எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும் அறிவின் பதிவுகள்; ஒலிகள்,கோடுகளாக உருமாறிக்கிடக்கும் அறிவுப் புதையல்கள். அவற்றைப்

எண்ணும் எழுத்தும் அறிவின் பதிவுகள்; ஒலிகள்,கோடுகளாக உருமாறிக்கிடக்கும் அறிவுப் புதையல்கள். அவற்றைப் பயன்படுத்த வழிவழி வரும் கடவுச் சொற்களின் இருப்பிடம் கண்கள். கடவுச் சொற்களைக் கண்களுக்குக் காட்டுபவர்கள்ஆசிரியர்களே. அறிவின் வாயில் கண் மட்டும் என்றால் மாதா, பிதா, குரு, தெய்வம் எப்படி? பெற்றதால் மட்டும் ஒருவருக்கு அன்னையும் தந்தையும் வணக்கத்திற்கு உரியவர்களாக ஆவதில்லை. அறிவு தருகிற குருவாகிற போதுதான் அவர்கள் கும்பிடுவதற்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
உலகம் முழுவதும் கல்விக்கென்று தனிக்கடவுள்கள் இருக்கிறார்கள். கிரேக்கர்களின்அப்பலோ, இசை, கவிதை, மருத்துவத்துக்கானகடவுள். எகிப்தின் நைல்நதிப் பள்ளத்தாக்கு மக்களுக்கு நீத், சீன மக்களுக்கு வான் சென்வாங், ரோம் மக்களுக்கு எஜீரியா, மெசபடோமிய மக்களுக்கு அல்குட் பாய், ஆர்மேனிய மக்களுக்குக் கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் திர், கரீபியன் மக்களுக்குப் பேச்சு வர பாப்பா லெக்பா என்று தொன்மையான சமுதாயங்கள் எல்லாவற்றிலும் கல்விக்கும் கலைகளுக்கும் தனியாகக் கடவுள்கள் இருக்கிறார்கள்.
ஆப்பிரிக்க மக்களின் அனான்சி எனும் சிலந்தி மனிதன் கதை குறிப்பிடத்தக்கது. அவனுக்குக் கதைகளற்ற உலகில் வாழப் பிடிக்கவில்லை. அதனால் கதைப் புதையலை வைத்திருக்கும் நியாம் எனும் வானுலத் தேவதையிடம் போய்க் கேட்டிருக்கிறான். தேவதை கதைக்குக் கேட்ட விலையையத் தர அவன் மேற்கொண்ட போராட்டங்கள் உலகம் முழுதும் சிறுவர்களின் கதைகளாக இப்போதும் வலம் வருகின்றன. அந்த அனான்சிதான்அவர்களின் கல்விக் கடவுளாகவும் இருக்கிறார்.
இந்திய மக்களுக்குக் கல்விக்கென்று கலைமகள், கணேசர், பிருகஸ்பதி, சுக்கிரன், தட்சிணாமூர்த்தி, ஹயகிரீவர், பிரம்மா, காயத்ரி, சாவித்ரி என்று பல கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனாலும் கலைமகளையே (சரஸ்வதி) கல்விக்கும் கலைக்குமான கடவுளாகக் கலை இலக்கியங்கள் கொண்டாடுகின்றன.
சரஸ்வதி பற்றி ரிக் வேதத்தில் குறிப்பிடப் பெற்றிருக்கிறது. சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் ஓடும் நதி என்று சொல்கிறார்கள். ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் ஒட்டக் கூத்தர் பிறந்த ஊராகக் கருதப்பெறும் கூத்தனூரில் சரஸ்வதிக்குக் கோயில் இருக்கிறது. வெண்ணிற ஆடையில் வெண் தாமரை மீது இடது கையில் புத்தகத்தோடு கலைமகள் இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரபுரத்தில் ஒரு கோயில்இருக்கிறது. இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வழிபட்ட கோயில்.
ஆனால், தொல்காப்பியம் அறிவையும் உயிரையும் இணைக்கிறது. உயிருக்கு அளவுகோல் அறிவு. ஓரறிவு உயிர் முதலாக ஆறறிவு உயிர் ஈறாக உயிர்களை அறிவின் அடிப்படையில் ஆறு வகையாகப் பகுத்துச் சொல்கிறது. அறிவுடையது மட்டுமே உயிருடையதாகும் என்று வரையறை செய்கிறது.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உயிரை வளர்ப்பது என்பது அறிவை வளர்ப்பது. உயிரை வளர்க்க முடியும் என்பதோடு அதற்கான உபாயத்தையும் சொல்கிறார் அவர். 
உடம்பை வளர்ப்பது உயிர் வளர்ப்பதாகுமா? ஆம், அறிவு வளர உடம்பு வேண்டும்; அறிவு வளர வளர உயிர் வளரும். அறிவை எப்படி வளர்ப்பது?
அறிவு வளர்வதற்கான வாயில்கள் ஆறு என்பார் தொல்காப்பியர். மெய், வாய், , மூக்கு, கண், காது மனம் எனும் ஆறு. அவற்றுள் மெய், வாய், மூக்கு, கண், காது, போல மனதுக்குக் கண்ணுக்குத் தெரியும் வாயில் இல்லை. மற்ற ஐந்துமே மனதுக்கு வாயில்களாக இருக்கின்றன. 
அறிவின் வாயில்கள் இவை என்றால், அன்னையும் தந்தையும் குருவுடன் சேர்வது எப்படி?
அறிவின் வாயில்களில், பிறக்கும் போதே உடன் இருப்பவை மெய், வாய், மூக்கு, கண், காது ஆகிய ஐந்து வாயில்கள். பெற்றோர்தாம் இவற்றைக் கட்டமைக்கிறார்கள். அறிவைப் பெறுவதற்கான ஐம்பொறிகளைத் தருகிறவர்கள் பெற்றோர் என்பதால் அவர்களும் நமக்குக் குரு ஆகிறார்கள். பின்னர் இந்த ஐந்து வாயில்களால் கட்டமைக்கப்படுகிறது மனம். மனம் வளர்வதிலும் மனதை வளர்ப்பதிலும் பெற்றோரும் உறவினர்களும் ஆசிரியர்களும் மட்டுமின்றி, சமுதாயமும் இயற்கையும்கூடப் பங்களிக்கின்றன. அப்படியென்றால், வணக்கத்திற்குரிய பட்டியல் நீண்டுகொண்டே போகும். 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலைமகள் கல்லூரி என்ற பெயரில் ஒரு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. வழக்கமாகக் கல்லூரிகள் வளர்ந்து பல்கலைக் கழகமாக மாறும். ஆனால், அங்கு கல்லூரியாகத் தொடங்கியது இப்போது உயர்நிலைப்பள்ளியாக இருக்கிறது. ஆனாலும் இப்போதும் கல்லூரி எனும் பெயரைக் கைவிடவில்லை. 
அந்த வளாகத்தில் கலைமகளுக்கென்று ஒரு கோயில் இருக்கிறது. வெள்ளை நிறப் பளிங்குக் கல்லில் கலைமகள். நான்கு கைகளுடன் இருக்கும் கலைமகளின் காலடியில் தாமரையும் அருகில் அன்னப் பறவையும்இருக்கின்றன. இடது கையில் புத்தகமும் இரண்டு கைகளில் வீணையும் ஒரு கையில் உருத்திராட்சமுமாக இருக்கும் கலைமகள் திருக்கோயிலை தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் 1.6.1939 அன்று திறந்து வைத்திருக்கிறார். அங்கே, கலைமகளார் திருவுருவம். இஃது இவ்வூர் திரு. அ.மெ. நாச்சம்மை ஆச்சி அவர்கள் தருமம், 1939 என்ற கல்வெட்டும் இருக்கிறது. அ. மெய்யப்பச் செட்டியார் கல்லூரியின் நிறுவனராக இருந்த போதும், பெண்கள் கல்லூரி என்பதால் கலைமகள் திருவுருவத்திற்குப் பெண்ணே நன்கொடையாளராக இருக்கட்டும் என்று நினைத்திருக்கிறார். 
இப்போது அது உயர்நிலைப் பள்ளியாக இருக்கிறது. பாண்டித்துரைத் தேவர், ஆறுமுக நாவலர், இராசா ராம்மோகன் ராய், பச்சையப்ப முதலியார், இரவீந்திரநாத் தாகூர் போன்ற ஆளுமைகளின் படங்கள் பெரிய சுவர்களை அலங்கரிக்கின்றன. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்கள், தமிழ் உணர்வாளர்கள் பலரும் இங்கே வந்திருக்கிறார்கள். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், அப்பள்ளி நிருவாகத்தினருக்கு எழுதிய கடிதத்தில், ஓர் ஓரங்க நாடகம் நடத்தினதையும் தங்கள் மாணவியர் காட்டிய அன்பும் நடந்து கொண்ட பண்பும் பற்றி சொல்லிச் சொல்லி எனது துணைவி மகிழ்ந்து கொண்டே இருக்கிறாள். எதிர்பாராமல் இச்சந்தர்ப்பம் கிடைத்து அதன்மூலம் பண்பும் அன்பும் மிகுந்த நண்பர்களை அடையப் பெற்றதில் மதுரத்திற்கு மிகப் பெருமையாக இருக்கிறது- இப்படியாக நீளுகிறது அந்தக் கடிதம். பெண்கள் கல்லூரி விழாவுக்கு மதுரத்தை அழைத்திருக்கிறார்கள். விழா முடிந்து வந்தபின் கலைவாணர் கைப்பட எழுதியிருக்கிறார். 
வெ. சாமிநாத சர்மா, நெ.து. சுந்தர வடிவேலு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், சி. சுப்பிரமணியம், வீணை சாம்பசிவையர், அரியக்குடி ராமாநுஜ ஐயங்கார், மு.கதிரேசஞ் செட்டியார், ராய. சொக்கலிங்கம், பள்ளியக்ரஹாரம் நீ. கந்தசாமி என்று பலரும் எழுதியிருக்கும் விருந்தினர் பார்வைக் குறிப்புகளை இப்போதும் பாதுகாத்து வருகிறார்கள். எழுத்தாளர் சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) 23.4.1958 -இல் தொடர்பு கலையாத தமிழ்ப் பண்பையும் சங்க கால வாழ்க்கையின் பிரதின்பலிப்பையும் கண்கூடாகக் காண வேண்டுமானால் கலைமகள் கல்லூரிக்குத்தான் வரவேண்டும். என்மட்டில் பல நாள் தவம் கிடந்து பெற்ற வாய்ப்புதான் நான் இங்கு வந்தது. வந்தேன் பார்த்தேன் கற்றேன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது என்று எழுதியிருக்கிறார். 8.11.1936 -இல், திரு.வி. கலியாணசுந்தரன் என்று திரு.வி.க. கையொப்பமிட்டுள்ள குறிப்பில், தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் வழங்கும் ஆற்றல் இக்கல்லூரிக்கு வாய்த்திருக்கிறது என்றுள்ளது.
செட்டிநாட்டு ஆண்கள் திரவியம் தேட திரைகடல் ஓடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் வீட்டுப் பெண்கள் கல்வி பெற, விடுதியுடன் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது. கலைச்செல்வி என்றும் கலைமணி என்றும் இளங்கலைப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலை வகுப்பில் சேர இவை அடிப்படைத் தகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வணிகத்தின் காரணமாக இலங்கை சென்றிருந்தபோது, அங்குப் பார்த்துவிட்டு வந்து இங்கே தொடங்கியிருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு வீடு, மருத்துவமனை, பாலுக்கு மாடு வளர்க்க இடம் என்று இப்போது பார்த்தாலும் அவர்களின் நிர்வாகத் திறன் வியப்பளிக்கிறது.
பாரி வாழ்ந்த பறம்பு மலைப்பகுதி என்பதால் அங்குத் தொடங்கப்பட்ட நூலகத்திற்கு வேள்பாரி நூல்நிலையம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அங்குள்ள கல்வெட்டில், இஃது இராமச்சந்திரபுரம் அன்பு நிலையத்தார் தருமம் என்று உள்ளது.  3.11.1947-இல் இந்த நூலகத்துக்கு அடிகோலியவர் சென்னை திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் என்றும் 5.9.1948-இல் நூல்நிலையக் கட்டடத் திறப்பாளர் சென்னை அரசாங்கக் கல்வி மந்திரி திரு தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் பி.ஏ., பி.எல். என்றும் வேறு இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.
இந்த நூல்நிலைய நுழைவிடத்தில் இடது பக்கத்தின் சுவரில்,
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருள்மொழி நீங்கண்மின் 
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும் 
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழியுமின் 
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேயத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்
என்ற இளங்கோவடிகளின் பாடல் வரிகள், கலைமகளின்அறிவுக் கோயிலில் வாழ்வியல் விழுமியங்களை வலியுறுத்தும் கல்வெட்டாக இடம் பெற்றுள்ளன.
கட்டுரையாளர்:
மேளாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.


முனைவர் ம. இராசேந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com