பா. இரஞ்சித் தயாரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ - சினிமா விமரிசனம்

பெயரிலேயே மறைமுகமாகத் தொக்கி நிற்கும் சாதிய அடையாளம் முதல் தேநீர்க் குவளைகள் இணைந்து நிற்கும் இறுதிக்காட்சி வரை...
பா. இரஞ்சித் தயாரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ - சினிமா விமரிசனம்

சாதிய அரசியலைப் பற்றி உரையாடும் திரைப்படங்களைப் பொதுவாக இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று, மிகையுணர்ச்சி, பிரச்சாரத் தொனி போன்றவற்றுடன் அமைந்திருக்கும் வெகுஜனத் திரைப்படங்கள். இவற்றில் சாதி பற்றி உரையாடுவது என்பது ஒரு முற்போக்குப் பாவனையே. மற்றபடி வணிக அம்சங்கள் நிறைந்திருக்கும் வழக்கமான திரைப்படங்கள்தான். இன்னொன்று, மாற்று முயற்சிகளாக உருவாகும் திரைப்படங்கள். இவற்றில் பிரசாரம்  என்பது அமுங்கிய குரலிலும் குறியீடுகளாகவும் இருக்கும். வறட்சியும் சலிப்பும் நிறைந்ததாகக் கூட இவை அமைந்திருக்கலாம். முன்னது வெகுஜனத் திரைப்பட ரசிகர்களுக்காகவும் பின்னது, கலை ரசனையுள்ள பார்வையாளர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இந்த இரண்டு வகைமைகளையும் ஒரு கச்சிதமான கலவையில் இணைத்து சுவாரசியமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். இயல்பாக நகரும் காட்சிகளுக்கு இடையே ஆதிக்கச் சாதியத்தின் மூர்க்கத்தை முகத்தில் அறைவது போல் உணர்த்தும் காட்சிகளும் உண்டு. இதைத் தாண்டி மொழி அரசியல், ஆணவக்கொலை உள்ளிட்ட பல விஷயங்களையும் இந்த திரைப்படம் பேசுகிறது.

**

புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவன் பரியன் என்கிற பரியேறும் பெருமாள். (கதிர்) தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். அற்ப காரணத்திற்காகக் காவல் நிலையத்தில் அடிவாங்கும் இவனுடைய தாத்தா, ‘நீ வக்கீல் ஆகணும்டா பேராண்டி. நம்ம ஆட்களுக்காக குரல் கொடுக்கணும்’ என்று உணர்ச்சிப்பெருக்கில் சொன்னதை உடனே வேத வாக்காக ஏற்று சட்டக்கல்லூரியில் சேர்கிறான். எளிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னையை இவனும் எதிர்கொள்ள நேர்கிறது. ஆங்கிலம் என்னும் மொழி, இரும்புக் கதவு போல அவன் முன்னால் நிற்கிறது. அந்தச் சமயத்தில் இவனுக்கு உதவ வருகிறாள் ‘ஜோ’ என்கிற ஜோதி மகாலஷ்மி (ஆனந்தி). அவள் ஆங்கிலத்தை எளிதாகப் புகட்ட மெல்ல முன்னேறுகிறான். இருவர்களுக்கும் இடையே கண்ணியமானதொரு நட்பு பெருகுகிறது. ஜோதி, வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால் சாதிய ரீதியிலான எதிர்ப்புகளையும் மூர்க்கமான எதிர்வினைகளையும் எதிர்கொள்கிறான் பரியன். அவமானத்தில் புழுங்குகிறான். ஒரு கட்டத்தில் ஆவேசம் அடையும் அவன் இவற்றை எதிர்க்கத் துணிய, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

பிறகு பரியனுக்கு என்ன ஆனது? சட்டப்படிப்பை முடித்தானா, தோழியுடனான நட்பு என்ன ஆனது போன்றவற்றையெல்லாம் இயல்பும் சுவாரசியமும் கலந்த காட்சிகளில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.

**

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், கருங்குளம் ஊராட்சியில் உள்ள புளியங்குளம் கிராமம் என்கிற துல்லியமான அடையாளத்துடன் கூடிய நிலத்தின் பின்புலத்தில், 2005-ம் ஆண்டின் பின்னணியில் படம் நகர்கிறது. படத்தின் துவக்கத்திலேயே சாதியத்தின் கொடுமையை அழுத்தமாகப் பதிவு செய்து விடுகிறார் இயக்குநர். புளியங்குளத்தின் ஆட்கள், தங்களின் வேட்டை நாய்களை ஒரு குட்டையில் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். வேறொரு சமூகத்தினர் தொலைவில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ‘எதற்கு வம்பு’ என்று பரியன் விலகுகிறான். ‘எதுக்குடா பயப்படறே?” என்று மற்றவர்கள் சொன்னாலும் அவனுடன் கிளம்புகிறார்கள். ‘இவனுங்களுக்கு திமிரைப் பார்த்தியா. சரியா கவனிக்கணும்’ என்று எதிர் தரப்பினார் உறும, ‘இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் இந்த நிலைமை?” என்று இவர்களில் ஒருவர் கேட்க, ‘நிலம்தான் அதிகாரம்’ என்கிற அடிப்படை உண்மையை எளிமையான மொழியில் விளக்குகிறார் இன்னொருவர்.

பரியன் ஆசையாக வளர்க்கும் கறுப்பி என்கிற நாயை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் தண்டவாளத்தில் கட்டிப்போட்டு எதிர்த்தரப்பு கொடூரமாக கொல்கிறது. பல காட்சிகளுக்குப் பிறகு பரியனின் மீதும் இதே வகையிலான கொலைமுயற்சி நடக்கிறது. மனிதனையும் நாயையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் ஆதிக்கச் சாதியத்தின் மூர்க்கம் இதன் மூலம் அழுத்தமாக நிறுவப்படுகிறது. மனிதனைப் போலவே நாயையும் சகலமரியாதையுடனும் துக்கத்துடனும் புதைக்கும் சடங்குகள் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பரியனாக கதிர் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். மிக அருமையான தேர்வு. ஒரு மரியாதையான இடைவெளியில் ஆனந்தியுடன் பழகும் கனிவாகட்டும், திருமண மண்டபத்தில் தாக்கப்படும்போது கூனிக்குறுகுவதாகட்டும், தனது தந்தை அவமானப்படுத்தப்படும்போது பொங்கி எழுவதாகட்டும், பல காட்சிகளில் பிரமிக்க வைத்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஒரு சரியான பிரதிநிதியாக தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

களங்கமில்லாத புன்னகையும் குழந்தைக்குரிய தோரணையும் என்று ஒரு தேவதையைப் போலவே  இந்தப் படத்தில் உலவுகிறார் ஆனந்தி. சாதியத்தின் இருள் நிறைந்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் தூய்மையின் பிரகாசம் இவர் மட்டும்தான். நட்பிலிருந்து மேலே நகர்ந்து பரியனின் மீது உருவாகியிருக்கும் காதலை மறைக்க முடியாமலும், அவனுடைய விலகலைப்  புரிந்துகொள்ள முடியாமல் மனம் உடைந்து கலங்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ திரைப்படம் முதற்கொண்டு பல திரைப்படங்களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் புரியவில்லை. தங்கள் வீட்டிலுள்ள சாதிய மூர்க்கமும் இறுக்கமும் அங்கேயே பிறந்து வளரும் பெண்களுக்கு நன்குத் தெரியும். தன்னால் விரும்பப்படுவர்களுக்கு அதனால் உயிர் ஆபத்து நிகழக்கூடும் என்பதையும் அவர்கள் உறுதியாக அறிந்திருப்பார்கள். ஆனால் அது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதது போல எவ்வாறு திரைப்பட நாயகிகள் சித்தரிக்கப்படுகிறார்கள் என்கிற விஷயம்தான் புரியவில்லை. ‘காதல் கண்ணை மறைக்கும்’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் போல.

வழக்கமான நகைச்சுவை வேடத்தைத் தாண்டி குணச்சித்திர நடிப்பையும் கலந்து இதில் தந்திருக்கிறார் யோகிபாபு. ‘பெரிய C யா. சின்ன c யா’ என்று கேட்பது முதற்கொண்டு பல காட்சிகளில் இவரின் எதிர்வினைகள் சிரிப்பை அள்ளுகின்றன. இத்திரைப்படம் மிகவும் இறுக்கமாக ஆகிவிடாமல் காப்பாற்றுவது இவரின் நகைச்சுவையே.  வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பரியனுடன் இவர் கொண்டிருக்கும் நட்பு ஒரு முன்னுதாரணம்.

ஆனந்தியின் தந்தையாக நடித்திருக்கும் மாரிமுத்து சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘உன்னோட சேர்த்து என் பொண்ணையும் கொன்னுடுவாங்கடா’ என்று இவர் கதறும் காட்சியில் ஆணவக்கொலையின் இன்னொரு பக்கம் தெரிகிறது. மகளின் மீது பாசம் இருந்தாலும் தங்களின் சமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய அச்சம் காரணமாகவே பல ஆணவக்கொலைகள் நிகழ்கின்றன என்கிற சமூகவியல் உண்மையையும் படம் பதிவு செய்கிறது.

ஒரேயொரு காட்சியில் வந்தாலும் சண்முகராஜா பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அம்பேத்கர் திரைப்படத்தை மேஜையில் வைத்திருக்கும், கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் ‘பூ’ ராமு வரும் காட்சிகள் சிறப்பானவை. ‘என்னை பன்னி மாதிரி நடத்துனானுவ.. முட்டி மோதித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கேன். இப்ப கையெடுத்து கும்புடுதானுவ…’ என்ற இவரின் வசனத்தின் மூலம் ‘கல்விதான் எளிய சமூகத்தை அதன் தளைகளிலிருந்து விடுதலை செய்யும்’ என்கிற செய்தி அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

இத்திரைப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரத்தை கராத்தே வெங்கடேசன் ஏற்றிருக்கிறார். ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் கள்ளிப்பால் ஊற்றி பெண் குழந்தைகளைக் கொல்லும் தேனி குஞ்சரம்மாள் போல ‘ஆணவக்கொலை ஸ்பெஷலிஸ்ட்’டாக பீதியைக் கிளப்பும் பாத்திரத்தில் இவர் அற்புதமாக நடித்திருக்கிறார். எளிய சமூகத்து மக்களில் சிலரைக் குறிவைத்து எவரும் அறியாமல் தந்திரமாக கொல்வதை ‘குல சாமிக்கு’ செய்யும் படையலாகவும் வாழ்நாள் லட்சியமாகவும் கொண்டிருப்பவர். இவரைப் போல கொடூரமான மனிதர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எழும்பினாலும் நடைமுறையில் இவரை விடவும் கொடூரமான சாதிய வெறி பிடித்த ஆசாமிகள் இருப்பதை ஊடகங்களின் மூலம் அறிய முடிகிறது.

இதே போல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய  இன்னொரு பாத்திரம், பரியனின் தந்தையாகவும், பெண் வேடமிட்டுக் கரகாட்டம் ஆடும் நாட்டுப்புறக் கலைஞராவும் நடித்திருக்கும் தங்கராஜ். ஆதிக்கச் சாதியுணர்வுள்ள மாணவன் செய்யும் அக்கிரமத்தால் மனம் உடைந்து கதறிக்கொண்டே அரைநிர்வாணத்துடன் இவர் சாலையில் ஓடும் காட்சி மனதைப் பிசைகிறது. ‘இது முதல் தடவையாடா நடக்குது?’ என்று பிறகு பரியனின் அம்மா சொல்லும் வசனம் இதன் மீதான அவலத்தை மேலும் கூட்டுகிறது. கல்லூரி ஆசிரியைகளாக வருபவர்கள் முதல் பல இயல்பான துணைப்பாத்திரங்கள் இத்திரைப்படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.

பரியன் என்கிற பெயரிலேயே மறைமுகமாகத் தொக்கி நிற்கும் சாதிய அடையாளம் முதல் தேநீர்க் குவளைகள் இணைந்து நிற்கும் இறுதிக்காட்சி வரை பல குறியீடுகளை எளிமையான வகையில் இயக்குநர் இணைத்துள்ளார். இரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ‘சுவர்’ ஒரு அதிகாரக் குறியீடாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்றால், இந்தத் திரைப்படத்தில் ‘இரண்டாம் பெஞ்ச்’ அந்த இடத்தைப் பெறுகிறது. எத்தனை அடிபட்டாலும் மறுபடியும் அதே இடத்தில் வந்து அமரும் பரியனின் பிடிவாதத்திற்குப் பின்னால் உள்ள அரசியல் சிறப்பானது.

சட்டக்கல்லூரிக்கு முதல் நாள் வரும் பரியன் ‘டாக்டர் ஆவணும்’ என்பதைக் கேட்டு ‘இவ்ளோ முட்டாளா இவன்?” என்பது போல் சிரிக்கிறார்கள். ‘டாக்டர் அம்பேத்கர் மாதிரி ஆவணும்” என்று பிறகு அவன் சொல்லும் விளக்கத்தைக் கேட்டு அவர்களின் சிரிப்பு உறைந்து போகிறது. பரியன் தண்டவாளத்தில் கிடத்தப்படும்போது ‘இளவரசன்’ உள்ளிட்ட பல ஆணவக்கொலைச் செய்திகள் நினைவிற்கு வந்து போகின்றன. பரியன் சாகாதவாறு கருப்பியின் ஆன்மா அவனை நாவால் தீண்டி எழுப்புவது சுவாரசியமான கற்பனை. தலித் அரசியலின் அடையாளமான ‘நீல’ நிறம் ஒரு பாடல் முழுவதும் பரவுவதும் நல்ல சித்தரிப்பு.

சாதியத்தைப் பேசும் இது போன்ற திரைப்படங்கள் பெரும்பாலும் வன்முறையில்தான் முடியும். ஒன்று, நாயகன் கொடூரமாகக் கொல்லப்படுவான் அல்லது அவன் பொங்கியெழுந்து எதிர்தரப்பைச் சேர்ந்த பத்து பதினைந்து நபர்களை வெட்டிவிட்டுச் சிறைக்குப் போவான். அவ்வாறின்றி ‘காலம் ஒரு நாள் மாறும், மாற வேண்டும்’ என்கிற நேர்மறையான செய்தியுடன் படத்தை இயக்குநர் முடித்திருப்பது மகிழ்ச்சியையும் நெகிழ்வையும் அளிக்கிறது. பல்வேறு தருணங்களில் காட்டப்படும் சுவரொட்டிகளின் மூலமாக ஒரு தனிக்கதையை சொல்கிறார் இயக்குநர்.

மேற்கத்திய சாயலுடன் கூடிய சந்தோஷ் நாராயணின் இசை இத்திரைப்படத்திற்கு பொருந்திப் போவது ஆச்சரியம். ‘கருப்பி என் கருப்பி’ என்கிற பாடல் ஏற்கெனவே ‘ஹிட்’ ஆகி விட்டது. பரியனுக்கும் கருப்பிக்குமான நட்பு அதிகம் விவரிக்கப்படாமல், படத்தின் துவக்கத்திலேயே நாயின் மரணம் நிகழ்ந்து விடுவதால் உணர்ச்சிரீதியான பிணைப்பு ஏற்படுவதில்லை. பிறகு வரும் பாடலின் பின்னணியில் ‘மாண்டேஜ்’ காட்சிகளாக இது உணர்த்தப்படுவதற்கான முயற்சிகள் நடந்தாலும் முன்பே நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் படம் வெளியாவதற்கு முன்னால் அதன் முன்னோட்டங்களில் ‘கருப்பி’யின் அடையாளம் முக்கியமானதாக இருந்தது. மேற்கத்திய இசையோடு நின்று விடாமல் நாட்டார் இசையையும் பொருத்தமாக சந்தோஷ் பயன்படுத்தியிருப்பது நன்று.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, கதையுடன் தொடர்புள்ள நிலப்பிரதேசத்தின் பின்னணியைக் கச்சிதமாகவும் இயல்பாகவும் பதிவு செய்திருக்கிறது. ஆர்கே செல்வாவின் எடிட்டிங் சிறப்பு. என்றாலும், கதிர் – ஆனந்தி இருவருக்கு இடையே நிகழும் காட்சிகள் அதிகமாக இருப்பதைக் குறைத்து படத்தின் மையத்திற்கு வலு சேர்த்திருக்கும் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.

இயக்குநர் இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ இந்த திரைப்படத்தைத் தயாரித்திருப்பதற்குப் பாராட்டும் நன்றியும். நவீனத் தமிழ் சினிமாவில் தலித் திரைப்படங்களை உருவாக்கி முன்னால் நகர்ந்து கொண்டிருக்கும் இரஞ்சித், இதர இயக்குநர்களின் மூலமாகவும் அவற்றைத் தொடர்வது  முக்கியமான முன்னெடுப்பு. பெருமுதலீட்டுத் திரைப்பட முதலாளிகள் எவரும் இது போன்ற திரைப்படங்களை தயாரிக்க முன்வர மாட்டார்கள் எனும் சூழலில் இரஞ்சித்தின் இந்த முயற்சி முக்கியமாகிறது. இவை பெருக வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com