ஒன்றே உலகம் ஒருமையே இலக்கியம்

ஆங்கிலத்தில் ஜான் பனியன் எழுதிய புனிதப் பயணத்தின் முன்னேற்றம் என்ற நூல் 1793- ஆம் ஆண்டில் ஒரு பரதேசி இந்த லோகத்தை விட்டு மறுமைக்கு நடந்தேறியது

ஆங்கிலத்தில் ஜான் பனியன் எழுதிய புனிதப் பயணத்தின் முன்னேற்றம் என்ற நூல் 1793- ஆம் ஆண்டில் ஒரு பரதேசி இந்த லோகத்தை விட்டு மறுமைக்கு நடந்தேறியது சொப்பனம் என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பு நூலாகும். இந்த நூல்தான் நாம் அறிந்த இரட்சணிய யாத்திரையாகும். 
மொழிபெயர்ப்பைப் பற்றி பழங்காலத்திலேயே தொல்காப்பியத்தில் தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என நான்கு வகையாகப் பிரித்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்து, நடை, சூழல் உணர்ச்சி, பொருண்மை முதலியவற்றைப் பெயர்த்து வழங்குவதனால் அதனை அறிவியல் சார்ந்த துறை என்றே சொல்ல வேண்டும். அதே வேளையில் மொழித் தொடர்பான அழகு பொலிவதால் அதனைக் கலை சார்ந்த துறை என்றும் அழைக்கலாம். ஒரு மொழியில் கூறப்பட்ட கருத்துகளை மற்றொரு மொழியில் வெளிப்படுத்திக்காட்டிய நிலையில் திறன் வாய்ந்த ஒரு படைப்பாக்கம் என்றும் கருதலாம்.
அரசின் நடைமுறை, அறிக்கை, அறிவிக்கை, செய்தி, விரைவுத்தகவல், தனியாணை முதலியவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் உடனடி மொழியாக்கம் செய்யும் தனிப்பட்ட நிலையுடையது. அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் பொது நிலையில் பல்வேறு பாடங்களில் கல்வி பெற்றவர்கள்; அரசுத் தேர்வில் வெற்றிபெற்ற திறனாளர்கள். எனினும் இளங்கலை, முதுகலையில் தமிழைத் தனிப்பாடமாகக் கற்பதில்லை. தாமே வளர்த்துக்கொண்ட முயற்சியாலும், பயிற்சியாலும் தமிழில் மொழி பெயர்க்கும் வகையில் முற்பட்டுள்ளனர். மொழி மரபு, இலக்கண வழுவின்மை, வனப்பு வாய்ந்த கலைச்சொல் தெளிவும், தெரிவும் நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. விரைவு மொழிபெயர்ப்புக்கும், இலக்கியப் பாங்கு நிறைந்த கலை, பண்பாடு, கற்பனை, பாடநூல், அறிவியல்சால் மொழிபெயர்ப்புக்கும் வேறுபாடு உண்டு. இந்நிலையில், விரைவு மொழிபெயர்ப்பாளர்கள் இலக்கிய மொழி பெயர்ப்பாளர்களாக மாறுவது என்பது கடினமான பணியாகும். 
இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், உயர்நிலை மொழி பெயர்ப்பாளர்கள் ஆவர். நிகர்மொழி ஆக்கம், நிலைமொழி ஆக்கம், நோக்குமொழி ஆக்கம், ஆக்க மொழியாக்கம், அரசு மொழிபெயர்ப்பு, தனியார் மொழிபெயர்ப்பு என்று வேறுவேறாகப் பிரிந்துள்ளது. 
மூளையால் மேற்கொள்ளும் மொழிசார்ந்த பணிகளுக்குத் தற்போது கணினியைப் பயன்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. நமது சிந்தனையில் உள்ள நமது மொழியறிவைக் கணினிக்கு ஊட்டி, அதனடிப்படையில் நமது மொழிசார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர். சொற்பிழை திருத்தி, இலக்கணப்பிழை திருத்தி, எழுத்து பேச்சு மாற்றிச் செயலிகள், பேச்சு-எழுத்து மாற்றி, இயந்திர மொழிபெயர்ப்பு வடிவிலான பணிகள் பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குக் கலைச் சொல்லாக்கம் தேவை. இதுவரை சிறியனவும், பெரியனவுமாக 200 தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஏறத்தாழ 2,00,000 சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஓர் ஆங்கிலச் சொல் நம்மிடையே பழக்கத்துக்கு வந்து மூன்று நாள்களுக்குள் அதற்கேற்றத் தமிழ்ச்சொல் அமையவில்லை என்றால், அயற்சொல் நிலைத்துவிடும். இன்று 10 இலட்சம் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. முயன்று ஐந்து இலட்சம் சொற்களே தமிழில் கண்டறியப்பட்டுள்ளன. தொழில்நுட்பச் சொற்களை மொழிபெயர்க்கும்போது, மூல மொழியின் தன்மை கெடாதபடி சொற்களை உருவாக்க வேண்டும். ஏற்ற சொற்கள் கிடைக்கவில்லை எனில், பொருள் நிலையில் மிகவும் நெருக்கமான சொற்களைப் பயன் கொள்ளலாம். எப்போதும் ஒரு சொல்லுக்கு உடனே மொழியாக்கம் கேளாமல் மாற்றி மூன்று தொடர்களில் அச்சொற்கள் எப்படி ஆளப்படலாம் என்பதை அறிவுறுத்துவதே மொழியாக்கத்திற்கு முழுமையாகப் பொருள் தரும்.
தமிழில் எந்தச் சொல்லும் நான்கெழுத்தை விஞ்சியதேயில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு சொற்கள் மூன்றெழுத்திலேயே முடியும். ஆங்கிலச் சொல்லை மொழியாக்கும்போது ஓர் எழுத்து குறைந்தால்தான் தமிழ் என்று கருதலாம். நோபல் பரிசைத் தவிர்த்து, அடுத்த பெரிய விருதான புக்கர் விருதின் பரிசுத் தொகை மூல ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் 2015- ஆம் ஆண்டு முதல் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது மொழிபெயர்ப்புக்கு அளிக்கப்பட்ட உலகளாவிய சிறப்பாகும். 
இலக்கிய வகைப்பாட்டில் நோபல் பரிசு பெற்ற 25 வெற்றியாளர்களில் ஒன்பது பேர்தான் தங்களுடைய ஆக்கங்களை ஆங்கிலத்தில் படைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 16 பேரும் தங்கள் சொந்த மொழியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகுதான் நோபல் பரிசுக்கான தகுதி பெற்றிருக்கிறார்கள். இதிலிருந்தே மொழிபெயர்ப்பின் வளத்தை நாம் அறிந்துகொள்ளலாம். 
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாகத் திருக்குறள் சீனம், அரபு, கொரிய மொழிகளில் மொழிபெயர்த்து நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது. அவ்வண்ணமே பாரதியாரின் தெரிவு செய்யப்பட்ட பாடல்களையும், பாரதிதாசனின் தெரிவு செய்யப்பட்ட பாடல்களையும் சீனம், அரபு மொழியில் மொழிபெயர்த்து நூல்கள் வெளியிட்டுள்ளன.
ஒளவையாரின் ஆத்திசூடி சீன, அரபு மொழியில் மொழியாக்கம் செய்து நூல்களாக வெளியிட்டுள்ளன. இன்றைய காலச் சூழ்நிலையில், கல்லூரி மாணவர்கள் இருமொழிப் புலமையைப் பெரிதும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழியாக்கத்தில் ஆற்றல் பெற்றிருந்தால் அரசுத் துறைகளிலும், ஊடகத் துறையிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பைப் பெறுவதோடு, மேலும் உயர் பதவிகளை அடையலாம். ஒன்றே உலகம் ஒருமையே இலக்கியம் என்பதை மொழிபெயர்ப்பு உறுதி செய்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com