தனிமனித சமுதாயப் பொறுப்பு

பெரிய நிறுவனங்கள் பலவும் தங்கள் செலவில் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது, கிராமங்களைத் தத்தெடுத்து அவற்றை மேம்படுத்துவது, சாலையோரப் பூங்காக்களை

பெரிய நிறுவனங்கள் பலவும் தங்கள் செலவில் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது, கிராமங்களைத் தத்தெடுத்து அவற்றை மேம்படுத்துவது, சாலையோரப் பூங்காக்களை ஏற்படுத்திப் பராமரிப்பது, மருத்துவமனைகள் ஏற்படுத்துவது, நோயாளிகளுக்கு மருத்துவ நிதியுதவி செய்வது போன்றவற்றில் ஈடுபடுகின்றன.
 இத்தகைய நற்பணிகள் ஏதோ ஓர் இரவில் தொடங்கியவை அல்ல. சில நூற்றாண்டுகள் பின்னணி கொண்டவை. தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில், இங்கிலாந்தில், வேலை நேரத்துக்கான கால வரம்பு, வேலைக்கேற்ற ஊதியம், தொழிலாளர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு, அடிப்படை வசதிகள் என எதுவும் நிர்ணயிக்கப்படாமலிருந்தது. தொழில் நிறுவனங்கள், குறைந்த காலத்தில் பெரும் லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு இயங்கிய காலமது.
 தொழிலாளர்களின் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் இவை குறித்த சட்டங்கள், கட்டுப்பாடுகள் ஆகியன இயற்றப் பட்டன. அதற்கு அடுத்த கட்டமாக, உற்பத்தி உயர்வு குறித்த புதிய சிந்தனை தோன்றியது. தொழிலாளர்களின் நலனை அக்கறையுடன் பாதுகாத்தால், அவர்களின் உழைப்பு, சேவை ஆகியவற்றை அவர்களிடமிருந்து பெறமுடியும் என்பது நிர்வாகங்களால் உணரப்பட்டது.
 அதனைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் நிர்வாகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கப்பட்டனர்.
 இதன் நீட்சியாக, நிறுவனங்கள், தங்களது வளாகச் சுற்றுச் சுவரைத் தாண்டியும் பார்வையைச் செலுத்தின. நிறுவனங்கள், கச்சாப் பொருள்கள் , மனித உழைப்பு ஆகியவற்றைச் சமுதாயத்திடம் இருந்து பெற்று, பின்னர் சமுதாயத்திடமே தனது உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்கின்றது.
 நிறுவனங்களின் மேலான செயல்பாட்டுக்கு, அதன் ஊழியர்கள் மட்டுமன்றி, அவை அமைந்திருக்கும் பகுதியினர், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மேம்பாடு, வாடிக்கையாளர்கள், எனப் பல தரப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய அவசியத்தை நிர்வாகங்கள் புரிந்து கொள்ளத் தொடங்கின.
 இந்த மாற்றம் நிகழ, தொழிற்புரட்சிக்குப் பின் சுமார் இரு நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. இம்மாற்றத்தின் விளைவாக, சிறிய நிறுவனங்கள், தங்களது லாப நோக்கத்தினையும் தாண்டி, தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்துக்குப் பலனளிக்கும் வகையில் உதவி செய்யத் தொடங்கின.
 பெரிய நிறுவனங்கள், தங்கள் பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி வசதி, மருத்துவ மற்றும் சுகாதார வசதி, பொழுபோக்கு போன்ற விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கின . இது குறித்த பார்வை, வளர்ச்சி அடைந்த நாடுகளில் மட்டுமன்றி, உலக நாடுகள் சபையிலும் முக்கியத்துவம் பெற்றது. அதன் விளைவாகவும், இன்னொரு புறம் நம் நாட்டின் தொழில் வளர்ச்சி பெருகுவதாலும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முன்வரும்போது, நிறுவனங்களின் "சமுதாயப் பொறுப்பு' குறித்த விழிப்புணர்வு நம் நாட்டிலும் எல்லாத் தரப்பினரிடமும் பெருகத் தொடங்கியது.
 இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர், அனைத்து நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறைந்தது இரண்டு சதவீதத்தினை, ஏழ்மை அகற்றம், பாலின அடிப்படையிலான வேறுபாடுகளைக் களைதல், கல்வி வளர்ச்சி, பசிப்பிணியை அகற்றுதல், கல்வி-மருத்துவ-சுகாதார மேம்பாடு உள்ளிட்ட சமுதாய வளர்ச்சிக்கென செலவிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.
 பெரு நிறுவனங்களும் இத்தகையப் பணிகள், சமுதாயத்தில் நிரந்தரமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையோடு தங்களது திட்டங்களை வடிவமைத்து, அவற்றின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கின்றன. அது மட்டுமல்ல, அவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றங்களும் செய்து வருகின்றன.
 எனவே, நிறுவனங்களின் முழுமுதல் நோக்கமாக லாபம் ஈட்டுவது இருப்பினும், சமுதாயத்துடன் இயைந்து செயல்பட வேண்டிய நிலையையும் உணர்ந்து, தமது சமுதாயப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. பெரு நிறுவனங்களுக்குப் பொருந்தும் இந்தக் கோட்பாடுகள் தனி மனிதனுக்கும் முழுமையாகப் பொருந்தக் கூடியதே.
 ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வசதிகளை சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிடமிருந்து பெறுகின்றான். எனவே, பிடித்தோ, பிடிக்காமலோ சமுதாயத்தின் சில நியதிகளுக்கு உட்பட்டு வாழ வேண்டிய நிலை எந்த ஒரு தனிமனிதனுக்கும் உள்ளது. அது மட்டுமல்ல, அவனது வாழ்க்கை மேலும் சிறக்கவும், சீராகச் செல்லவும், இந்த சமுதாயத்திடமிருந்து தான் அடைந்ததில் ஒரு பகுதியையேனும் அச்சமுதாயத்துக்குத் திருப்பித் தர வேண்டிய கடமையும் அவனுக்கு உள்ளது.
 ஆனால், நிறுவனங்களைப் போல, சட்டத்தின் மூலம் தனி மனிதனை இத்தகைய சமுதாயப் பொறுப்புணர்வுக்குக் கட்டாயப்படுத்த முடியாது; கண்காணிக்கவும் முடியாது. கல்வியின் மூலமும், தார்மிக புரிதல் மூலமும் இவை ஒவ்வொருவராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் .
 சமுதாயப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாக, தனி மனிதன், எந்த வகையில் தனது பங்களிப்பைத் தரலாம்? ஒன்று, தனது சொல், செயல் ஆகியனவற்றின் மூலம் பிறருக்குத் துன்பம் தராதிருப்பது. இரண்டு, தனது உழைப்பின் மூலம் ஈட்டிய பொருளில் ஒரு சின்னஞ்சிறு பகுதியையேனும் சமுதாயத்துக்குப் பயனளிக்கும் வகையில் கொடுப்பது.
 தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல், மிகமிகக் குறைந்த அளவிலேனும், எளியோர், ஆதரவற்ற முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மாலான சிறுசிறு உதவிகளைச் செய்வது கூட , சமுதாயப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாக அமையும்.
 இவை நாம் ஒவ்வொருவரும் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடியவை; கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com