கைமாறுகிறதா ஜெட் ஏர்வேஸ்?

கைமாறுகிறதா ஜெட் ஏர்வேஸ்?

உலகம் முழுவதும் பிரபலமான டாடா குழுமம். இக் குழுமம் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. தடம் பதிக்காத தொழில்கள் இல்லை எனலாம். 150-வது ஆண்டில் அடியெடுத்து

உலகம் முழுவதும் பிரபலமான டாடா குழுமம். இக் குழுமம் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. தடம் பதிக்காத தொழில்கள் இல்லை எனலாம். 150-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இக் குழுமம், தனது எல்லையை மேலும் பரப்பி வருகிறது என்றால் அது மிகையில்லை.
 2018ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி கணக்குப்படி, இந்த குழும நிறுவனங்களின் பங்கு மூலதன மதிப்பு சுமார் ரூ. 11 லட்சம் கோடி. எஃகு, வாகனம், மின்சார உற்பத்தி, கட்டுமானம், கடிகாரம், தங்க நகைகள், உணவுப் பொருள்கள், மென்பொருள், நட்சத்திர விடுதிகள், விமான சேவை... பல்வேறு பிரிவுகளில் தொழில்களை இக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் முதல் பயணிகள் விமான சேவையைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கி வந்தது டாடா. அது தேசியமயமாக்கப்பட்டு ஏர்இந்தியா ஆகியது. வெளிநாடுகளில் வாகன உற்பத்தி, எஃகு உற்பத்தி செய்து வருகிறது டாடா. இந்தக் குழுமத்தின் மூலம் சுமார் 7 லட்சம் பணியாளர்கள் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். பன்னாட்டு தொழில் துறையில் ஒரு முன்மாதிரி குழுமமாக விளங்குகிறது. பங்கு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. மேலும், சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் இக் குழுமம் ஈடுபட்டு வருகிறது.
 ஏற்கெனவே வாகன உற்பத்தி, விமான சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இக் குழுமம் தற்போது, தமது விமான சேவை நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் நரேஷ் கோயல் என்பவரால் துவக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் தற்போது கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. இந் நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிப்பு எதுவும் இல்லை.
 ஜெட் ஏர்வேஸின் 26 சதவிகிதப் பங்குகளையும், துணைத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவில் சில பதவிகளை வழங்கவும் கோயல் முன்வந்துள்ளார். ஆனால், டாடா குழுமமோ, ஜெட் நிறுவனப் பங்குகள், செயல்பாடுகள் முழுவதையும் கையகப்படுத்தவே விரும்புகிறது. இதுதொடர்பாக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயலும் ஒருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
 தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் 51 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு குடியரசைச் சேர்ந்த எதிஹெட் ஏர்வேஸ் நிறுவனம் 24 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. இந் நிலையில், இந் நிறுவனத்தின் 26 சதவிகிதப் பங்குகளை தன்வசம் வைத்துக் கொள்ள கோயல் விரும்புகிறார். மேலும், இதன் துணைத் தலைவராகவும் இருக்க விரும்புகிறார்.
 தொழில் துறையில் புரட்சி செய்துவரும் டாடா குழுமம் ஏற்கெனவே வான்வழிப் போக்குவரத்து சேவையை மேற்கொண்டு வருகிறது. தற்போது இதை விரிவுபடுத்த சரியான சந்தர்ப்பமாக கருதுகிறது டாடா. இக் குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்ற நிறுவனத்தின் மூலம் விமான சேவையை மேற்கொண்டு வருகிறது. மேலும், மலேசிய நிறுவனத்துடன் இணைந்து ஏர்ஏசியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது.
 இந் நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. எல்லாம் வீண் வதந்தி என டாடா குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டெக்சாûஸத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான டிபிஜி கேப்பிடல் என்ற நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்குவதாக செய்தி வெளியானதையடுத்து, அப்படி எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது அந்நிறுவனம். நெருப்பில்லாமல் புகையாது!
 - பா. ராஜா
 ஜெட் ஏர்வேஸ்: ஒரு பார்வை
 
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவமிக்க நரேஷ் கோயல் என்பவரால் துவக்கப்பட்ட நிறுவனம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. 1992 ஏப்ரல் மாதம் துவக்கப்பட்ட இந் நிறுவனம், தற்போது உள்நாட்டு, பன்னாட்டு சேவையில் 123 விமானங்களை இயக்கி வருகிறது. ஏர் பஸ், போயிங் என அனைத்து ரக விமானங்களையும் இயக்கி வருகிறது. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா என 67 வழித்தடங்களில் விமான சேவையை மேற்கொண்டு வருகிறது. 2010-ல் ரூ.12,200 கோடியாக இருந்த இந் நிறுவனத்தின் வருவாய், 2017ஆம் ஆண்டில் ரூ.23,600 கோடியாக அதிகரித்தது. 2017-18 ஆம் நிதியாண்டில் இது ரூ.25,200 கோடியாக அதிகரித்தது. இந் நிறுவனத்தின் ஊதியம் பெறுவோர் பட்டியலில் உள்ள எண்ணிக்கை சுமார் 16,000. நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக செயல்படும் இந் நிறுவனத்தில், கடந்த ஆண்டின் மொத்த பயணிகள் எண்ணிக்கையில் 17.8 சதவீதத்தினர் இந் நிறுவன விமானங்களில் பயணித்துள்ளனர்.
 நிதிப் பிரச்னையில் சிக்கியுள்ள இந் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் முதல் தமது பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் தர முடியாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 இந் நிறுவனம், தமது விமானிகள், பொறியாளர்கள், நிர்வாகப் பணியாளர்களுக்கான செப்டம்பர் மாத ஊதியத்தில் 25 சதவிகிதத்தை அக்டோபர் 25-ஆம் தேதி அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள 75% ஊதியத்தை எப்போது அளிப்போம் எனத் தெரிவிக்கவில்லை. ஆகஸ்ட் மாதமும் முழு மாத ஊதியத்தை இரு தவணையாக இந் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், தமது சொத்துகளை விற்பது தொடர்பாகவும் இந் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com