இறக்குமதி இயந்திரங்களுக்கு வரிச் சலுகை கிடைக்குமா? பின்னலாடை பிரிண்டிங் உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு

ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பின்னலாடைகளின் மதிப்பைக் கூட்டும் பிரிண்டிங் தொழில் தற்போது நலிவடையும் நிலையில் உள்ளது. இதனால் பிரிண்டிங் தொழிலுக்காக வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி இயந்திரங்களுக்கு வரிச் சலுகை கிடைக்குமா? பின்னலாடை பிரிண்டிங் உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு

ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பின்னலாடைகளின் மதிப்பைக் கூட்டும் பிரிண்டிங் தொழில் தற்போது நலிவடையும் நிலையில் உள்ளது. இதனால் பிரிண்டிங் தொழிலுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு வரிச் சலுகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திருப்பூர் பிரிண்டிங் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 சர்வதேச அளவில் பின்னலாடை உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதற்கு திருப்பூரின் பங்கு இன்றியமையாததாகும். இந்திய அளவில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் பாதி திருப்பூரில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ஜி.எஸ்.டி., டிராபேக் குறைவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பின்னலாடைத் தொழில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
 அதிலும் ஆடைகளுக்கு மதிப்புக் கூட்டும் தொழில் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாக பிரிண்டிங் பட்டறை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரையிலும் பிரிண்டிங் தொழில்நுட்ப வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் பின்தங்கியே இருந்தது. அப்போது வெளிநாட்டில் இருந்து ஆர்டர் கொடுக்கும் "பையர்'கள், பிரிண்டிங் இல்லாத ஆடைகளை வாங்கி அந்தந்த நாடுகளில் பிரிண்டிங் செய்து கொண்டிருந்தனர்.
 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருப்பூரில் நவீன இயந்திரங்கள் மற்றும் உலகத் தரத்திலான இங்க் வாங்கி உபயோகப்படுத்தத் தொடங்கினர். அதன் பிறகு அனைத்து ஆடைகளுக்கும் திருப்பூரிலேயே பிரிண்டிங் செய்து கொள்ளும் வசதியைப் பெற்றதால் இந்தத் தொழில் அபார வளர்ச்சி கண்டது.
 ஆடைகளின் மதிப்பைக் கூட்டுவது பிரிண்டிங்:
 பின்னலாடைத் தயாரிப்பில் நிட்டிங், டையிங், காம்பேக்டிங், ஸ்டிச்சிங், அயனிங், பேக்கிங் என்று பல்வேறு நிலைகள் இருந்தாலும் ஆடைகளின் மதிப்பைக் கூட்டுவது பிரிண்டிங் மட்டுமே. உதாரணமாக ஒரு பிளைன் ஆடை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டால், அந்த ஆடையில் பிரிண்டிங் சேர்க்கும் பொழுது அந்த ஆடையை ரூ.150க்கு விற்க முடியும். இதனால் ஆடை தயாரிப்பில் பிரிண்டிங் தொழில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
 இதுகுறித்து திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் டி.ஆர்.ஸ்ரீகாந்த் கூறியதாவது:
 திருப்பூரில், பிரிண்டிங் தொழிலில் இளைஞர்கள்தான் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். டெக்பா சங்கம் ஆரம்பித்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகத் தரத்துக்கு பிரிண்டிங் துறையை உயர்த்தியுள்ளோம். நவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறோம். ஆனால் இந்தத் தொழிலை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
 ஜெர்மனி, அமெரிக்கா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும், மும்பையிலும் தயாரிக்கப்பட்ட சுமார் 1,500 ஆட்டோமேட்டிக் பிரிண்டிங் இயந்திரங்கள் திருப்பூரில் உள்ளன. கோவையில் உற்பத்தி செய்யப்பட்டு கைகளால் இயக்கப்படும் இயந்திரங்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்தத் தொழிலுக்கு கல்வி ஒரு தகுதி கிடையாது. அதாவது மென்பொருள் நிறுவனத்தில் வாங்கும் மாத ஊதியத்துக்கு இணையாக இந்தத் தொழிலிலும் ஊதியம் ஈட்ட முடியும்.
 இதில், ஆபரேட்டர், கலர் மாஸ்டர், பிரிண்டர், ஹெல்பர் உள்ளனர். இவர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வாங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு திருப்பூரில் மட்டும் 10 லட்சம் பின்னலாடைகளுக்கு பிரிண்டிங் செய்யப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு சுமார் 500 கோடி. ஆனால் இந்த தொழிலுக்கு எந்தவிதமான வரிச் சலுகைகளும் அரசால் வழங்கப்படவில்லை. எனவே, ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படுவது போல் டிராபேக் வரிச் சலுகை வழங்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும்.
 ஜிஎஸ்டியால் 30 சதவீதம் கூடுதல் முதலீடு:
 ஒரு நவீன இயந்திரம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது வரி முன்பு 5 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது ஜிஎஸ்டியால் சுமார் 30 சதவீதம் கூடுதலாக முதலீடு செய்யப்படவேண்டியுள்ளது. ஆனால் அந்த 30 சதவீத முதலீட்டை மீண்டும் எடுக்க 5 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகிறது. இது சிறு, குறு தொழில் என்பதால் வரிச் சலுகை வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும். அதே வேளையில், பிரிண்டிங் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, தனி குடியிருப்பு போன்ற வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்தால் இந்தத் தொழில் மென்மேலும் வளர்ச்சியடையும் என்றார்.
 - ஆர்.தர்மலிங்கம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com