இயற்கைப் பேரிடரும் ஊடகங்களும்

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களைத் தீவிரமாகத் தாக்கிய "கஜா' புயலின் பாதிப்பு பற்றியும் அதனை எதிர் கொள்ள மாநில அரசு எடுத்த


தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களைத் தீவிரமாகத் தாக்கிய "கஜா' புயலின் பாதிப்பு பற்றியும் அதனை எதிர் கொள்ள மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் பாதித்த பின் எடுக்கப்பட்ட நிவாரண மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இந்த பகுதியில் மட்டுமில்லாமல், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் எதிர்காலத்தில் பேரிடர் பாதிப்பு உருவாகும்போது, மக்களும் அரசு நிர்வாகமும், எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அதனை எப்படி சந்திக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். 

கஜா புயலை விடவும் அதிகமாக, 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 25-ஆம் தேதி வட இந்தியாவின் எல்லைப்பகுதியில் உள்ள நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அந்த நிலநடுக்கத்தில், 9,000 க்கும் மேற்பட்ட  மக்கள் இறந்து போயினர். சுமார் 22,000 மக்கள் காயமுற்றனர்.  இந்த நிலநடுக்கம் பரவி இமயமலையின் சிகரத்திலும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளதால் 21 பேர் இறந்து போயினர். உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரத்தில் கூட நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, பல நாடுகளும் உணர்ந்து கொண்டது இந்த சமயத்தில்தான் என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை, 
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.

அந்தக் கருத்துகளில், பத்திரிகையாளர்கள் நடந்து கொண்ட விதம் பற்றி வெளியான கருத்துகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். நிலநடுக்கம் பற்றி தொடர்ந்து கருத்துகளை வெளியிட்ட பத்திரிகைகள் பற்றி எழுந்த புகார்களை முதலில் கவனிப்போம். 

நிலநடுக்கம் போன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அது பல உயிர்களை பலிவாங்கும் என்பதும், தொடர்ந்து பல நாள்களோ மாதங்களோ இந்த பாதிப்பு மக்களை துன்புறுத்தும் என்பதும் நடைமுறை. இவற்றை அணுகும் மனநிலை ஊடகங்களுக்கு உருவாகி, சமூக நலனுடன் அவை நடந்து கொள்ள வேண்டுமே அல்லாமல், தங்கள் பத்திரிகை அல்லது தொலைக்காட்சிக்கு அதிகமான பார்வையாளர்கள் உருவாகி, "டிஆர்பி' எனப்படும் "ரேட்டிங்' அதிகரிக்க வேண்டும் என நினைத்து அதிர்ச்சியூட்டும் தவறான தகவல்களை பரபரப்பாக வெளியிடக்கூடாது. 

இந்திய ஊடகங்களில் பணி செய்பவர்கள் நடுநிலைமையை எப்போதும் பின்பற்ற வேண்டும். அரசின் துறைகளுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பணியை செய்யக்கூடாது. உதாரணமாக, நில நடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஊடகப் பணியாளர்கள் தாங்களாகவே சென்றுவிட முடியாது. ராணுவ வேன்களிலோ விமானத்திலோதான் அழைத்துச் செல்லப்படுவார்கள். அதனால், ஊடக நிருபர்கள் தங்கள் நடுநிலையைக் கைவிட்டு, அரசுக்கும் ராணுவத்திற்கும் சாதகமான வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது. 

இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு பல நாள்கள் ஆனாலும் திரும்பத் திரும்ப பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக எழுதுவதும், ஒரே பாதிப்பை பல ஊர்களுக்கு சென்று கருத்து சொல்லும் மக்களை மாற்றி மாற்றி பேசச் செய்வதும் ஊடகங்களில் வழக்கமாகியுள்ளது. இப்படிச் செய்வதால் பாதிக்கப்பட்ட மக்களை சுயமாக சிந்திக்க முடியாமல் செய்கின்றன ஊடகங்கள்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற தத்துவ மேதை கேமஸ், " உலகின் பல நிகழ்வுகளை சரியான முறையில் புரிந்து கொள்ள அவற்றிலிருந்து நம் கவனத்தை அகற்றிக் கொள்ள வேண்டும்' எனக் கூறியுள்ளார்.  இதை நமது ஊடகங்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை. செய்தி
களை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஊடகப் பணியாளர்கள் ஒரு  நிமிடம் கூட பேரிடர்ப் பகுதியிலிருந்து விலகுவதில்லை. 

பாதிக்கப்பட்ட இடங்களில் அதிக அளவில் ஒளிபாய்ச்சும் ஊடகங்கள், அந்த ஒளியைத் தங்கள் மீது திருப்பி, தாங்கள் செய்வது சரிதானா என அலசுவதில்லை. அதனால்தான், சமூகத்திலுள்ள பல பிரிவினர் அத்தகைய ஒளியை ஊடகங்களின் மீது பாய்ச்ச வேண்டியுள்ளது. அப்படி ஒளியை ஊடகங்களின் மீது பாய்ச்சி நாம் அவற்றின் செயல்களை ஆராயும்போது அவை செய்யும் தவறுகள் வெட்டவெளிச்சமாகின்றன.

உதாரணமாக, சமீபத்தில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பை விளக்குவதற்காக ஒரு தொலைக்காட்சி நிருபர் ஒரு கிராமத்தின் மக்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டி, அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு, பதில் கூற வைத்தார். இந்த நிகழ்வு அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம், மற்ற தொலைக்காட்சிகளுடன் போட்டி போடுவதற்கே என்பது திண்ணம். 

2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் நடந்த நில நடுக்கம் குறித்த செய்திகளைப் பெரிதுபடுத்தி வெளியிட்ட நிருபர்களைப் பார்த்து அதிர்ந்து போன வேறு சில பத்திரிகைகளின் நிருபர்கள், மற்ற சமூக ஊடகங்களில் இந்த தவறான அணுகு முறையைப் பற்றிக் கூறி உண்மை நிலையை விளக்கினர். சுட்டுரை ("டுவிட்டர்') எனப்படும் சமூக ஊடகத்தில், ஒரு வெளிநாட்டு பத்திரிகை நிருபர், "உங்கள் நாட்டின் கொடுமையான நிகழ்வை சித்திரித்துக் காட்டியதற்கு நன்றி. அத்துடன் இந்தியாவில் தான் இப்படிப்பட்ட பத்திரிகையாளர்கள் உள்ளனர் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவும் முடிந்தது' என பதிவிட்டுள்ளார்.

நேபாள நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளையும் தானே கவனித்துக்  கொள்வதாகக் கூறி, அதை செயல்படுத்த முன்வந்த பாபா ராம்தேவ் பற்றி அதிக அளவில் செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடாமல், நிலநடுக்க பாதிப்புகளையே திரும்பத் திரும்ப விளக்கியது பலராலும் அப்போது கண்டிக்கப்பட்டது. பத்திரிகை நிருபர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வலம் வந்ததால், நிவாரண மீட்புப் பணிகள் மிகவும் தாமதமானதாக அரசு ஊழியர்கள் குறைபட்டுக் கொண்டனர்.

அப்போது, பத்திரிகை நிருபர்களுக்கு யாரோ ஒருவரால் ஒரு கடிதம் எழுதப்பட்டு, அது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அதில், "நேபாளத்தின் நில நடுக்கத்தைப் பற்றி நீங்கள் அளித்த செய்திகளைப் படித்து எனது மனம் சுக்கு நூறாக உடைந்து போனது. அந்த நில நடுக்கத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை விட நான் அதிக அளவில் பாதிக்கப்பட்டேன். 

மருத்துவப் படிப்பில், நோயாளிகளின் உடல் பாதிப்பைப் பற்றி உறவினர்களுக்கு எப்படி எடுத்துக்கூற வேண்டும் என்று மாணவர்களுக்கு போதிக்கப்படும். அதைப்போலவே, பத்திரிகை நிருபர்களாகிய உங்களுக்கு சில நிகழ்வுகளை எப்படி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற பாடத்தை புகட்ட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பத்திரிகை நிருபர்கள் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களைப் போல எல்லா செய்திகளையும் சுவையூட்டும் பயங்கர செய்திகளாக வெளியிடுகின்றீர்கள். நீங்கள் மனிதாபிமானத்துடன் உங்கள் பணியை செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இதைப்போலவே, தமிழ்நாட்டின் கஜா புயல் பாதிப்புகளை விவரித்த பல தொலைக்காட்சிகளும், பெண்களை அழுது ஓலமிடச் செய்து படம் பிடித்தது வருந்தத்தக்கது. ஒரு பகுதியின் புயல் பாதிப்புகளைப் பற்றி கேட்டறியும்போது, அப்பகுதியிலுள்ள முதியவர்களைப் பேச வைத்திருக்க வேண்டும். 

அவர்கள் தாறுமாறாக பேச முற்படும்போது, ஒளிப்பதிவை நிறுத்திவிட்டு, "உங்கள் குறைகளை அமைதியாகக் கூறுங்கள்' எனக் கூறியிருக்க வேண்டும். அதை விடுத்து, மிகுந்த உத்வேகத்துடன் மக்கள் பேசுவதை, போட்டிபோட்டுக் கொண்டு  எல்லாத் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பு செய்தன.

அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலைகளை அமைச்சர்கள் செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. ஓர் அமைச்சரைச் சுற்றி அதிகாரிகள் குழு அமர்ந்திருப்பது போன்ற காட்சி ஒளிபரப்பாகிறது. 

அப்போது அந்த அமைச்சர் மைக்கை பிடித்து, "கஜா புயலில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 78 ஆயிரத்து 824 குடிசை வீடுகள், 62 ஆயிரத்து 996 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றன.  12 ஆயிரத்து 298 ஆடு, மாடுகளும் 92 ஆயிரத்து 507 பறவைகளும் இறந்துள்ளன.  மேலும் 11 லட்சத்து 32 ஆயிரத்து 686 மரங்கள் சேதமடைந்துள்ளன.  அதில், 7 லட்சத்து 27 ஆயிரத்து 399 மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. மாவட்டத்திலுள்ள 556 முகாம்களில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 19 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 மின்கம்பங்கள் விழுந்துள்ளன. அவற்றில் 16 ஆயிரத்து 525 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.  22 ஆயிரத்து 163 பேர் மின்துறை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்' என அடுக்கிக்கொண்டே செல்கிறார்.  

அமைச்சர்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து கொண்டு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கின்றனர். தங்கள் வீட்டையோ, பாதிக்கப்பட்ட எந்த இடத்தையோ எந்த அமைச்சரும் வந்து பார்க்கவில்லை என நிறைய பெண்கள் கதறி அழுகிறார்கள். அதை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற தவறுகளைத் தவிர்த்து, ஊடகங்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது நடுநிலையாளர்கள் கோரிக்கை.

கட்டுரையாளர்: ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com