சிறியதொரு ஒளிக்கீற்று!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் சாத்தே என்ற விவசாயியின் கதை இது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் சாத்தே என்ற விவசாயியின் கதை இது. தம்முடைய விளைநிலத்தில் வெங்காயம் பயிர்செய்து வந்தார் அந்த விவசாயி. அமோக விளைச்சல். சுமார் எழுநூற்றைம்பது கிலோ வெங்காயம் விளைந்ததை எண்ணி அகமகிழ்ந்தார். 
ஆனால்  நாசிக் மாவட்டம்  முழுவதுமே அபரிமிதமாக வெங்காயம் விளைந்துவிட்டதால் மொத்த வியாபாரிகள் தங்களின் வியாபாரத் தந்திரத்தை அரங்கேற்றத் தொடங்கினர். சஞ்சய் சாத்தேவின் வெங்காயத்தைக் கிலோ ஒரு ரூபாய்க்குத் தரச்சொன்னார்கள். கெஞ்சிக் கூத்தாடி, கிலோ ஒரு ரூபாய் நாற்பது பைசா என்ற கணக்கில் எழுநூற்றைம்பது கிலோ வெங்காயத்தை விற்ற சஞ்சய் சாத்தேவுக்குக் கிடைத்ததோ வெறும் ஆயிரத்து அறுபத்து நான்கு ரூபாய்களே. 
வெறுத்துப் போன அந்த விவசாயி அந்தத் தொகையையும் பிரதம மந்திரி நிவாரணநிதிக்கு அனுப்பிவிட்டு வெறும் கையோடு வீடு திரும்பினார். சஞ்சய் சாத்தே போன்று நம் நாடு முழுவதும் இன்னும் எத்தனை விவசாயிகளோ?
இப்படித்தான் தக்காளி விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் போது, நல்ல விலையும் கிடைக்காமல், நஷ்டத்திற்கு விற்க மனமும் இல்லாமல், கூடை கூடையாகச் சாலைகளில் கொட்டுவதுண்டு.
சூறைக்காற்றில் வாழைத் தோட்டங்கள்  பாதிக்கப்படும்போதெல்லாம்,  வாழைக்குலைகளும் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும்.    சமீபத்திய கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்த நிலையில், நெருக்கடியான இந்தத் தருணத்தில் எங்களது தேங்காய்களை மொத்த வியாபாரிகள் தயவு செய்து நியாயமான விலைக்கு வாங்கிக் கொண்டு ஆதரியுங்கள் என்று தென்னை விவசாயி ஒருவர் வேண்டுகோள் விடுத்த காணொலியும் ஊடகங்களில் உலா வந்தது. 
விவசாயம் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்னல்களை எதிர்நோக்கும் தொழிலாக மாறியுள்ளது. கடும் வறட்சி, எதிர்பாராத வெள்ளம், திடீர் சூறைக்காற்று, நிதிப்பற்றாக்குறை என்று பல்வேறு சோதனைகளைத் தாங்கிக்கொண்டுதான் இன்றைய விவசாயம் நடந்து வருகிறது. 
விவசாய நிலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்  குழாய் பதித்தல், உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்தல்,  வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்களை ஆர்ஜிதம் செய்தல் போன்ற தாக்குதல்கள் ஒருபுறம். இயற்கைப் பேரிடர்கள் வேறொருபுறம். விவசாயக் கடன்களை வசூலிக்க அடியாட்களைக் கொண்டு கெடுபிடி இன்னொருபுறம். பேராசை மிகுந்த  மொத்த வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மற்றொரு புறம். இவ்விதம் பல்வேறு இடிகளைத் தாங்கியபடிதான் விவசாயிகளின் அன்றாடப் பொழுது விடிகிறது. 
சமீபத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலை
நகரில் திரண்டனர். தங்களின் விளைபொருட்களுக்கான நியாயமான ஆதரவு விலை மற்றும் கடன் தள்ளுபடி ஆகியவற்றை வலியுறுத்தி அவர்கள் நடத்தியுள்ள பேரணி நாட்டின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. 
விவசாயிகள் எதிர்பார்க்கும் நியாயமான சலுகைகள் அவர்கள் கேட்காமலேயே செய்துதரப்பட வேண்டும். பாசன வசதி, உரக் கையிருப்பு, வங்கிக்கடன் வசதி, உழவுக்கருவிகளின் உற்பத்தி போன்றவை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படவேண்டும்.
சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும்  விவசாயப் பணியாளர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைமை இனியும் ஏற்படக் கூடாது. 
உழவுக்கும் தொழிலுக்கு வந்தனை செய்வோம்! என்று மகாகவி பாடிச்சென்றுள்ள இம்மண்ணில், விவசாயியையும், தொழிலதிபரையும் சமமாகப் பார்க்கும் பார்வை மலரவேண்டும்.  
அரசு இயந்திரம் மட்டுமே விவசாயிகளுக்குக் கைகொடுத்து முன்னேற்றிவிடக் கடமைப்பட்டுள்ளது என்ற எண்ணமும் மாற வேண்டும். கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்க் காலங்களில் நன்
கொடைகளை அள்ளித் தரும் பெருமுதலாளிகளும் பிரபலஸ்தர்களும், பேரிடர் இல்லாத காலங்களிலும் தங்கள் உதவிக் கரங்களை நீட்டி, விவசாயிகளை 
அரவணைக்க வேண்டும்.
சமீபத்தில், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்து நானூறு விவசாயிகளின் வங்கிக் கடன் தொகையான நாலரைக் கோடி ரூபாயைத் தாமே செலுத்தி கடன் தளையிலிருந்து அவர்களை மீட்டுள்ளதாக வந்திருக்கும் செய்தி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. சென்ற வருடம் இதே போன்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த முன்னூற்றைம்பது விவசாயிகளின் கடனையும் அவர் அடைத்துள்ளார்.
மேலும், நம் நாட்டில் அதிக வருமானம் கொண்ட திருக்கோயில்களில் ஒன்றான ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின்  திருக்கோயிலின் நிர்வாகமும், மகாராஷ்டிர மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தின் வறட்சியைப் போக்கும் நீர்ப்பாசனத் திட்டத்திற்காக ஐந்நூறு கோடி ரூபாயினை மாநில அரசுக்கு வட்டியில்லாக் கடனாக அளிக்க முன்வந்திருக்கிறது. இதன் மூலம் இம்மாவட்டத்திற்கு விவசாயத்திற்காகவும், 
குடிநீருக்காகவும் கோதாவரி நதிநீர் கொண்டுவரப்படும். இதுபோன்ற உதவிகள், இருண்டு கிடக்கும் நம் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை வெளிச்சம் தரும் ஒளிக்கீற்றுகளாகும். 
அமிதாப் பச்சன் மற்றும் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா திருக்கோயில் நிர்வாகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு,  நம் நாட்டிலுள்ள வசதிமிக்க தனி நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நம் விவசாயிகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைக்க முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com