மத அரசியல்-24: பௌத்த மதம் - சித்தார்த்தர்

மத அரசியல்-24: பௌத்த மதம் - சித்தார்த்தர்

பௌத்த மதம் (Buddhism)

சித்தார்த்தரின் வாழ்க்கை

லும்பினி, நேபாளம்

இந்திய தேசம் என்றும் நாவலந்தீவு என்றும் கூறப்படுகிற பரதகண்டத்திலே, மத்திய தேசத்திலே சாக்கிய நாட்டில் கபிலவத்து என்னும் அழகான நகரம் ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் அந்த நகரத்தை ஜயசேனன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவ்வரசனுக்குச் சிம்மஹணு என்னும் மகன் பிறந்தான். சிம்ம ஹணுவுக்குச் சுத்தோதனர், சுல்லோதனர், தோதோதனர், அமிதோதனர், மிதோதனர் என்னும் ஐந்து ஆண் மக்களும், அமிதை, பிரமிதை என்னும் இரண்டு பெண் மகளிரும் பிறந்தனர். இவர்களுள் மூத்த மகனான சுத்தோதனர், தமது தந்தை காலமான பிறகு, அந்நாட்டின் அரசரானார். சுத்தோதன அரசரின் மூத்த மனைவியாரான மஹாமாயா தேவிக்கு ஒரு ஆண் மகவும், இளைய மனைவியாரான பிரஜாபதி கௌதமிக்கு ஒரு ஆண் மகவும், ஒரு பெண் மகவும் ஆக மூன்று மக்கள் பிறந்தனர். மாயா தேவிக்குப் பிறந்த மகனுக்குச் சித்தார்த்தன் என்று பெயர்சூட்டினார்கள். பிரஜாகௌதமைக்குப் பிறந்த மகனுக்கு நந்தன் என்றும், மகளுக்கு நந்தை என்றும் பெயர்சூட்டி னார்கள். இவர்களுள் சித்தார்த்த குமாரன் போதி ஞானம் அடைந்து புத்த பகவானாக விளங்கினார்.

கபிலவத்து நகரத்திலே ஆண்டுதோறும் நடைபெற்ற விழாக்களில் ஆஷாடவிழா என்பதும் ஒன்று. இந்த விழா வேனிற் காலத்திலே ஆறு நாட்கள் கொண்டாடப்படும். இவ் விழாவின் போது நகர மக்கள் ஆடை அணிகள் அணிந்து, விருந்து உண்டு, ஆடல் பாடல் வேடிக்கை வினோதங்களில் மகிழ்ந்திருப்பர். சுத்தோதன அரசரும் நறுமண நீரில் நீராடி உயர்ந்த ஆடை அணிகள் அணிந்து நறுமணம் பூசி அறுசுவையுண்டி அருந்தி அரசவையிலே அமைச்சர், சேனைத் தலைவர் முதலிய குழுவினர் சூழ அரியாசனத்தில் வீற்றிருந்து ஆஷாடவிழாக் கொண்டாடுவார்.

வழக்கம்போல ஆஷாடவிழா வந்தது. நகரமக்கள் அவ் விழாவை நன்கு கொண்டாடினர். அரண்மனையில் அரசியாராகிய மாயாதேவியாரும் இவ் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார். ஆறு நாட்கள் விழாவைக் கொண்டாடிய பிறகு ஏழாம் நாளாகிய ஆஷாட பௌர்ணமியன்று மாயாதேவியார் நறுமண நீராடி நல்லாடையணிந்து ஏழை எளியவருக்கும் ஏனையோருக்கும் உணவு உடை முதலியன வழங்கினார். பின்னர் தாமும் அறுசுவை உணவு அருந்தி அஷ்டாங்க சீலம் என்னும் நோன்பு நோற்றார். இரவானதும் படுக்கையறை சென்று கட்டிலிற் படுத்துக் கண்ணுறங்கினார். இரவு கழிந்து விடியற் காலையில் ஒரு கனவு கண்டார்.

மாயாதேவியார் கண்ட கனவு இது: இந்திரனால் நியமிக்கப் பட்ட திக்பாலர்களான திருதராட்டிரன் விரூபாக்கன், விரூளாக்ஷன், வைசிரவணன் என்னும் நான்கு தேவர்கள் வந்து மாயாதேவியார் படுத்திருந்த படுக்கையைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய், இமய மலைக்குச் சென்று அங்கிருந்த மனோசிலை என்னும் பெரிய பாறை யின் மேலே ஒரு சால மரத்தின் கீழே வைத்து ஒரு புறமாக ஒதுங்கி நின்றார்கள். அப்போது அந்தத் தேவர்களின் மனைவியரான தேவிமார் வந்து மாயாதேவியாரை அழைத்துக் கொண்டுபோய் அருகிலிருந்த அநுவதப்தம் என்னும் ஏரியில் நீராட்டினார்கள். நீராட்டிய பின்னர் உயர்தரமான ஆடை அணிகளை அணிவித்து நறுமணச் சாந்து பூசி மலர் மாலைகளைச் சூட்டினார்கள். பிறகு, அருகிலே இருந்த வெள்ளிப் பாறையின் மேல் அமைந்திருந்த பொன் மாளிகைக்குள் மாயா தேவியாரை அழைத்துக் கொண்டுபோய் அங்கிருந்த ஒரு கட்டிலில் மேற்குப்புறமாகத் தலைவைத்துப் படுக்க வைத்தனர்.

மாயாதேவியார் படுத்திருந்த போது, அருகிலிருந்த மலைகளின் மேலே மிக்க அழகுள்ள வெள்ளையானையின் இளங்கன்று ஒன்று உலாவித் திரிந்து கொண்டிருந்தது. அந்த யானைக்கன்று பொன் நிறமான பாறைகளின் மேலே நடந்து மாளிகை இருந்த வெள்ளிப் பாறைக்கு வந்தது. பாறையின் வடபுறமாக வந்து தும்பிக்கையிலே ஒரு வெண்டாமரைப் பூவை ஏந்திக்கொண்டு பிளிறிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்து மாயாதேவியார் படுத்திருந்த கட்டிலருகில் வந்தது. வந்து, கட்டிலை மூன்று முறை வலமாகச் சுற்றி, தேவியாரின் வலது பக்கமாக அவர் வயிற்றுக்குள் நுழைந்துவிட்டது.

இவ்வாறு மாயாதேவியார் விடியற்காலையில் ஒரு கனவு கண்டார். போதிசத்துவர், தாம் எழுந்தருளியிருந்த துடிதலோ கத்தை விட்டு இறங்கிவந்து மாயாதேவியாரின் திருவயிற்றில் கருவாக அமைந் தருளியதைத்தான் தேவியார், வெள்ளை யானைக்கன்று தமது வயிற்றில் நுழைந்ததாகக் கனவு கண்டார்.

இவ்வாறு கனவு கண்ட மாயாதேவியார் விழித்தெழுந்து தாம் கண்ட கனவை அரசரிடம் கூறினார். சுத்தோதன அரசர், நூல்களைக் கற்றறிந்த அந்தணர் அறுபத்து நால்வரை அழைத்து, அறுசுவை உணவு களை உண்பித்து, அரசியார் கண்ட கனவை அவர்களுக்குக் கூறி அதன் கருத்து என்னவென்று கேட்டார். கனவை ஆராய்ந்து பார்த்த அந்தணர்கள் அதன் கருத்தைத் தெரிவித்தார்கள். அரசியாருக்குக் கருப்பம் வாய்த்திருப்பதை இக் கனவு தெரிவிக்கிறது; அரசியாருக்கு ஒரு ஆண் மகவு பிறக்கும்; அந்தக் குழந்தை பெரியவனாக வளர்ந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளுமானால் பெரிய சக்கரவர்த்தியாக விளங்கும்; இல்லறத்தில் புகாமல் துறவறத்தை மேற்கொள்ளுமானால் பெறுதற்கரிய புத்த ஞானம் பெற்று புத்தராக விளங்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

மாயாதேவியாரின் திருவயிற்றிலே கருவாக அமர்ந்த போதி சத்துவர் இனிது வளர்ந்து வந்தார். தேவியாரும் யாதொரு துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியோடு இருந்தார்.

மாயாதேவியார் வயிறுவாய்த்துப் பத்துத் திங்கள் ஆயின. அப்போது அவருக்குத் தமது பெற்றோரைக் காண வேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று. தமது எண்ணத்தை அரசருக்குத் தெரிவித்தார். அரசரும் உடன்பட்டு, கபிலவத்து நகரத்திலிருந்து தேவியாரின் பெற்றோர் வசிக்கும் தேவதகா நகரம் வரையில் சாலைகளை அலங்காரம் செய்வித்தார். பிறகு, தோழியரும் ஏவல் மகளிரும் பரிவாரங்களும் அமைச்சரும் புடை சூழ்ந்து செல்ல, தேவியாரைப் பல்லக்கில் ஏற்றி அவரைத் தாயகத்திற்கு அனுப்பினார். இவ்வாறு தேவதகா நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்ற தேவியார், இடைவழியிலே இருந்த உலும்பினி வனம் என்னும் சோலையை அடைந்தார்.

அன்று வைசாகப் பௌர்ணமி நாள். உலும்பினி வனம் அழகான பூக்கள் நிறைந்து மணம் கமழ்ந்து திவ்வியமாக விளங்கிற்று. குயில் மயில் கிளி முதலிய பறவையினங்கள் மரங்களில் அமர்ந்து இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தன. அவை, கண்ணுக்கும் காதுக்கும் இனிமை பயந்தன. மலர்களில் தேனைச் சுவைத்த தேனீக்களும் தும்பிகளும் வண்டுகளும் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.

இந்த உலும்பினி வனத்திற் சென்று அவ் வனத்தின் இனிய காட்சிகளைக் காண வேண்டுமென்று மாயா தேவியார் ஆசை கொண்டார். அவர் விரும்பியபடியே அவருடன் சென்றவர் அவரை அவ் வனத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தேவியார் உலும்பினி வனத்தின் இனிய காட்சிகளையும் பூக்களின் வனப்பையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக அந்தத் தோட்டத்தின் ஓரிடத்திலே இருந்த அழகான சாலமரத்தின் அருகில் வந்தார். அந்த மரம் முழுவதும் பூங் கொத்துக்கள் நிறைந்து மலர்ந்து மணங்கமழ்ந்து நின்றது. தேவியார் மரத்தடியில் சென்று அதன் கிளையொன்றைப் பிடிக்கக் கையைத் தூக்கினார். அப் பூங்கிளை அவர் கைக்குத் தாழ்ந்து கொடுத்தது.

அச்சமயம், அவர் வயிறு வாய்த்துப் பத்துத் திங்கள் நிறைந்து கருவுயிர்க்கும் காலமாயிருந்தது. அவருக்குக் கர்மஜ வாயு சலித்தது. இதனை அறிந்த அமைச்சரும் பரிவாரங்களும், அரசியாரைச் சூழத் திரைகளை அமைத்து விலகி நின்று காவல் புரிந்தார்கள். தேவியார் சால மரத்தின் பூங்கிளையை ஒரு கையினால் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கியிருந்தார். இவ்வாறு இருக்கும்போதே அவர் வயிற்றிலிருந்து போதிசத்துவர் குழந்தையாகப் பிறந்தார். தாயும் சேயும் யாதொரு துன்பமும் இல்லாமல் சுகமே இருந்தார்கள்.

போதிசத்துவர் குழந்தையாகத் திருவவதாரம் செய்தபோது, அநாகாமிக பிரம தேவர்கள் நால்வரும் அக் குழந்தையைப் பொன் வலையிலே ஏந்தினார்கள். சதுர் மகாராஜிக தேவர்கள் நால்வரும் அவர்களிடமிருந்து அக்குழந்தையை ஏற்று அமைச்சர் இடத்தில் கொடுத்தார்கள். அப்போது குழந்தையாகிய போதிசத்துவர் தரையில் இறங்கினார். அவர் அடி வைத்த இடத்தில் தாமரை மலர்கள் தோன்றி அவர் பாதத்தைத் தாங்கின. அக்குழந்தை அப் பூக்களின்மேலே ஏழு அடி நடந்தது. “நான் உலகத்திலே பெரியவன்; உயர்ந்தவன்; முதன்மை யானவன். இதுவே என்னுடைய கடைசிப் பிறப்பு. இனி எனக்கு வேறு பிறவி இல்லை,” என்று அந்தத் தெய்வீகக் குழந்தை கூறிற்று. மாயாதேவியாருக்குக் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டவுடனே, கபிலவத்து நகரத்திலிருந்தும் தேவதகா நகரத்திலிருந்தும் சுற்றத்தார் உலும்பினி வனத்திற்கு வந்து போதிசத்து வராகிய குழந்தையையும் மாயாதேவியாரையும் கபிலவத்து நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

போதிசத்துவர் பிறந்தருளிய அதே வேளையில் யசோதரை தேவியாரும், சன்னன், காளுதாயி என்பவர்களும் தோன்றினர்; கந்தகன் என்னும் குதிரையும், போதிமரமும், நான்கு நாழி நிதிக்குவிய லும் தோன்றின.

அசிதமுனிவர் கூறியது,

சுத்தோதன அரசருடைய தகப்பனாரான சிங்கஹணு அரசருக்கு அசிதர் என்னும் பெயருள்ள புரோகிதர் ஒருவர் இருந்தார். இந்தப் புரோகிதர்தான் சுத்தோதன அரசருக்கு - அவர் சிறுவராக இருந்தபோது - வில்வித்தை முதலிய கலைகளைக் கற்பித்தார். சிங்கஹணு அரசர் காலஞ் சென்ற பிறகு அசிதர் தமது புரோகிதத் தொழிலை விட்டு, அரசருடைய ஆராமத்தோட்டத்திலே தபசு செய்துகொண்டிருந்தார். அசித முனிவர் ஐந்து விதமான அபிக்ஞைகளையும் எட்டு விதமான சமாபத்திகளையும் அடைந்தார். சில வேளைகளில் இவர் தமது சித்தியினாலே தேவ லோகத்திற்குப் போய் அங்குத் தங்கித் தபசு செய்துவிட்டு மீண்டும் தமது இடத்திற்குத் திரும்பி வருவது வழக்கம்.

போதிசத்துவர் மாயாதேவியார் திருவயிற்றிலே தங்கிக் குழந்தையாகத் திருவவதாரம் செய்திருப்பதை அசித முனிவர் அறிந்து, அக்குழந்தையைக் காண்பதற்காக அரண்மனைக்கு வந்தார். சுத்தோதன அரசர், முனிவரை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்து வணங்கி நின்றார். அப்போது அசித முனிவர், “அரசே! உமக்கு ஆண் மகன் பிறந்த செய்தி அறிந்து இவ்விடம் வந்தேன். அக்குழந்தையை நான் பார்க்க வேண்டும்.” என்று கூறினார். இதைக் கேட்ட அரசர் தாமே தமது கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு வந்து முனிவருக்குக் காட்டி, “மகனே! முனிவரை வணங்கி நற்பேறு பெறுக.” என்று கூறினார். அப்போது குழந்தையின் பாதங்கள் தற்செயலாக முனிவருடைய தலையில் பட்டன. ஏனென்றால், போதிசத்துவர்கள் புத்த நிலையை அடைகிற பிறப்பிலே பிறரை வணங்குவது மரபன்று. இதனை ஞானக் கண்ணினால் அறிந்த அசித முனிவர், உடனே ஆசனத்தை விட்டு எழுந்து நின்று குழந்தையைக் கைகூப்பி வணங்கினார். முனிவர் குழந்தையை வணங்குவதைக் கண்ட அரசன் பெரிதும் வியப்படைந்து, தாங்க முடியாத அன்போடு குழந்தையின் கால்களில் தானும் தன் தலையை வைத்து வணங்கினார்.

அசித முனிவர், குழந்தையின் திருமேனியில் காணப்பட்ட எண்பது விதமான மகா புருஷ லக்ஷணங்களைக் கண்டு, தமது ஞானக் கண்ணினால் சிந்தித்துப் பார்த்து, இந்தக் குழந்தை புத்தர் ஆகப் போவதை அறிந்து ஆனந்தங்கொண்டு மகிழ்ந்தார். பிறகு, இக்குழந்தை புத்த பதவியடையும்போது, தாம் உயிர் வாழ்ந் திருந்து பார்க்க முடியாது என்பதை உணர்ந்து வருத்தத்தோடு அழுதார். முனிவர் முதலில் மகிழ்ந்ததையும் பின்னர் அழுததையுங் கண்ட அமைச்சர்கள் அதற்குக் காரணங் கேட்டார்கள். முனிவர் இவ்வாறு விளக்கங் கூறினார்: “போதிசத்துவராகிய இந்தக் குழந்தைக்கு யாதொரு தீங்கும் வராது. இவர் புத்த பதவியை அடையப் போகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், இவர் புத்தராவதற்கு முன்பே நான் இறந்துவிடுவேன். ஆகையினால் அப்போது இவரைக் காண முடியாதே என்பதற்காக வருத்தம் அடைந்தேன்” என்று கூறினார்.

பின்னர் அசித முனிவர் அரண்மனையை விட்டுப் புறப்பட்டுச் சென்று தன் தங்கையின் வீட்டுக்குப் போய், தங்கையின் மகனான நாலக குமாரனை அழைத்து, சுத்தோதன அரசருடைய குழந்தை தனது முப்பத்தைந்தாவது வயதில் புத்த பதவியடையப் போகிறதென்பதையும் அச்சமயத்தில் தாம் உயிருடன் வாழ்ந் திருக்க முடியாது என்பதையும் கூறி, “குழந்தாய்! நீ இப்போதே இல்லறத்தை விட்டுத் துறவு பூண்டிருப்பாயாக. அவர் புத்த ஞானம் பெற்ற பிறகு அவரிடம் சென்று உபதேசம்பெற்று அதன்படி ஒழுகுவாயாக” என்று மொழிந்தார்.

அம்மானாகிய அசித முனிவர் கூறியதைக் கேட்ட நாலக குமாரன், அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு அப்போதே துறவுகொண்டார். தலை முடியையும் தாடியையும் மழித்துப் போட்டு, போதிசத்துவர் இருந்த திசை நோக்கி வணங்கி, “உலகத்திலே யார் மேலான உத்தமராக இருக்கிறாரோ அவருக்காக நான் காவியாடை தரிக்கிறேன்” என்று கூறி காவி ஆடை அணிந்து கொண்டார். பிறகு நாலகர் இமயமலைச் சாரலில் சென்று தவம் செய்து கொண்டிருந்தார்.

குழந்தைப் பருவம்

போதிசத்துவர் பிறந்த ஐந்தாம் நாள் அவருக்குப் பெயர் சூட்டு விழா நடந்தது. கல்வியில் தேர்ந்த நூற்றெட்டு நிமித்திகர்களை அரசர் அழைத்து அவர்களுக்கு அறுசுவை உணவுகளை விருந்தளித்தார். பிறகு, “என் மகனுடைய லட்சணங்களை அறிந்து அவனுக்கு ஏற்ற பெயரைச் சூட்டுங்கள். அன்றியும், அவன் வாழ்க்கையில் நடைபெறப் போகிறவைகளையும் பிழையில்லாமல் கணித்துக் கூறுங்கள்” என்று கேட்டார். இந்த நூற்றெட்டு நிமித்திகர்களில் ராமர், தஜர், இலக்குமணர், மந்திரி, கொண்டஞ்ஞர், போஜர், சுயாமர், சுதத்தர் என்னும் எண்மரும் மிகத் தேர்ந்த நிமித்திகர்கள். இவர்களுள்ளும் கொண்டஞ்ஞர், வயதில் இளையவராக இருந்தாலும், கணித நூலிலே மற்றவரை விட மிகத் தேர்ந்தவராக இருந்தார்.

அரசர் கேட்டுக்கொண்டபடியே பேர்போன இந்த எட்டு நிமித்திகர்களும் போதிசத்துவ குமாரனுடைய திருமேனியிலே காணப் பட்ட அங்க அடையாளங்களைக் கூர்ந்து நோக்கினார்கள். இவர்களில் ஏழுபேர் தமது இரண்டு கைவிரல்களைக் காட்டி, இந்தக் குமாரன் இல்லறத்தில் இருந்தால் சக்கரவர்த்தி ஆவார்; துறவு பூண்டால் புத்தர் ஆவார் என்று இரண்டுவிதக் கருத்தைக் கூறினார்கள்.

ஆனால், ஆண்டில் இளையவராகிய கொண்டஞ்ஞர், குழந்தையின் நெற்றியின் நடுவிலே வலமாகச் சுருண்டு வளர்ந் திருக்க ஊர்ஷ்ண உரோமத்தைக் கண்டு, ஒரு விரலை மட்டும் காட்டி “இந்தக் குழந்தை கட்டாயம் இல்லறத்தைவிட்டுத் துறவறம் பூண்டு புத்தர் ஆவார்” என்று அறுதி இட்டுக் கூறினார். மேலும், “இவர் உலகத்திற்கு அர்த்தசித்தி4 செய்யப் போகிறவர். ஆகையினாலே இவருக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டுவது தகுதியாகும்” என்றும் கூறினார்.

கொண்டஞ்ஞ முனிவர் கூறியதைக் கேட்ட சுத்தோதன அரசர், “வாழ்க்கையிலே வெறுப்பை உண்டாக்கும் காரணங் களைக் கண்டு மக்கள் துறவு கொள்வது வழக்கம். வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு துறவுபூண்டவர் வீடுபேறடைவதற்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். என்னுடைய குமாரன் எந்தெந்தக் காரணங்களினால் உலக வாழ்க்கை யில் வெறுப்படைவான் என்பதைக் கண்டு கூறவேண்டும்.” என்று கேட்டார்.

இவ்வாறு அரசர் கூறியதைக் கேட்ட நிமித்திகர் மேலும் ஆராய்ந்து பார்த்து இவ்வாறு சொன்னார்: “வயது முதிர்ந்த கிழவர், நோயாளி, பிணம், துறவி ஆகிய இந் நான்குபேரைக் காண்பாரானால் உமது குமாரன் உலக வாழ்க்கையை வெறுத்துத் துறவு கொள்வார்.”

இவ்வாறு நிமித்திகர் சொன்னதைக் கேட்ட சுத்தோதன அரசர், தமது குமாரன் சக்கரவர்த்தியாக விளங்கவேண்டும் என்று விரும்பி, தனது மகனை இல்லறத்திலேயே நிற்கச் செய்வதற்கு வேண்டிய உபாயங்களை யெல்லாம் யோசித்தார். ‘தொண்டு’ கிழவர்களும் நோயாளிகளும் பிணங்களும் சந்நியாசிகளும் சித்தார்த்த குமாரனுடைய பார்வையில் படாதபடித் தடுக்க நான்கு திசைகளிலும் நான்கு மைல் தூரம் காவலாளி களை ஏற்படுத்தினார்.

எட்டு நிமித்திகர்களில் இளைஞரான கொண்டஞ்ஞரைத் தவிர மற்ற ஏழு நிமித்திகரும் தமது பிள்ளைகளை அழைத்து, “சுத்தோதன அரசரின் மகனான சித்தார்த்த குமாரன் புத்த பதவியை அடைவார். அப்போது நாங்கள் உயிருடன் இருப்போமோ மாட்டோமோ, தெரியாது. ஆனால், நீங்கள் அவரிடஞ் சென்று அவர் உபதேசத்தைக் கேட்டு அவருடன் துறவு கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

பின்னர் இந்த ஏழு நிமித்திகரும் காலப்போக்கில் காலஞ் சென்று விட்டார்கள். இளைஞராக இருந்த கொண்டஞ்ஞர் காலப்போக்கில் பெரியவராகிப் பிறகு கிழவராக இருந்தார். சித்தார்த்த குமாரன், துறவு பூண்டார் என்னும் செய்தியைக் கேட்டு, கொண்டஞ்ஞர், ஏழு நிமித்திகரின் குமாரர்களிடம் சென்று தாம் புத்தரிடம் உபதேசம் பெறப் போவதாகக் கூறி அவர்களையும் தம்முடன் வரும்படி அழைத்தார். அவர்களில் மூவர் இணங்கவில்லை. நால்வர் மட்டும் இசைந்து கொண்டஞ் ஞருடன் சென்றார்கள். இந்த ஐவரும் முதன் முதலில் புத்தரிடம் ஞானோபதேசம் பெற்றுப் பௌத்தரானார்கள்). சுத்தோதன அரசன், தனக்குக் குழந்தை பிறந்ததற்காக மகிழ்ந்து ஏராளமான பொன்னையும் பொருளையும் வழங்கித் தான தருமங்கள் செய்தார்.சித்தார்த்த குமாரன் பிறந்த ஏழாம் நாள் மாயா தேவியார் காலமானார். புத்தரைப் பெற்றெடுத்த தாயார் வேறு குழந்தைகளைப் பெறக் கூடாது என்பது மரபு.

மாயாதேவியார் காலஞ்சென்றபடியினாலே அவர் தங்கையாராகிய மகாபிரஜாபதி கௌதமி என்பவர் சுத்தோதன அரசருடைய பட்ட மகிஷியானார். இவர்தான் சித்தார்த்த குமாரனை வளர்த்தார். தமது அரச குலத்திலே பிறந்து, நல்ல குணங்களும் நல்ல அழகும் உடைய ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து அவளைச் செவிலித் தாயாக அமைத்துக் குழந்தையை நல்லவண்ணம் வளர்க்கும்படி அரசர் ஏற்பாடு செய்தார். சித்தார்த்த குமாரன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரண்மனையிலே வளர்ந்து வந்தார். இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன.

நாஞ்சில் விழா

அக்காலத்திலே வப்பமங்கலம் என்னும் நாஞ்சில் விழா கொண்டாடுவது வழக்கம். அவ் விழாவன்று அரசரும் அமைச்ச ரும் வயலுக்குச் சென்று ஏரினால் நிலத்தை உழுவார்கள். அந்த வழக்கப்படி ஓர் ஆண்டு வப்பமங்கல விழாவைக் கொண்டாடு வதற்காகச் சுத்தோ தன அரசர், அமைச்சரும் பரிவாரங்களும் சூழ்ந்துவர, அலங்கரிக்கப் பட்ட நகர வீதிகளின் வழியாக, இளம் பிள்ளையாகிய சித்தார்த்த குமாரனுடன் சிவிகையில் அமர்ந்து வயற்புறத்திற்குச் சென்றார். சென்று, அங்கே நாவலந் தோப்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் சித்தார்த்த குமாரனைச் செவிலித் தாயரோடு இருக்கச் செய்து, அமைச்சருடன் வய லுக்குப் போனார். வயலுக்குப்போய் அரசர் பொன் கலப்பையினாலும் அமைச்சர்கள் வெள்ளிக் கலப்பை களினாலும் நிலத்தை உழுதார்கள். நூற்றெட்டுக் கலப்பைகளினாலே நிலங்கள் உழப் பட்டன. குடிமக்கள் வெள்ளாடை அணிந்து, மலர் மாலை சூடி, வயலைச் சுற்றிலும் நின்று அரசர் ஏர் உழுவதைப் பார்த்துக் கொண் டிருந்தார்கள். சித்தார்த்த குமாரனுடைய செவிலித் தாயர்களும் இந்தக் கொண்டாட்டத்தைக் காண்பதற்காகக் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வமயம் கூடாரத்தில் தங்கியிருந்த சித்தார்த்த குமாரன், தன் அருகில் ஒருவரும் இல்லாததைக் கண்டு, பதுமாசனம் அமர்ந்து, தியானம் செய்துகொண்டிருந்தார். அதாவது அநாபான ஸ்மிருதி (மூச்சை நிறுத்தல்) செய்து முதலாவது தியானத்தில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் சென்ற பின்னர் செவிலித் தாயர் கூடாரத்திற்குள்ளே வந்தார்கள். வந்து சித்தார்த்த குமாரன் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். உடனே அரசருக்கு இச் செய்தியைத் தெரிவித்தார்கள். அரசர் விரைந்து வந்து இந்தப் புதுமையைக் கண்டு வியப்படைந்து. “மகனே, இது நான் உனக்குச் செய்கிற இரண்டாவது வணக்கம்” என்று கூறித் தமது கைகளைத் தலைக்குமேல் கூப்பி வணங்கினார்.

இளமைப் பருவம்

சித்தார்த்தனுக்கு வயது எட்டு ஆயிற்று, அவருக்குக் கல்விப் பயிற்சி செய்விக்க விரும்பிச் சுத்தோதன அரசர், அமைச்சர் களை அழைத்து ஆலோசனை செய்தார். அமைச்சர்கள் “கல்வியிற் சிறந்தவர் விசுவாமித்திரர். குமாரனுக்குக் கல்வி கற்பிக்கத் தகுந்தவர் விசுவாமித்திரரே. அவரையே ஆசிரியராக நியமிக்கவேண்டும்” என்று ஒரே கருத்தாகக் கூறினார்கள். சுத்தோதன அரசர், விசு வாமித்திரரை அழைத்துத் தன் மகனுக்குக் கல்வி கற்பிக்கும்படி ஏற்பாடு செய்தார்.

குறிப்பிட்ட ஒரு நன்னாளில் சாக்கிய குலத்துப் பெரியவர்கள் எல்லோரும் கல்விச் சாலையில் வந்து கூடினார்கள். சித்தார்த்த குமார னுடன் கல்வி பயில்வதற்காக அவருக்கு ஒத்த வயதினரான ஐந்நூறு சாக்கியச் சிறுவர்களும் வந்திருந்தார்கள். சுத்தோதன அரசர், அமைச்சர் முதலானவர்களுடன் சித்தார்த்த குமாரனை அழைத்துக்கொண்டு கல்விச் சாலைக்குவந்து, தான தருமங்களை ஏராளமாக வழங்கி அரச குமாரனை விசுவாமித்திரரிடம் ஒப்படைத்துத் தாதிமார்களையும் விட்டு விட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.

ஆசிரியராகிய விசுவாமித்திரர் சித்தார்தத குமாரனின் சிறப்பை யும் அவரிடம் காணப்பட்ட அறிவு ஒளியையும் கண்டு மகிழ்ந்து தம்மையறியாமலே அவரை வணங்கினார். பிறகு அவருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார். அப்போது சித்தார்த்த குமாரன் அவரைப் பார்த்து, “ஆசிரியரே! தாங்கள் எந்த எழுத்தைக் கற்பிக்கப் போகிறீர்கள்? தேவலோகத்து எழுத்துக்களையா, அல்லது மண்ணுலகத்து எழுத்துக்களையா? மண்ணுலகத்துச் சாத்திரங்களையா, விண்ணுலகத்துச் சாத்திரங்களையா கற்பிக்கப் போகிறீர்கள்? அவற்றை யெல்லாம் நானே அறிய வல்லேன்” என்று கூறினார். சித்தார்த்த குமாரன் தமது முற் பிறப்பிலே பாரமீ தர்மங்களைச் செய்திருந்தபடியினாலே அவருக்கு அறிவு விளக்கம் ஏற்பட்டிருந்தது.

விசுவாமித்திரர் வியப்படைந்து, மனதில் கோபங் கொள்ளாமலும் பொறாமைப்படாமலும் மகிழ்ச்சியுடன் இவ்வாறு சொன்னார்: “இவ்வற்புதக் குழந்தை எல்லாக் கல்விகளையும் கல்லாமலே கற்றிருக்கிறது. நான் உலகத்துக் கல்வி ஒன்றையே கற்றிருக்கிறேன். இக் குழந்தை தெய்வீகக் கல்வியையும் அறிந்திருக்கிறது. இவ்வாறு ஓதாமலே உணர்ந்த இக் குழந்தை என்னிடம் கல்வி கற்க வந்திருப்பது வியப்பாகும்,” என்று கூறி வியப் படைந்தார். பிறகு விசுவாமித்திரர் மற்றச் சாக்கியச் சிறுவர் ஐந்நூற்று வருக்கும் கல்வி கற்பித்துவந்தார். சித்தார்த்த குமாரன் ஓதாமலே எல்லாக் கல்வியையும் உணர்ந்து கொண்டார்.

இவ்வாறு நிகழுங் காலத்தில், அரசகுமாரர் பயில வேண்டிய படைக் கலப் பயிற்சியையும், போர் முறைகளையும் சித்தார்த்த குமாரனுக்குக் கற்பிக்கச் சுத்தோதன அரசர் எண்ணங்கொண்டார். அவர் அமைச்சர் களுடன் கலந்து, வில்வித்தையில் வல்லவர் யார் என்பதை ஆலோசித் தார். அப்போது அமைச்சர்கள் “சுப்ரபுத்தர் என்பவருடைய மகனான சாந்திதேவர் ஆயுதப் பயிற்சியில் வல்லவர். அவரே சித்தார்த்த குமாரனுக்கு ஆசிரியராக இருக்கத் தக்கவர்” என்று கூறினார்கள்.

சுத்தோதன அரசர், சாந்திதேவரை அழைத்துச் சித்தார்த்த குமாரனுக்குப் படைக்கலப் பயிற்சி கொடுக்கும்படி கேட்டார். சாந்திதேவரும் மனமகிழ்ந்து இசைந்தார். சித்தார்த்த குமாரனும் ஐந்நூறு சாக்கியக் குமாரரும் சாந்தி தேவரிடம் படைக்கலப் பயிற்சிபெற ஒப்படைக்கப்பட்டார்கள். பயிற்சி செய்வதற்குரிய பெரியதோர் தோட்டத்திலே இவர்கள் பயிற்சி செய்யத் தொடங்கினார்கள். சாந்திதேவர், சித்தார்த்த குமாரனுக்கு வில்வித்தை ஆரம்பித்து வைக்கத் தொடங்கினார். அப்போது சித்தார்த்த குமாரன் அவரைப் பார்த்து, “ஆசிரியரே! என்னைப் பொறுத்தவரையில் எனக்கு நானே வித்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். இவர்களுக்குப் பயிற்சியைக் கற்பித்துக் கொடுங்கள்” என்று வணக்கமாகக் கூறினார்.

சாந்திதேவர் மற்ற எல்லோருக்கும் வில்வித்தை, வாள் வித்தை, வேல்வித்தை, யானையேற்றம் குதிரை ஏற்றம், தேர் ஓட்டம் முதலிய போர்ச் செயலுக்குரிய எல்லா வித்தைகளையும் ஐயம் திரிபு இல்லாமல் நன்கு கற்பித்தார். இவ்வித்தைகளில் எல்லோரும் தேர்ச்சியடைந்து சிறந்து விளங்கினார்கள். சித்தார்த்த குமாரனும் இவ் வித்தைகள் எல்லாவற்றிலும் தமக்குத் தாமே கற்றுத் தேர்ந்தார்.

ரம்மிய மாளிகை

சித்தார்த்த குமாரனுக்குப் பதினாறு வயது ஆயிற்று. அவரைத் துறவு கொள்ளாதபடித் தடுத்து இல்லறத்திலேயே நிறுத்தச் சுத்தோதன அரசர் கண்ணுங் கருத்துமாக இருந்தார். அரசர் மூன்று சிறந்த மாளிகைகளை அமைத்துச் சித்தார்த்த குமாரனுக்குக் கொடுத்தார். இந்த மாளிகைகள் கார்காலம் வேனிற்காலம் கூதிர் காலம் என்னும் மூன்று காலங்களில் தங்கி வசிப்பதற்கு ஏற்றதாக அமைந்திருந்தன.

கார்காலத்தில் வசிப்பதற்காக அமைக்கப்பட்டது இரம்மிய மாளிகை என்பது. இது ஒன்பது மாடிகளைக் கொண்டிருந்தது. ஒன்பது மாடிகளுள், மேல் மாடிகள் கீழ் மாடிகளைவிட ஒன்றுக் கொன்று உயரம் குறைவாக இருந்தன. மழைக் காலத்து வாடைக் காற்று மாளிகைக்குள் புகாதபடிக் கதவுகளும் சாளரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மாளிகைச் சுவர்களில் நெருப்பு எரிவது போன்ற ஓவியங்கள் எழுதப் பட்டிருந்தன. தரையில் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. இந்த மாளிகையில் இருந்த தலையணைகளும் திண்டுகளும் போர்வைகளும் ஆடைகளும் கம்பளிகளால் ஆனவை. கார்காலத்தின் குளிர் தோன்றாதபடி அமைந்திருந்தது இந்த மாளிகை.

சுரம்மிய மாளிகை

வேனிற்காலத்தில் தங்குவதற்காக அமைக்கப்பட்டது சுரம்மியம் என்னும் பெயருடைய மாளிகை. இந்த மாளிகை ஐந்துமாடிகளைக் கொண்டிருந்தது. வேனிற் காலத்துத் தென்றல் காற்று உள்ளே வீசுவதற்குத் தக்கவாறு இந்த மாளிகையின் கதவு களும் சாளரங்களும் அமைந்திருந்தன. சுவர்களிலே செந்தாமரை, வெண்டாமரை, நீலத் தாமரை, செவ்வல்லி, வெள்ளல்லி முதலிய நீர்ப்பூக்கள் குளங்களில் மலர்ந்திருப்பது போன்ற ஓவியங்கள் அழகாக எழுதப்பட்டிருந்தன. இந்த மாளிகையிலே இருந்த தலை யணைகளும் பஞ்சணைகளும், உடுத்தும் ஆடைகளும், போர்க்கும் போர்வைகளும் மெல்லிய பருத்தித் துணியால் அமைந்திருந்தன. சாளரங்களின் அருகிலே குளிர்ந்த நீர்க்குடங்கள் வைக்கப்பட் டிருந்தன. அங்கங்கே நீர் தெளிக்கும் இயந்திரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. இவற்றின் மூலமாக விரும்பிய போதெல்லாம் மழை தூறுவதுபோலத் தண்ணீர் தெளிக்கச் செய்யலாம். இந்த மாளிகையின் கதவுகள் பகலில் மூடப்பட்டும் இரவில் திறக்கப்பட்டும் இருந்தன.

சுபதமாளிகை

சுபதமாளிகை என்னும் பெயரையுடைய மூன்றாவது மாளிகை பனிக்காலமாகிய கூதிர்க்காலத்தில் வசிப்பதற்காக அமைக்கப்பட்டது. இதில் ஏழு மாடிகள் இருந்தன. மாளிகைச் சுவர்களிலே சிலவிடங்களில் தீ எரிவது போலவும், சில இடங்களில் தாமரை அல்லி முதலிய நீர்ப் பூக்கள் மலர்ந்திருப்பது போலவும் ஓவியங்கள் கண்ணைக் கவரும்படி எழுதப்பட்டிருந்தன. இம் மாளிகையிலிருந்த ஆடைகளும் தலை யணை முதலியவைகளும் கம்பளியும் பருத்தியும் கலந்து செய்யப் பட்டிருந்தன. கதவுகளில் சில, பகலில் திறக்கப்பட்டு இரவில் மூடப் பட்டும், சில, பகலில் மூடப்பட்டு இரவில் திறக்கப்பட்டும் இருந்தன.இவ்வாறு கார்காலம் வேனிற்காலம் கூதிர்காலம் என்னும் மூன்று காலங்களையும் இன்பமாகக் கழிப்பதற்கு ஏற்றவாறு மூன்று மாளிகைகளை அரசர் அமைத்துக் கொடுத்தார்.

பணிவிடையாளர் பலரை ஏற்படுத்தினார். இனிய அறுசுவை உணவுகளை அமைத்துக் கொடுக்கவும் தூய மெல்லிய ஆடைகளை அவ்வப்போது அளிக்கவும் நறுமணச் சாந்துகளையும் மலர் மாலைகளையும் தொடுத்துக் கொடுக்கவும் ஏவலாளர்கள் பலர் நியமிக்கப் பட்டனர். இசைப்பாட்டுப் பாடும் அழகிய மகளி ரும், குழல், யாழ், முழவு முதலிய இசைக் கருவிகளை வாசிக்கும் மகளிரும், நடனம் நாட்டியம் ஆடும் மங்கையரும் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு சுத்தோதன அரசர் தமது குமாரன் இல்லற வாழ்க்கையிலேயே நிலை கொள்ளும்படியான பலவற்றையும் செய்து கொடுத்தார். மேலும், கண்ணுங்கருத்துமாகக் குமாரனைக் கவனித்து வந்தார். அசித முனிவரும் கொண்டஞ்ஞ நிமித்திகரும், சித்தார்த்த குமாரன் துறவு பூண்டு புத்தராவார் என்று கூறிய மொழிகள் சுத்தோதன அரசரின் மனத்தில் பதிந்திருந்தன. ஆகவே, தமது குமாரன் துறவு பூணாமல் இல்லறத் திலேயே இருக்கச் செய்யத் தம்மாலான முயற்சிகளையெல்லாம் செய்தார்.

சித்தார்த்தர் திருமணம்

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர். அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com