மத நம்பிக்கையில் தலையீடு கூடாது

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தப் போவதாக கேரளத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தப் போவதாக கேரளத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு அறிவித்துள்ளது. இதனால் சபரிமலைப் பகுதியில் கடுமையான பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆண்களும் பத்து வயதுக்கு உள்பட்ட மற்றும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அங்கு சென்று வந்தனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
மத நம்பிக்கை என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியிருப்பதற்குக் காரணம் இங்குள்ள ஆன்மிகமும் குடும்ப வாழ்க்கை முறையுமே. ஆனால் நீதிமன்றத்தின் அண்மைக்காலத் தீர்ப்புகள் இந்த இரண்டையுமே கேலிக்குரியதாக்கியிருக்கின்றன.
இந்து இயக்கவாதிகள் இத்தீர்ப்பை எதிர்க்கின்றனர். ஏற்கெனவே மழையால் வெள்ளக்காடாகிக் கடும் சேதத்துக்குள்ளான கேரளம் இப்போது பக்தர்களின் முற்றுகையால் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டிப்பாக அமல்படுத்துவோம் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அப்படியானால் உச்சநீதிமன்றம் கொடுத்த அனைத்துத் தீர்ப்புகளையும் கேரள அரசு அமல்படுத்தியிருக்கிறதா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கட்சிப் பாகுபாடில்லாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தினார்களே, அப்போது தெரியாதா இந்த அரசியல்வாதிகளுக்கு?
இதற்காக எத்தனை எத்தனை நாடகங்களை காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் நடத்தினர்? இவர்களின் நிலைப்பாடு எப்போதுமே ஒன்றாக இருந்தது கிடையாது. மாநிலத்துக்கு மாநிலம் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அங்குள்ள அரசியல் கட்சிகளை அண்டி நிற்பதுதான் இவர்களின் நிலைப்பாடா?
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை அதை நிறைவேற்ற கேரள மாநில அரசு முன்வரவில்லை. அங்கு செல்ல தமிழகப் பொறியாளர்களுக்கு விரைவில் அனுமதி தருவதில்லை. 
இதே நிலைதான் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்திலும்.
பாலக்காடு அருகே உள்ள கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய்களை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இதுவரை அமைத்துத் தரவில்லை. பாலக்காடு பகுதியில் தமிழர்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். ஆனால் இதற்குப் பதிலாக மலையாளத்தவர்கள் அதிகம் வசிக்கும் திருச்சூர் பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குக் கால்வாய்களை அமைத்துள்ளனர்.
சிறுவாணி, கேரளப் பகுதிக்குள் இருந்தாலும், கோவைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணை கோடை காலத்தில் வறண்டு போகும். ஆனால் அணைக்குள் உள்ள சுரங்க அமைப்பில் இருக்கும் தண்ணீர் சுமார் 30 முதல் 40 நாள்கள் வரை மோட்டார் வைத்து எடுக்க முடியும். ஆனால் தமிழக மக்களுக்குக் குடிநீர் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த சுரங்க அமைப்பையும் மூடிவிட்டது கேரள அரசு. இத்தனைக்கும் கோவையில் கணிசமான அளவு கேரள மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள்.
இதேபோல பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகளைக் கட்டி முடித்தால் தமிழகத்துக்குக் கூடுதலாகத் தண்ணீர் கிடைக்கும். ஆனால், கேரளத்தில் இடைமலையாறு அணையைக் கட்ட வேண்டும். இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை கட்டப்படவில்லை என்றுதான் கேரளத்தின் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் சொல்லி வருகின்றன.
இந்தப் பிரச்னைகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தின் கண்களுக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும் கேரளத்துக்குத் தேவையான காய்கறிகள், மின்சாரம், அடிமாடுகள், வீடு கட்ட மணல் ஆகிய அனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றன. ஆனால் கேரளம் நமக்குத் தண்ணீர் தருவதில்லை. வீணாகக் கடலில் கலந்தாலும் கலக்கலாமே ஒழிய தமிழகத்திற்குத் தரக்கூடாது என எண்ணுகின்றனர்.
முல்லைப்பெரியாறு அணை உடைவதைப் போலத் திரைப்படம் எடுத்துத் தங்கள் பொய்யைப் பரப்பும் கேரள அரசியல்வாதிகள் இப்போது லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்கின்றனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு முன் பல வழக்குகளில் தன்னுடைய தீர்ப்பைச் சொல்லிச் சென்றுவிட்டார். ஆனால் அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது தொடர்பாக ஆராயவில்லை. ஐந்து நீதிபதிகள் அமர்வில் இருந்த பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ராவின் தெளிவான கருத்தைக் கூடக் கேட்கவில்லை.
நீதிபதிகள் அமர்வில் இருந்த ஒரு பெண்ணைத் தவிர மற்றவர்கள் ஆண்கள். சபரிமலைக்குப் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் பெண்களைக் கொண்ட அமர்வுதானே முடிவெடுக்க வேண்டும்? பெண்களின் பிரச்னை பெண்களுக்குத்தானே தெரியும்?
பொதுவாக அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சர் நீக்கப்பட்டாலோ அல்லது வேறு ஆட்சி அமைந்தாலோ அடுத்து வருபவர்கள் முந்தைய ஆட்சியில் இருந்த குறைகளைப் பெரிதுபடுத்துவார்கள். அதைப் போல தீபக் மிஸ்ரா பதவிக் காலத்தில் அவர் செய்த தவறுகளை இப்போதுள்ள தலைமை நீதிபதி விசாரிக்க உத்தரவிடுவாரா?
இது தவிர மிக முக்கியமான ஒரு பிரச்னை அனைத்திலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று விரும்பிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியம் முறையில் என்ன வெளிப்படைத் தன்மை இருக்கிறது என நம்புகிறார்?
பொதுவாக தீர்ப்புகள் அனைத்துமே விவாதத்துக்கு உள்பட்டதுதான். பெரும்பான்மையான மக்களின் மத நம்பிக்கையில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது. நீதிபதிகளின் தீர்ப்பு விமர்சனத்துக்கு உள்பட்டவைதான். அடுத்து வரும் நீதிபதிகள்தான் இதைச் சரி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com