அதன் சுற்று வட்டாரத்தை விட்டு பணி நிமித்தம் இடம் பெயர முடிவதில்லை. 
ஆக, மகளிரின் பணி விகிதம் குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணம் பொருத்தமான வேலைவாய்ப்பு போதிய அளவு இல்லை என்பதே. ஒரே மாதிரி வேலைக்கு ஆண்கள் பெறும் ஊதியத்தில் 62 சதவிகித ஊதியமே பெண்கள் பெறுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பெரும்பாலான மகளிர் பயிற்சித் திறன் சாராத, குறைந்த வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழில்களிலேயே உள்ளனர். அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்களில் 20.5 சதவிகிதம் மட்டுமே மகளிர். 
திருமணத்திற்குப் பிறகு, அதுவும் குழந்தைப் பேற்றிற்குப் பிறகு பெண்கள் தங்கள் வேலையை விட்டுவிடுவது மிகவும் சகஜமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வு.
குடும்பத்தில் குழந்தைகளின் பராமரிப்பு, முதியோர்களின் கவனிப்பு எல்லாமே மகளிரின் பொறுப்பு என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ளது.
அமைப்பு சாரா தொழில்களில் உள்ளவர்களுக்கு மகப்பேறு விடுமுறை, குழந்தை காப்பகங்கள் போன்ற வசதிகளும் கிடையாது. அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு போன்ற வசதிகள் உள்ளன.
சமீபத்தில் திருத்தப்பட்ட மகப்பேறு நலன் சட்டத்தின்படி 12 வாரங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 28 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி மகளிரின் வசதிக்காக மாற்றி அமைக்கப்பட்ட சட்டமே, மகளிரின் வேலை வாய்ப்பிற்கு எதிராக மாறுகிறது என்றால் வியப்பாக இல்லையா? 
முக்கியமான பத்து தொழில் துறைகளைச் சார்ந்த 300 தொழிலதிபர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2018 -19 இல் 11 -18 லட்சம் மகளிர் இந்த திருத்தப்பட்ட மகப்பேறு சட்டத்தின் காரணமாக வேலையை இழந்துள்ளனர். எல்லாத் துறைகளையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் 1-1.2 கோடி மகளிர் வரையில் வேலையை இழந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்களால் தங்களிடம் பணிசெய்யும் மகளிருக்கு ஆறு மாதங்கள் வரையில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். ஆனால், சிறு மற்றும் குறு தொழில்களால் ஆறு மாதங்கள் வரையில் வேலை செய்யாமல் ஊதியம் கொடுக்க இயலாது என்ற காரணத்தினால் மகளிரை பணிக்கு அமர்த்துவது தவிர்க்கப்படுகிறது என்று இந்த ஆய்வு சொல்கிறது. 
ஒரு சில மாநிலங்களில் சுய உதவிக்குழுக்கள் மகளிருக்கு வருமானம் ஈட்டும் பணிகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மகளிருக்கு தக்க பயிற்சி அளித்து, தேவையான நிதி உதவி கிடைக்கச் செய்து, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சந்தையை உருவாக்கி, அவர்களை தொழில் முனைவோராக ஆக்கியுள்ள பெருமை இந்த சுய உதவிக் குழுக்களைச் சாரும்.
ஆனால், இந்த சுய உதவிக் குழுக்களால் நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அதே போன்று, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்காக கிராமப்புறங்களில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்களில் பாதிக்கு மேல் மகளிர் என்பது பாராட்டுதலுக்குரிய விஷயம். ஆனால், எல்லா மாநிலங்களிலும் இந்தத் திட்டம் சரியாக செயல்படுகிறதா, உறுதியளித்தபடி 180 நாள்கள் வேலை வழங்கப்படுகிறதா என்பன போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.

கட்டுரையாளர்:
சமூக செயற்பாட்டாளர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com