ஆளுநர்-ஆட்சி-அதிகாரம்

சட்டப்பேரவையும், முதல்வர் இல்லமும்தான் மாநில அரசியலில் முக்கிய நிகழ்வுகளை நிர்ணயிக்கும் களமாக இருந்த காலம் மாறி, ஆளுநர்

சட்டப்பேரவையும், முதல்வர் இல்லமும்தான் மாநில அரசியலில் முக்கிய நிகழ்வுகளை நிர்ணயிக்கும் களமாக இருந்த காலம் மாறி, ஆளுநர் மாளிகையும் மாநில அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இருந்தாலும், ஆளுநர், அரசமைப்புச் சட்டத்துக்குள்பட்டு தனக்கு உள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித தவறும் காண முடியாது என்பது பொதுவான கருத்து.
அண்மையில், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் முடிவுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.
மத்திய அரசுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார் என்பதுதான் எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே ஜம்மு-காஷ்மீரில் ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராகப் பதவியேற்று நான்கு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் தனது அதிரடி செயல்பாடுகளால் அந்த மாநில அரசியலை மட்டுமன்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஆளுநர் சத்யபால் மாலிக்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டதே மிகவும் சுவாரஸ்யமானதுதான். அந்த மாநில வரலாற்றில் சுமார் 51 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த அரசியல்வாதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 1965-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் முதல் ஆளுநரான கரண் சிங் மட்டுமே அரசியல்வாதியாக இருந்து ஆளுநர் பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு ராணுவ உயரதிகாரியாக இருந்தவர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், கல்வியாளர்கள் மட்டுமே ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்களாக இருந்தனர்.
மாநிலத்தில் இக்கட்டான அரசியல் சூழல் உள்ள நிலையில் அரசியல் அனுபவமிக்க சத்யபால் அதனை எளிதாக சமாளிப்பார் என்ற நோக்கிலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததாக கருதப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் மட்டும், பேரவை முடக்கப்படும்போது ஆறு மாதங்களுக்கு ஆளுநருக்கு பல்வேறு கூடுதல் அதிகாரங்கள் உண்டு. பேரவைக்கு மீண்டும் உயிர் கொடுக்கவும், கலைக்கவும் முடியும். 
ஜம்மு-காஷ்மீர் மாநில அரசமைப்புச் சட்டப் பிரிவு 92-இன் படி மாநிலம் சார்ந்த அனைத்து முடிவுகளையும் ஆளுநர் எடுக்க முடியும். ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்து 6 மாதங்களுக்குப் பிறகுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் 356-இன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்த முடியும். இது அந்த மாநிலத்துக்கே உரிய தனிச்சிறப்பு. 
இந்த சூழ்நிலையில்தான் ஜம்மு-காஷ்மீரில் எதிர்பாராத திருப்பமாக, எலியும், பூனையுமாக இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி -தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. அதே நேரத்தில் இரு எம்எல்ஏக்களைக் கொண்ட சஜத் லோனே தலைமையிலான மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இதில் எந்தத் தரப்பை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கப் போகிறார் என்று அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், மாநில சட்டப் பேரவையைக் கலைப்பதாக அறிவித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரிய கட்சிகளுக்கு மட்டுமல்லாது, மத்திய அரசுக்கும் அதிர்ச்சியை அளித்தார் ஆளுநர் சத்யபால் மாலிக். 
சத்யபால் மாலிக், "இந்த முடிவால் நான் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வாய்ப்பு உண்டு. நான் மத்திய அரசின் முடிவின்படி செயல்படுபவன் என்றால் பாஜக ஆதரவு பெற்ற சஜன் லோனேவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பேன். ஆனால், நேர்மையற்றவன் என்ற பெயர் எடுக்க விரும்பவில்லை' என்று கூறினார். 
ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்பான சர்ச்சை இத்துடன் முடிந்துவிடவில்லை. ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனர் மறைந்த ஷேக் முகமது அப்துல்லாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 
மேலும், ஜம்மு-காஷ்மீர் வங்கியை பொதுத்துறை வங்கியாக நிர்வகிப்பது என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளையும் அவர் எடுத்துள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவிர கடந்த மூன்று மாதத்தில் 13 கட்டங்களாக ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலும் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது.
சத்யபால் மாலிக்கின் அரசியல் பாதையும் மிகவும் சுவாரசியமானதுதான். சோஷலிசக் கொள்கையில் பிடிப்பு கொண்ட அவர் மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டார். ராம் மனோகர் லோகியா, ராஜ் நாராயண் ஆகியோரிடம் அரசியல் கற்ற அவர், ஜேபி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார். ஜனதா தளம், லோக் தளம், சமாஜவாதி, காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளிலும் பணியாற்றியதுடன் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். 
கடந்த 2004-ஆம் ஆண்டில்தான் அவர் பாஜகவில் இணைந்தார். ஜம்மு-காஷ்மீரில் மட்டுமே ஆளுநர் ஆட்சியை (குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன்) 6 மாதங்கள் வரை அமல்படுத்த அரசமைப்புச் சட்டத்தில் இடமுள்ளது. அடுத்த சில நாள்களில் (டிசம்பர் 19) ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி முடிந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வர இருக்கிறது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் "ஆட்சி' நடத்த தனக்கு கிடைத்த வாய்ப்பை சத்யபால் மாலிக் சிறப்பாகவே பயன்படுத்திக் கொண்டார் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com