மழைக்காலத்தில்: கால்நடை பாதுகாப்பு முறைகள்

பல்வேறு நோய்த் தாக்குதல்களால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
மழைக்காலத்தில்: கால்நடை பாதுகாப்பு முறைகள்

தஞ்சாவூர்: பல்வேறு நோய்த் தாக்குதல்களால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
மழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாப்பது குறித்து தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் அ. இளமுருகன் கூறியுள்ளதாவது:
கால்நடைகளுக்கான குடிநீர் மாசுபடாமலும், அதிக குளிர்ச்சியாக இல்லாமலும் இருக்க வேண்டும். அதிக குளிர்ச்சியான நீரைப் பருகுவதால் வயிறு உபாதைகள் ஏற்படும்.
மழை மற்றும் குளிர்காலங்களில் கால்நடைகளுக்குத் தக்க எரிசக்தி நிறைந்த உணவு அளிப்பது அவசியம். தரமான ஈரம் இல்லாத உலர் தீவனம் அதாவது வைக்கோல் சிறந்த உணவாகும். உலர் தீவனம் செரிக்கும்போது அதிக வெப்பம் வெளியாவதால் கால்நடைகள் தங்கள் உடல் வெப்பநிலையைச் சரிசெய்ய ஏதுவாகிறது. 
மழைச்சாரலால் அடர்தீவனங்களின் ஈரப்பதம் அதிகரித்து, பூஞ்சை தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தீவனங்களை ஈரமில்லாத பகுதியில் வைக்க வேண்டும்.
கால்நடைகள் உள்ள கொட்டகையில் மழை நீர் புகாதவாறு அமைக்க வேண்டும். நீர் தேங்காத உயரமான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் அவசியம். நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க கொட்டிலில் கிருமிநாசினி பயன்படுத்தலாம்.
ஒரு கிலோ கிராம் வேக வைத்த சுண்ணாம்புக்கல்லை 10 லிட்டர் சுடு தண்ணீரில் இட்டு பின்பு நீர் தெளிந்தவுடன், 1 லிட்டர் அந்த சுண்ணாம்பு நீரை எடுத்து 50 கிராம் மஞ்சள் தூள் கலந்து கொட்டிலின் தரைப்பகுதியில் தெளிக்க வேண்டும்.
மழைக்காலத்தில் ஈரம் மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக கன்றுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளில் நுரையீரல் பாதிப்பு மற்றும் மூட்டு வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைக் கட்டுப்படுத்த குட்டிகள் மற்றும் கன்றுகள் படுப்பதற்கு ஈரம் இல்லாத வைக்கோல் அல்லது சாக்குப்பையைப் படுக்கையாக இடலாம்.
பனியிலோ மழையிலோ நனைந்த ஈரமான புற்களில் ஆடு மாடுகளை மேய்க்கக் கூடாது. ஈரமான புற்களை மேய்வதால் வயிறு உப்பசம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், ஈரமான புல்லின் நுனியில் குடற்புழுக்களை உண்டாக்கக்கூடிய காரணிகள் அதிகளவில் காணப்படும். எனவே, வெயில் வந்து ஈரம் புற்களிலுள்ள நீர் திவளைகள் காய்ந்த பின்னரே மேய்க்க வேண்டும்.
ஈரமான மற்றும் புதிதாக முளைத்த புற்களை மேயும் வெள்ளாடுகளுக்கு துள்ளுமாரி நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, இளம் புற்கள் உள்ள பகுதிகளில் மேய்ச்சலை தவிர்க்க வேண்டும். 
ஈரமான தரையில் நீண்ட நேரம் மேய்யும் கால்நடைகளுக்குக் குறிப்பாக வெள்ளாடு, செம்மறியாடுகளுக்குக் கால் குளம்பில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு துளசி ஒருகைப்பிடி, பூண்டு 4 பற்கள், குப்பைமேனி ஒருகைப்பிடி, மஞ்சள்தூள் 10 கிராம் ஆகியவற்றை அரைத்து 100 மில்லி லிட்டர் நல்லெண்ணையில் வதக்கி, குளிர்ந்தவுடன் குளம்பில் தடவ வேண்டும். (உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்பைக் கழுவி, ஈரத்தை துடைத்து பின்னர் மருந்தைத் தடவ வேண்டும்.)
மழைக்காலத்தில் ஈ மற்றும் கொசுத் தொல்லைகளிலிருந்து விடுபட அந்தி சாயும் வேளையிலும், பொழுதுவிடியும் வேளையிலும் மூட்டம் போடலாம். இதற்கு பச்சை மற்றும் பழுத்த வேப்பிலை, நொச்சியிலை, தும்பையிலை ஆகியவற்றை கொண்டு மூட்டம் போடுவதால், நல்ல பலன் கிடைக்கும். நன்கு இருட்டிய பின்பு மூட்டம் போடுவதால் பலன் கிட்டாது.
கோழிகளைப் பொருத்தவரையில் மழைக்காலத்தில் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கம் அதிகம் காணப்படும். இதற்கு தடுப்பூசிகள் உள்ளன. சின்ன சீரகம்10 கிராம், கீழாநெல்லி 2 கைப்பிடி ஆகிய இரண்டையும் அரைத்து வாய்வழியாக அளிப்பதன் மூலமும் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com